என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.

    ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் (73) உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். இன்று மாலை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.

    அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த பி.ஆர்.சுந்தரம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.

    • பள்ளிக்குழந்தைகளுக்கு யோகா பயிற்சியும் அளித்து ஊக்குவித்தனர்.
    • நிகழ்ச்சியின் முடிவில் ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    குன்னூர்:

    பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி சர் பிரான்சிஸ் புட்சாரிடம் இருந்து இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் கே.எம்.கரியப்பாவிடம் ஜனவரி 15-ந்தேதி ராணுவ பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

    அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ மையத்தில் நேற்று 77-வது ஆண்டு ராணுவ தினம் கமாண்டன்ட் கிறிஸ்துதாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

    அப்போது ராணுவ வீரர்கள் பங்கேற்ற களரி, செண்டைமேளம், சிலம்பம், வாள்சண்டை போன்ற சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

    தொடர்ந்து தற்காப்பு கலைகளும் செய்து காண்பிக்கப்பட்டன. பள்ளிக்குழந்தைகளுக்கு யோகா பயிற்சியும் அளித்து ஊக்குவித்தனர்.

    வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்கள், அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் கண்டுகளித்து ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

    மணப்பாறை:

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையின் போது தொடங்கி தொடர்ந்து சில மாதங்கள் நடைபெறும். தென் மாவட்டங்களைப் போலவே திருச்சி மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டியில் வெகு விமரிசையாக நடைபெறும்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலக்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் ஒவ்வொரு ஆண்டும் தை 3-ம் நாள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    ஆவாரங்காடு, கலிங்கபட்டி, கீரணிப்பட்டி, சோலையம்மாபட்டி ஆகிய 4 கிராம மக்களின் சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி என்பதால் 4 கிராமங்களின் கோவில் காளைகளும் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் முதலில் வாடிவாசல் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். அப்போது ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகளும் மொத்தமாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதையடுத்து கால்நடை மருத்துவக்குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வாடி வாசலின் பின்புறம் டோக்கன் முறையில் கொண்டு வந்து வரிசையில் நிறுத்தப்பட்டது. இதே போல் மருத்துவக்குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் காளையர்களும் களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவாக வீரர்கள் ஜல்லிக்கட்டு களத்தில் களமிறங்கினர். வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டு வருகின்றது. அப்போது வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சிலகாளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வாருங்கள் பார்ப்போம்... என்று கூறுவது போல் நின்று அருகில் வந்த காளையர்களை விரட்டியடித்து பந்தாடியது. இருப்பினும் பல காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றி அனைத்து வெற்றி வாகை சூடினர்.

    இதில் வெற்றி பெற்ற காளைக்கு அதன் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய காளையர்களுக்கும் கட்டில், சில்வர் பாத்திரங்கள், கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும், பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.போட்டியில 600 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

    • அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
    • மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சாமி கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் அன்று இந்த கோவிலில் பொங்கல் விழா மற்றும் அசைவ அன்னதான விருந்து நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் 62-வது பொங்கல் திருவிழா மற்றும் அசைவ அன்னதான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேளரா, கர்நாடகா, மும்பை, புதுச்சேரி மற்றும் மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளில் உள்ள மதுரை முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்கள் பலரும் இந்த திருவிழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று கோபாலபுரம் முனியாண்டி சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 250 பெண்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து முனியாண்டி சாமிக்கு குடம்குடமாக அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 100 ஆட்டு கிடாய்கள், 150 கோழிகளை கொண்டு கமகம அசைவ அன்னதானம் தயாரிக்கப்பட்டது. 60 மூட்டை அரிசியில் தயாரான அசைவ உணவு மதியம் முதல் இரவு வரையில் திருவிழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. கோபாலபுரம், செங்கபடை, புதுப்பட்டி, குன்னத்தூர், திருமங்கலம், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த அசைவ அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

    இதற்கிடையே மாலை 5 மணியளவில் கோபாலபுரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சாமிக்கு அபிஷேகம் செய்ய மலர்தட்டு ஊர்வலம் புறப்பட்டது. கோபாலபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்கள், முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களின் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கில் இதில் கலந்து கொண்டனர். தாம்பூல தட்டில் தேங்காய், பூ, பழம் வைத்து வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவில் நோக்கி கிளம்பினர். இந்த மலர் தட்டு ஊர்வலத்தின் முன்பு ஏராளமான சிறுவர்கள், பெரியவர்கள் சிலம்பம் சுற்றியபடி வந்தனர்.

    பல பெண்கள் சாமியாடியபடியே ஊர்வலகத்தில் பங்கேற்றனர். மலர் பூந்தட்டு ஊர்வலம் மாலை 6 மணிக்கு முனியாண்டி கோவிலை அடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டு வந்திருந்த தேங்காயை உடைத்து முனியாண்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும் விற்பனையானது.
    • தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,640-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,120-க்கும் கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,390-க்கும் விற்பனையாகிறது.



    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 103 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து மூவாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

    14-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,640

    13-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720

    12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

    11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    14-01-2025- ஒரு கிராம் ரூ. 100

    13-01-2025- ஒரு கிராம் ரூ. 102

    12-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    11-01-2025- ஒரு கிராம் ரூ. 101

    • குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது.
    • நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி பூக்கள் பூக்கும். மேலும் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறுகுறிஞ்சி என 20-க்கும் மேற்பட்ட குறிஞ்சி இனங்கள் உள்ளன. இந்த குறிஞ்சியின் பெயரில் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலும் உள்ளது. இதில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இந்த குறிஞ்சி மலர்கள் கடல் மட்டத்தில் இருந்து 1200 முதல் 2500 மீட்டர் உயரத்தில் மட்டுமே வளரும் தன்மை உடையவை.

    இந்நிலையில் ஆண்டுதோறும் பூக்கும் ஸ்ட்ரோ பிலாந்தஸ் கார்டி போலீயோ வகை குறிஞ்சி மலர்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன. டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பூக்கும் நீலம் மற்றும் வெள்ளை வண்ணங்களிலான குறிஞ்சி மலர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது. இந்த அபூர்வ மலர் பூத்திருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

    குறிஞ்சி மலர்களில் 255-க்கும் மேற்பட்டவை உலகம் முழுவதும் உள்ளது. அதில் தற்போது வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் மலைப்பகுதி முழுவதும் பூத்துக் குலுங்குகின்றன. நீல நிறத்தில் இருப்பதால் நீலக்குறிஞ்சி மலர்கள் என கருதுகின்றனர். ஆனால் நீல குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். தற்போது பூத்துள்ள மலர்கள் அந்த வகையை சேர்ந்தது இல்லை என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.
    • சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.

    மாரண்டஅள்ளி:

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

    மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

    முன்னதாக கிராம மக்கள் மேளதாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.

    இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன.

    சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர்.

    இதனை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர். விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான மாரண்ட அள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    மதுரை மீனாட்சிபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த அழகர் மகன் கேசவன் (17), வடிவேலன் தெருவைச் சேர்ந்த அடைக்கலராஜா (27) மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சாலைப்புதூர் அருகே அவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழைய கன்னிவாடி கரிசல்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (21) என்பவர் தனது அத்தை மகளான துர்கா என்பவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவரை காரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டு இருந்தார்.

    திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து பாத யாத்திரை பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது அடைக்கலராஜா மற்றும் கேசவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுடன் வந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் வரவே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் பலியான கேசவனின் தந்தை அழகரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புவனேஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
    • வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள எடக்காடு பகுதி முக்குருத்தி, அவலாஞ்சி வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பகுதி சிறுத்தை, புலி, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

    சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளில் பொருட்களை தேடுவது, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிப்பது, விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு எடக்காடு அருகே உள்ள சாலையை புலி ஒன்று கடந்து சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.

    சாலையை புலி கடந்து சென்ற சம்பவத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசனம் பெறுகிறது.
    • கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே பூதங்குடியில் தொடங்கும் வீராணம் ஏரி 14 கி.மீ. நீளம், 5 கி.மீ. அகலம் பரப்பில் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் முடிவடைகிறது.

    அதிக நீர் பிடிப்பு ஆதாரமான வீராணம் ஏரியில் 47.50 அடி (1,465 மில்லியன் கன அடி) தண்ணீர் தேங்கி வைக்கப்படுகிறது.

    சம்பா பருவ காலங்களில் காட்டுமன்னார் கோவில், குமராட்சி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் இந்த ஏரி மூலம் பாசனம் பெறுகிறது.

    கடந்த டிசம்பர் மாதம் 25-ந்தேதி முதல் கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏரியின் அனைத்து மதகுகளையும் அடைத்து முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.

    கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாத நிலையில் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. தற்போதைய நிலவரப்படி 45.65 அடி தண்ணீர் உள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து பூதங்குடி நீரேற்று நிலையத்தில் மெட்ரோ நிறுவனம் வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் சென்னைக்கு குடிநீராக அனுப்பி வருகிறது.

    கடந்த ஒரு வாரமாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் ஏரியில் படிப்படியாக தண்ணீர் குறைய தொடங்கி உள்ளது.

    பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் உள்ள நிலையில் ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் கோடையில் சென்னைக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்தை சமாளிக்க முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    • மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை.
    • உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இந்தத் தேசத்துக்கு விடுதலை கிடைத்த போது மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லை. 'பஞ்சப் பராரிகளின் நாடு' என இழிவு செய்யப்பட்ட நாம் பசியை வென்றதற்கு ஒரே காரணம் நமது விவசாயிகள்.

    'நாட்டுப்புறத்தான்' தன் காட்டுக்குச் செல்வதால்தான் நம் வீட்டுக்குள் பசி இல்லை என்பதை உணர்வதும்; உழவர்களுக்கு ஒன்றென்றால் அவர்களுக்கு உடன் நிற்பதும்தான் நம் நன்றியைக் காட்டும் வழிகள்.

    உழவரைப் போற்றுவதும், தாயைப் போற்றுவதும் வேறல்ல. உழவர் திருநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    ×