என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை.
    • ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் இன்று சென்னை, தேனாம்பேட்டை, டி.யு.சி.எஸ். காமதேனு கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் மூலம் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள பொங்கல் தொகுப்பு விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையை ஏழை, எளிய, நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடி மகிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவரது அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை நடைபெறுகிறது.

    இந்த மளிகைப் பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு. இனிப்பு பொங்கல் தொகுப்பு, கூட்டுறவு சிறப்பு பொங்கல் தொகுப்பு, பெரும் பொங்கல் தொகுப்பு என மூன்று வகையாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    பச்சரிசி 500 கிராம், பாகுவெல்லம் 500 கிராம், ஏலக்காய் 5 கிராம், முந்திரி 50கிராம், ஆவின் நெய்-50 கிராம், பாசிபருப்பு 100 கிராம், உலர் திராட்சை-50 கிராம் என 7 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, சிறிய பையுடன் ரூ.199 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மஞ்சள் தூள்-50 கிராம், சர்க்கரை-500 கிராம், துவரம் பருப்பு-250 கிராம், கடலைப் பருப்பு-100 கிராம், பாசிப் பருப்பு-100 கிராம். உளுத்தம் பருப்பு-250 கிராம், கூட்டுறவு உப்பு-1கிலோ, நீட்டு மிளகாய்-250 கிராம். தனியா-250கிராம், புளி-250 கிராம்.

    பொட்டுக்கடலை-200கிராம், மிளகாய் தூள்-50 கிராம், செக்கு கடலை எண்ணெய் ½ லிட்டர், கடுகு-100 கிராம், சீரகம்-50 கிராம், மிளகு-25 கிராம், வெந்தயம்-100 கிராம், சோம்பு-50 கிராம், பெருங்காயம்-25 கிராம் என 19 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, மளிகை பையுடன் ரூ.499 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    மஞ்சள் தூள்-50கிராம், சர்க்கரை-500கிராம், கூட்டுறவு உப்பு-1கிலோ, துவரம் பருப்பு-250கிராம், உளுத்தம் பருப்பு-250கிராம், கடலைப் பருப்பு-200கிராம், பச்சைப் பட்டாணி-100கிராம், பாசிப் பருப்பு (சிறுபருப்பு)-250கிராம், வெள்ளை சுண்டல்-200கிராம், வேர்க்கடலை-200கிராம், பொட்டுக்கடலை-200கிராம், வரமிளகாய்-250கிராம், புளி-200கிராம், தனியா-250கிராம், கடுகு-100கிராம், மிளகு-50கிராம், சீரகம்-50கிராம், வெந்தயம்-100கிராம். சோம்பு-50கிராம், ஏலக்காய்-5கிராம், செக்கு கடலை எண்ணெய்-½லிட்டர், வரகு-500கிராம், சாமை-500கிராம். திணை-500கிராம். ரவை-500கிராம், அவல்-250கிராம், ராகிமாவு-500கிராம்.

    கோதுமை மாவு-500கிராம், ஜவ்வரிசி-200கிராம், வறுத்த சேமியா-170கிராம், மல்லி தூள்-50கிராம், சாம்பார் தூள்-50கிராம். மிளகாய் தூள்-50கிராம். பெருங்காயத் தூள்-25கிராம் என 34 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு, பெரிய மளிகை தொகுப்புடன் ரூ.999 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த பெரும் பொங்கல் தொகுப்புடன் மட்டும் அரை கிலோ நாட்டுச் சர்க்கரை விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

    இந்த தொகுப்புகள் அனைத்தும் வெளி சந்தையில் கிடைப்பதை விட குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறையின் மூலம் "கூட்டுறவு பொங்கல்" என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம கூட்டுறவு பண்டகசாலைகள், கூட்டுறவு விற்பனைச் சங்கம், சுயசேவை பிரிவுகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் போன்ற அனைத்து விற்பனை அலகுகள் மூலம் பொங்கல் தொகுப்பு விற்பனையினை வாங்கி அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைய கேட்டுக்கொள்கிறேன்.

    • ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • புதிய செயலியை உருவாக்க ஆட்டோ ஓட்டுனர்கள் அரசிடம் கோரிக்கை.

    சென்னை:

    சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும் அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா 12 ரூபாய், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50 என 2013-ம் ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

    இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதிக்கப்பட்டது.

    ஆனாலும் இதில் பல ஆட்டோ டிரைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்பதால் மீட்டர் போடாமல் குத்து மதிப்பாக பணம் கேட்கும் நடைமுறை சென்னையில் பரவலாகி விட்டது.

    ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள் கடை வீதிகள் என எல்லா பகுதிகளிலும் ஸ்டாண்டு ஆட்டோக்களை அழைத்தால் அவர்கள் ஒரு தொகை கேட்பார்கள். நாம் ஒரு தொகை சொல்ல வேண்டும். இதற்கு மத்தியில் பேரம் பேசிதான் ஆட்டோவில் பயணிக்க முடியும். எந்த ஆட்டோவிலும் மீட்டர் போடுவது கிடையாது.

    ஓலா, ஊபர் ஆட்டோக்களில் கூட காண்பிக்கும் தொகையை விட 20 ரூபாய், 30 ரூபாய் அதிகம் தாருங்கள் என கேட்கும் வழக்கம் உருவாகிவிட்டது.

    இதனால் பல இடங்களில் ஆட்டோ டிரைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படும் பயணிகள் அரசுக்கு புகார்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த புகார் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் இதற்கு முடிவு காண அரசு தற்போது முயற்சி எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் ஓலா, ஊபர் செயலிக்கு மாற்றாக அரசு ஒரு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதை நிறைவேற்றும் வகையில் தமிழக போக்குவரத்து துறையின் சார்பில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயலி உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக முதல் கட்டமாக கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மையத்தில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.

    ஆட்டோக்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பழைய கட்டணத்திற்கு பதிலாக குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50-ம், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு ரூ.25-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறும் போது, ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். அதற்காக இதுவரை 1.70 லட்சம் தொழிலாளர்களின் விவரங்களை சேகரித்துள்ளோம்.

    புதிய கட்டண விவரத்தை அரசுக்கு பரிந்துரைத் துள்ளோம். அது பரிசீலனையில் இருக்கிறது. விரைவில் ஆட்டோ கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்றனர்.

    • அமித் ஷாவின் கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.

    இந்த கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித் ஷாவை கண்டித்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்" என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.

    அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்!

    வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்! என கூறியுள்ளார். 



    • இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    • சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சங்கத் தமிழ் மக்களின் நாகரீக வாழ்வை எடுத்துரைக்கும் வண்ணம் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

    இதுவரை 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பழந்தமிழ் மக்களின் வாழ்வு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழடிப் பகுதி அகழாய்வுகளில் சங்ககால மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலான நிறைய நமக்கு தரவுகள் கிடைத்திருக்கின்றன.

    இதனைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை- விஜயகரிசல் குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில், பழமையான அணிகலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாட பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

    பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி மற்றும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கழுத்தில் அணியும் நீல நிற கண்ணாடி மணி ஆகியவை கண்டெடுக்கப்பட்டது.

    மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சென்னானூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழாய்வில் இதுவரை 327 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பகண்டை தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதியில் நடந்துவரும் மேற்புற கள ஆய்வில் பழங்கால சுடுமண் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சுடுமண் புகைப்பிடிப்பான், அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    • இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
    • எல்லோரும் அமித் ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

    சென்னை :

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புரட்சியாளர் அம்பேத்கர் யாத்து தந்த இந்திய அரசியலமைப்புச்சட்டம் தான் பாராளுமன்றத்தை வழிநடத்துகிறது. அந்த பாராளுமன்றத்துக்குள்ளேயே புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்து பேசியுள்ளார் இந்திய ஒன்றிய அமைச்சரும் சனாதனவாதியுமான அமித் ஷா.

    அரசியலமைப்பின் 75 ஆம் ஆண்டை பெருமையோடு கொண்டாடுவதாக சொல்லி பெருமைப்படும் பிரதமர் மோடியோ இது குறித்து இதுவரை கண்டிக்கவே இல்லை. குறைந்த பட்சம் வருத்தம் தெரிவிக்கவாவது சொல்லியிருக்க வேண்டும்.

    இதிலிருந்து பாஜக எப்படி அம்பேத்கரை மதிக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். பாராளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமித் ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.

    அதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

    இந்த போராட்டத்தில் அதிமுகவோ, பாமக தலைவர் அன்புமணியோ பங்கேற்கவில்லை. அம்பேத்கரை அவமதித்த அமித் ஷாவை கண்டிக்ககூடவில்லை.

    அது கூட போகட்டும், கடந்த 6-ந்தேதி அன்று அம்பேத்கர் நூலை வெளியிட்ட தமிழக வெற்றிகழகத்தின் தலைவர் விஜய் இதுவரை அமித் ஷாவை கண்டிக்கவில்லை.

    எல்லோரும் அமித் ஷாவை கண்டித்து மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்.

    அதுவே புரட்சியாளர் அம்பேத்கரை மதிப்பதாக பொருள். இல்லையேல், அடையாள அரசியலை செய்வதாகத்தான் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று கூறியுள்ளார். 



    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
    • நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடக்கு நோக்கி நகர்ந்து தமிழக, ஆந்திர கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்துவரும் நிலையில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும் நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு குறைவு என்றும் கூறியுள்ளது. 

    • படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது.
    • தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சமூக அக்கறையுள்ள இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகம் வரும் 20-ந்தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், அந்த படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது.

    படத்தில் வசைச் சொற்கள் வரும் இடத்தில் ஒலியை நிறுத்த சொன்ன சென்சார் போர்டு, சில அரசியல் சொற்களையும் அந்த பட்டியலில் சேர்த்துள்ளது.

    குறிப்பாக, 'அரசு''அரசாங்கம்', 'தேசிய இன விடுதலை' ஆகிய இடங்களில் ஒலியை நிறுத்தவோ அல்லது மாற்றவோ அறிவுறுத்தல் தரப்பட்டுள்ளது.

    'பிரச்சனையை தீர்க்குறதுக்கான ஆயுதங்களை மக்களே அந்தந்த போராட்ட களங்களிலிருந்து உருவாக்கிக்கனும்' என்று படத்தில் உள்ள வசனத்தை 'அந்த ஆயுதம் ஓட்டாக கூட இருக்கலாம்' என்று திருத்தும்படி சொல்லியுள்ளது சென்சார்.

    ஆபாசம், பிற்போக்குத்தனம், சனாதனப்பரப்புரை என திரையை அழுக்காக்கி, சமூகத்தையும் பின்னோக்கி இழுக்கும் சூழலில், சமூகத்தையும் இளைஞர்களையும் சமூகநீதி பாதைக்கு அழைத்துச்செல்லும் சமூக பொறுப்போடு களமாடி வருபவர் வெற்றிமாறன்.

    விடுதலை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும் சூழலில் தணிக்கை குழுவினரின் இந்த போக்கு படைப்பிலக்கியவாதிகளின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதாகும்.

    தணிக்கை குழு படைப்பாளிகளின் கருத்துச்சுதந்திரத்துக்கு இனி மதிப்பளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடவுளின் பெயரைச் சொல்லி சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும்.
    • அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜூனா இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆட்சிக்கு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'சும்மா அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொன்னால் சொர்க்கம் செல்ல முடியாது. அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது' என்று பாராளுமன்றத்திலேயே பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

    அந்த அம்பேத்கர் கொண்டுவந்த அரசியலமைப்பு சட்டம்தான் பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட பல ஏழைத்தாயின் மகன்களும் அரசியல் அதிகாரத்தை அடையக் காரணம். அதுவே, இன்று அனைவரும் பரவலாக அரசியல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது. கடவுளின் பெயரைச் சொல்லி சொர்க்கம் செல்பவர்கள் செல்லட்டும்.

    ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்த சட்டத்தின் வழியில் சட்டமன்றம், பாராளுமன்றம் சென்று மக்களுக்கான அதிகாரத்தை வென்றறெடுக்கவும், எல்லோருக்குமான அரசு, சமதர்ம சமூகத்தை உருவாக்கவும் அரசியல் அமைப்பு காட்டிய சட்ட வழியில் பயணிப்போம்.

    எனவே நாங்கள் உரக்கச் சொல்கிறோம், வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்!

    இவ்வாறு ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

    • விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
    • வழக்கு விசாரணை ஜனவரி 6-ந்தேதி ஒத்திவைப்பு

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக 18 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    தங்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் அனைத்து வழக்குகளிலும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், இறுதி விசாரணைக்காக வழக்கை ஜனவரி 6-ந்தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    அப்போது எதன் அடிப்படையில் ரத்து செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு வழக்கறிஞர் இவர்கள் அனைவரும் கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர். விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதன் காரணமாக இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக பதில் அளித்தார்.

    இத்தனை ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது என்றால் மதுவிலக்கு போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனையடுத்து இந்த அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 6-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் பூட்டப்பட்ட கோவில் ஒன்றை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பெண்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்து, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், "ஆம்பள எவனுமே இல்லையா?" என அநாகரிகமாகப் பேசி இருக்கிறார்.

    அவர் தொடர்ந்து அநாகரிகமாக பேசுவதை கேட்டு பெண்கள் கையெடுத்து கும்பிடுகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • தி.மு.க. அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் துன்பப்படுவது வாடிக்கையாகிவிட்டது. மக்கள் போற்றும் ஒரு நல்ல அரசுக்கு எடுத்துக்காட்டு, அந்த மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதும்; மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி வைப்பதும்; இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் முன்கூட்டியே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களைக் காப்பாற்றுவதுமாகும்.

    ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஸ்டாலின் தலைமையிலான கடந்த 43 மாதகால தி.மு.க. ஆட்சியில் மக்கள் பெருந்துன்பங்களுக்கு ஆளாகி, தங்களது இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவிற்கு சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தி.மு.க. அரசின் இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    சமீபத்தில் உருவான ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையாலும், எவ்வித முன்அறிவிப்பும் இன்றி நள்ளிரவில் திடீரென சாத்தனூர் அணையில் இருந்து 1 லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீரைத் திறந்துவிட்டதாலும் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர்களுக்கான உரிய நிவாரணத் தொகையையும் வழங்காத ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில், வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில், அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயப் பெருமக்கள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.
    • ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி.

    தேவதானப்பட்டி:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 4 பேர் ஒரு காரில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் மீண்டும் அவர்கள் தங்களது காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்ரோடு பிரிவில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவர்கள் கார் வந்து கொண்டு இருந்தது அப்போது வத்தலக்குண்டுவில் இருந்து போடி நோக்கி சரக்கு வேன் சென்றது. 2 வாகனங்களும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக் கொண்டன.

    இதில் காரில் வந்த ஐயப்ப பக்தர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே காருக்குள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்ற டிரைவரும் படுகாயமடைந்தார்.

    கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு வெவ்வேறு திசைகளில் விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

    மேலும் பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்களும் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களது பெயர் விபரம் தெரியவில்லை.

    இதனிடையே காரில் வந்தவர்களின் செல்போன் உதவியுடன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×