என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.
    • தீயணைப்பு துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 13-ந்தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. 14-ந்தேதி வாசல் பொங்கலும், 15-ந்தேதி மாட்டுப் பொங்கலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

    பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த நிலையில் காணும் பொங்கல் விழாவையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் இன்று சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    அவர்கள் முதலைப் பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். தொங்கு பாலம், நடைபாதை ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    பரிசல் சவாரி ஒகேனக்கலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. உணவகங்கள், மீன் வறுவல் கடைகள், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கிடையே பரிசல் சவாரி செய்து காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

    மேலும் சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி, சினி பால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

    கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலில் குவிந்ததால் பஸ் நிலையம் அஞ்செட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் தீட்டு ஆலம்பாடி மெயின் அருவி நடைபாதை மசாஜ் செய்யும் இடம் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் தீயணைப்பு துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது.
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சரவணன் (வயது 20). நேற்று இரவு சரவணன் நண்பர்களுடன் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் மதுகுடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சரணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே உடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலை நகர் போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல் கிடைத்தது. சரவணன் மற்றொரு நண்பருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மதுகுடித்த போது சரவணனை உடன் இருந்த நண்பர்கள் கேட்டு உள்ளனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    • நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழக கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் அளவு முற்றிலுமாக குறைந்ததன் காரணமாக தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வரை தொடர்ந்து வினாடிக்கு 1200 கன அடியாக நீர்வரத்து நீடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 1000 கன அடியாக சரிந்து வந்தது. இன்று காலை அதே அளவில் நீடித்து வருகிறது.

    நீர்வரத்து குறைந்த போதிலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி சினி பால்ஸ், மெயின் அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. 

    • தாமஸ் விபத்தில் பலியானது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ் (வயது 55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மகள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

    மகளின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு பத்திரிகை கொடுப்பதற்கு சென்னைக்கு தாமஸ் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் மீண்டும் திருவள்ளூர் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டரசன் பேட்டை அருகே வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென தாமசின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்ததில் தாமசின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி தாமஸ் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே தாமஸ் விபத்தில் பலியானது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். திடீரென அவர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • 22-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    18-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    19-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    20-ந்தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    21-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    22-ந்தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 19-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்குள்ளும் கோட்டா முறை புகுந்ததாக கூறப்படுகிறது.
    • நேர்முகத் தேர்வு நடத்தாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்வதில் இழுபறி நிலவுவதால் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பேர் வீதம் தேர்வு செய்து அவர்களிடம் நேர்முக தேர்வு நடத்தி தகுதியானவரை மாவட்ட தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்குள்ளும் கோட்டா முறை புகுந்ததாக கூறப்படுகிறது. அதாவது மொத்தம் உள்ள 66 மாவட்டங்களில் மூத்த முன்னணி நிர்வாகிகள் 5 பேர் தங்கள் ஆதரவாளர்கள் தலா 5 பேருக்கு மாவட்ட தலைவர் பதவி பெற்றுள்ளதாகவும், 2 முன்னணி தலைவர்கள் தலா 10 மாவட்ட தலைவர்கள் பதவி பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கோட்டா அளவிலும் சிலர் பதவிகளை பெற்றுள்ளார்கள்.

    இதை தவிர்த்து 15 மாவட்ட தலைவர்கள் பதவிகள் மட்டுமே நேரடி நியமனம் மூலம் நியமிக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்கிடையில் 5 மாவட்டங்களில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள் சென்று நிர்வாகிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    நேற்று நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங் பேச்சில் கடுமையான எதிர்ப்பு கிளப்பி இருக்கிறது. நேர்முகத் தேர்வு நடத்தாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதியிலேயே அந்த கூட்டம் தடைபட்டது.

    இதனால் நேற்று வெளியிட இருந்த மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இன்று அல்லது நாளைக்குள் முதல் கட்டமாக 30 மாவட்ட தலைவர்கள் பட்டியலை வெளியிட முயன்று வருகிறார்கள்.

    • சிகிச்சை பலனின்றி நேதாஜி இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த சென்னம்பட்டி அண்ணா நகர் காலனியை சேர்ந்தவர் நேதாஜி (வயது 29 ). இவர் நேற்று பிள்ளையார்பட்டி திருவையாறு சாலை டாக்டர் எஸ்.ஜி.நகர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் தஞ்சை 8-ம் நம்பர் கரம்பையை சேர்ந்த கவுதம் (28) வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர்.

    அந்த நேரத்தில் எதிரே 8-ம் நம்பர் கரம்பை பகுதியை சேர்ந்த பாரதிராஜா (27) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக நேதாஜி மீது மோதி ஏறி இறங்கியது. இந்த விபத்தில் நேதாஜி பலத்த காயமடைந்தார்.

    இதையடுத்து நேதாஜி, கவுதம், பாரதிராஜா ஆகிய 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நேதாஜி இறந்தார். கவுதம், பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் தமிழ் பல்கலைக்கழகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
    • பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணும் பொங்கல் விழா, இன்று காலையிலேயே களை கட்டியது. இன்று காலை முதலே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.

    சென்னையில் உள்ள சுற்றுலா தலங்களை பொருத்தவரை பொதுமக்கள் அதிகம் பேர் கூடுவது மெரினா கடற்கரை ஆகும். காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. இன்று மதியத்துக்கு மேல் லட்சக்கணக்கான பொதுமக்கள் மெரினாவில் திரண்டனர்.

    இதனால் மெரினா கடற்கரையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் மெரினாவில் குவிந்த மக்கள் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர். குழந்தைகள் கடற்கரை மணலில் உற்சாகமாக விளையாடினார்கள்.

    மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாராவது கடலில் இறங்கி மூழ்கினால் அவர்களை மீட்பதற்காக நீச்சல் தெரிந்த 200 பேர் தயாராக உள்ளனர். உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. மெரினா கடற்கரைக்கு செல்பவர்களின் வசதிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2 நாட்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தனர்.

    காணும் பொங்கலையொட்டி இன்று காலையில் இருந்தே வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கினார்கள். நேரம் செல்லச்செல்ல பொதுமக்கள் வருகை அதிகரித்தது. இன்று மதியம் ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்து குவிந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளை பார்வையிட்டனர்.

    மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு பெற்றோரின் தொடர்பு விவரங்களுடன் கை வளையம் வழங்கப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் 5 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள் அதிகம் உள்ளது. இந்த சிறுவர் பூங்கா பராமரிப்பு பணிகள் முடிவடைந்து சிறுவர்களுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இங்கும் ஏராளமான சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.



    காணும் பொங்கலை கொண்டாட இன்று காலை முதலே, சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக மாமல்லபுரத்திற்கு வரத் தொடங்கினர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன் தபசு, கடற்கரை கோவில், ஐந்துரதம், புலிக்குகை, வெண்ணை உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட சிற்பங்களை கண்டுகளித்தனர். சுற்றுலா பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர் பகுதிகளில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் வழிபாட்டிற்கு வரும் கர்நாடக மாநில செவ்வாடை பக்தர்களும், மாமல்லபுரம் கடலில் குளித்து செல்ல வந்தனர்.

    அனைத்து வாகனங்களையும் புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் நிறுத்த மாமல்லபுரம் போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். புறவழிச்சாலையில் இருந்தும், ஓ.எம்.ஆர். பகுதியில் இருந்தும் பயணிகள் மாமல்லபுரம் நகருக்குள் வருவதற்கு வசதியாக மினி பஸ் இயக்கப்படுகிறது. மாமல்லபுரம் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு நீச்சல் தெரிந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பெண்களை கேலி செய்வோர், பாலியல் சீண்டல் செய்வோரை கண்காணித்து பிடிக்க சாதாரண உடையில் பெண் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று அதிகளவில் கூட்டம் வரும் என்பதால் புராதன சின்னங்களை பார்க்க தொல்லியல்துறை இலவசமாக அனுமதிக்கும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.600-ம், உள்நாட்டு பயணிகளுக்கு ரூ.40-ம் வசூலிக்கப்பட்டது.

    சென்னையை அடுத்துள்ள பழவேற்காட்டில் இன்று காலை 8 மணி முதல் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் பழவேற்காட்டில் உள்ள டச்சு கல்லறை நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளனர். அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. பழவேற்காடு ஏரியில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, கோவளம் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள் ஆகிய சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    சென்னையில் காணும் பொங்கலையொட்டி இன்று பாதுகாப்பு பணியில் 16 ஆயிரம் போலீசாரும், 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக இன்று 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    • மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.
    • திராவிடவியல் கருத்தரங்கிற்கு இரா.விடுதலை முன்னிலை வகிக்கிறார்.

    சென்னை:

    தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு வருகிற 18-ந் தேதி ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. காலை 7மணி முதல் மாலை 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

    காலை 8.45 மணிக்கு அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியேற்றுகிறார். அதனை தொடர்ந்து மாநாடு தொடக்க விழா நடக்கிறது.

    மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். இரா.கிரி ராஜன் எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

    காலை 10 மணிக்கு ஒரு நாடு ஒரு தேர்தல் கலந்துரையாடல் நடைபெறுகிறது. மூத்த வக்கீல் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். என்.ஆர்.இளங்கோ இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள்.

    அதனை தொடர்ந்து திராவிடவியல் கருத்தரங்கு நடக்கிறது. ஆ.ராசா எம்.பி., முனைவர் ஜெயரஞ்சன், பேராசிரியர் கருணானந்தன், மதிவதனி, மில்ட்டன், கவி கணேசன் ஆகியோர் பேசுகிறார்கள்.

    திராவிடவியல் கருத்தரங்கிற்கு இரா.விடுதலை முன்னிலை வகிக்கிறார். சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்கிறார். துணை செயலாளர் கே.சந்துரு தொகுத்து வழங்குகிறார்.

    'இந்திய மக்களாகிய நாம்' என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி.யும் மற்றும் அருள்மொழி, சூர்யா சேவியர், தமிழ் காமராசன், இந்திரகுமார் தேரடி, மருது கணேஷ் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மாலை 4.30 மணிக்கு நடைபெறும். மாநாட்டு நிறைவு விழாவிற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்குகிறார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னிலை வகிக்கிறார். மூத்த வக்கீல் இரா.விடுதலை வரவேற்கிறார்.

    மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி. அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, துணை பொதுச் செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முடிவில் சட்டத் துறை இணை செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.

    முன்னதாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் படங்களை இரா.விடுதலை, என்.ஆர்.இளங்கோ, கே.எம். தண்டபாணி, பி.ஆர். அருள்மொழி, என்.மணிராஜ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

    இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயலாளர் சிற்றரசு தயாநிதிமாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.மோகன், எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், மயிலை த.வேலு, பச்சையப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    • வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.
    • திருமூர்த்தி அணை, அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல்குருமலை, கீழ்குருமலை, குலிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் பல்வேறு வழிகளில் ஓடிவருகின்ற ஆறுகள் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.

    இந்த அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    அதைத் தொடர்ந்து கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலையில் குவிந்து வருகின்றனர். அவர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று இதமான கால நிலையை அனுபவித்தும் அருவியில் குளித்து புத்துணர்வும் அடைகின்றனர்.

    அதுமட்டுமின்றி அருவி பகுதியில் குடும்பத்துடனும், தனியாக அமர்ந்தும் செல்பி, புகைப்படம் எடுத்து உறவினர்களுக்கு அனுப்பியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்கின்றனர்.

    இதனால் திருமூர்த்தி அணை, அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. 

    • சிவாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • கம்பெனி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு ராமபுரத்தை சேர்ந்தவர் சிவா (வயது 21) இவர் கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார் இந்த நிலையில் இன்று அதிகாலை வழக்கம் போல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சிவா அங்குள்ள கன்வேயர் பெல்டில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது

    அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் .

    அப்போது சிவாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இத்தகவல் அறிந்த கடலூர் கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்த பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர் . பின்னர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் இறந்த சிவா குடும்பத்திற்கு 1 1/2 கோடி நிவாரண தொகையும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட பொது மக்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கம்பெனி நிர்வாகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மற்றும் உறவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    • பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
    • குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

    இதையடுத்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    900 நாட்களை கடந்து நடந்து வரும் போராட்டத்தில் பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 19, அல்லது 20-ந் தேதி பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    மனுவை பரிசீலித்த போலீசார் கிராம மக்களை சந்திப்பதற்கு விஜய்க்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. பெரும்பாலும் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படாது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேற்று போராட்டக் குழுவினரை சந்தித்தனர். குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர். தகவல்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் நிர்வாகிகள் ஒப்படைக்க இருக்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து விஜயின் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ×