என் மலர்tooltip icon

    பஞ்சாப்

    • பகவத் மான்-க்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை.
    • அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது நாங்கள் கவலையாக உணர்கிறோம்.

    சிரோமணி அகாலி தளம் தலைவர் பஞ்சாப் முதல்வர் பகவத் மான்-ஐ கடுமையாக விமர்சனம் செய்தார். பகவத் மான் குறித்து சுக்பீர் சிங் பாதல் கூறியதாவது:-

    பகவத் மான்-ஐ நான் சீக்கியராக கருதவில்லை. அவர் அணிந்துள்ள தலைப்பாகை அவரை சீக்கியராக காட்டுகிறது. அவருக்கு சீக்கியர்களின் வரலாறு தெரியவில்லை. அவரை பார்க்கும்போது, அவரது அறிக்கையை கேட்கும்போது எங்கங்கு கவலையாக உள்ளது.

    இந்தியாவில் 18 சதவீதம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒற்றுமையாக இல்லாததால் அவர்களுக்கு என தலைவர் இல்லை. நாம் இரண்டு சதவீதம்தான் உள்ளோம். என்றபோதிலும் நாம் ஸ்ரீ அகால் தக்த் சாகிப் கீழ் ஒன்றிணைந்துள்ளோம்.

    அவர்கள் (ஆம் ஆத்மி) பஞ்சாபை சுரண்டி கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பகவத் மான் கிடையாது.

     சீக்கியர்களை கொண்ட அனைத்து மாநிலங்களிலும் சிரோமணி அகாலி தளம் அமைப்புகளை தொடங்கும்.

    இவ்வாறு சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆணடு பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கட்சிகள் படுதோல்வியடைந்தன. 117 இடங்களை கொண்டு பஞ்சாபில் 92 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    • ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு சான்றிதழ் சேவைகள் இனி பஞ்சாப்வாசிகளின் வீடு தேடிவர உள்ளது.
    • இத்திட்டம் தலைநகர் டெல்லியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சண்டிகர்:

    அரசு சான்றிதழ் பெறவேண்டி நாடு முழுவதிலும் உள்ள பொதுமக்கள் அதன் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பலமணி நேரம் வீணாவதுடன், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டி இருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தியது.

    இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு சான்றிதழ் சேவைகள் இனி பஞ்சாப்வாசிகளின் வீடு தேடிவர உள்ளது.

    லூதியானா நகரில் நாளை அறிமுகமாகும் இத்திட்டத்தை பஞ்சாப் முதல் மந்திரி பகவத் மான், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.

    இதன்படி, ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச் சான்றிதழ் அனைத்து வகையான அரசு சான்றிதழ்கள், மின்சாரக் கட்டணம், குடிநீர் மற்றும் வீட்டுவரி உள்பட 43 வகையான அரசு சேவைகள் செய்துதரப்படும். இத்திட்டத்தில் அரசு வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தம் தேவைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பிறகு அவர்களுடன் பேசி நேரம் குறித்த பின் பொதுமக்கள் வீட்டிற்கு அரசு சார்பில் அலுவலர் வருவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.
    • தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    லூதியானா:

    பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் சாம்பவ் ஜெயின். தொழில் அதிபரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 7 பேர் கும்பலால் கடத்தப்பட்டார். அவரது குடும்பத்தினரிடம் கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டியது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சாம்பவ் ஜெயினை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீவிர விசாரணை நடத்திய போலீசார் கடத்தல் கும்பலை நெருங்கினர். இந்நிலையில் கடத்தல் கும்பல் சாம்பவ் ஜெயினின் காலில் சுட்டு விட்டு விஸ்வகர்மா சவுக் பகுதி அருகே அவரை தள்ளிவிட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து கடத்தல் வழக்கில் தொடர்புடைய தேடப்படும் கும்பலை சேர்ந்த 2 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று இரவு என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என் கவுண்டரின் போது ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.

    இதுகுறித்து லூதியானா போலீஸ் கமிஷனர் குல்தீப் சிங் சாஹல் கூறுகையில், லூதியானாவைச் சேர்ந்த தொழில் அதிபர் சாம்பவ் ஜெயின் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சுபம் என்கிற கோபி மற்றும் சஞ்சீவ் குமார் என்ற சஞ்சு பஹ்மான் ஆகியோர் போலீஸ் தரப்புடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

    இன்ஸ்பெக்டர் குல்வந்த் சிங் தலைமையிலான போலீஸ் குழு அவர்களை துரத்திக் கொண்டிருந்தபோது, லூதியானா மாவட்டத்தில் உள்ள டோராஹா நகரில் உள்ள திப்பா பாலம் அருகே என்கவுண்டர் நடந்தது. இதில் ஏ.எஸ்.ஐ. சுக்தீப் சிங் என்ற போலீஸ்காரரும் பலத்த காயமடைந்தார். இறந்த இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

    தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் மேலும் 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேபாளி என்ற ஜதின், பிரேம்ஜித், மந்தோஷ், ஆதித்யா மற்றும் மன்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றார்.

    • மதுபோதையில் ஓட்டிவந்த டிரைவர் திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்தினார்.
    • மக்கள் கொடுத்த சிக்னலால் ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் ஒருவர், திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்திவிட்டுச் சென்றார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே அந்த வழியாக வந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுத்தனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலின் வேகத்தைக் குறைத்து சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார். தொடர்ந்து, தண்டவாளத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அதன்பின் டிரைவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய டிரைவரால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • பஞ்சாபில் சிறப்பு ரெயில் நேற்று திடீரென ரத்துசெய்யப்பட்டது.
    • இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ஒன்றுகூடி கோஷம் எழுப்பினர்.

    சண்டிகர்:

    தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பணிபுரிந்துவரும் மக்கள், தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். அவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கும், பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்புவதற்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல், வடமாநிலங்களில் வரும் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை சாத் பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்தப் பண்டிகைக்காகவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, பஞ்சாப்பில் உள்ள சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் இருந்து பீகாரின் சஹர்சா வரை செல்லும் சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்பட இருந்தது. இதில் பயணம் செய்வதற்காக சர்ஹிந்த் ரெயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர்.

    இந்நிலையில், அந்த சிறப்பு ரெயில் திடீரென ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த பயணிகள் பிளாட்பாரத்திலும் ரெயில் தண்டவாளத்திலும் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பினர். அவர்களில் சிலர் கற்களை எடுத்து ரெயில் நிலையம் மீதும், சிலர் நிறுத்தியிருந்த பயணிகள் ரெயில்கள் மீதும் வீசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மருந்து வாங்குவதற்காக ஷீத்தல் சிங் மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.
    • லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நல்ல விதத்தில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார்.

    சாதாரண மனிதன் ஒரே பாட்டில் கோடீஸ்வரராவது போன்ற காட்சிகளை சினிமாவில் மட்டும் தான் பார்த்திருப்போம். ஆனால் சாதாரண விவசாயி ஒருவர் 4 மணி நேரத்தில் கோடீஸ்வரரான அதிர்ஷ்ட சம்பவம் பஞ்சாபில் நடந்துள்ளது.

    அம்மாநிலத்தில் ஹோஷியாபூர் நகரை அடுத்த மஹில்பூரை சேர்ந்தவர் ஷீத்தல் சிங். விவசாயியான இவர் சம்பவத்தன்று தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு மருந்து வாங்குவதற்காக மெடிக்கலுக்கு சென்றுள்ளார். அப்போது ஷீத்தல் சிங் லாட்டரி சீட்டு ஒன்றையும் வாங்கி உள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற 4 மணி நேரத்திலேயே அவருக்கு லாட்டரி தொடர்பாக ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர் எடுத்த லாட்டரி சீட்டுக்கு ரூ.2.5 கோடி பரிசு விழுந்ததாக கூறி உள்ளனர். இதனால் ஷீத்தல் சிங் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஷீத்தல் சிங்குக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    லாட்டரியில் கிடைத்த பரிசு தொகையை குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நல்ல விதத்தில் செலவு செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறினார். லாட்டரி கடையின் உரிமையாளர் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரி விற்று வருகிறேன். என்னிடம் வாடிக்கையாளர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை வென்றது இது 3-வது முறையாகும் என்றார்.

    • பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்து சென்றும் பலனில்லை
    • அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது மோகா நகரம்.

    இங்கு வசிக்கும் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு பல மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. அவரது உறவினர்கள் அவரை பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றும் பலன் கிடைக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன் அவருக்கு கடும் காய்ச்சலுடன் வயிற்று வலி அதிகரித்தது. அதனுடன் 2 நாட்களாக குமட்டல் வேறு இருந்து வந்தது. அவரால் சரியாக உறங்க முடியவில்லை.

    இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, மோகா நகரின் பர்னாலா அம்ரித்சர் பைபாஸ் சாலையிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அவரை கொண்டு சென்றனர். மருத்துவர்களின் முதல்நிலை சிகிச்சையில் பலன் இல்லாததால் அவரது வயிற்று பகுதியை எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்து அதனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

    ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் பல உலோக பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை நீக்க உடனடியாக ஒரு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

    3 மணி நேரம் நேற்று நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் ஒரு சிறு உலோக கிடங்கே இருந்தது.

    வெளியில் எடுக்கப்பட்ட உலோக பொருட்களில் சில, இயர்போன், வாஷர், நட்டு மற்றும் போல்ட், வயர், ராக்கி, லாக்கெட், பொத்தான், சிறு உறை, தலைமுடிக்கான க்ளிப், ஜிப், கோளி குண்டு மற்றும் ஊக்கு ஆகியவை.

    இவ்வளவு பொருட்களும் அவர் வயிற்றில் இருந்தது மருத்துவர்களுக்கும், நோயாளியின் உறவினர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது. அந்த நோயாளிக்கு ஓரளவு மனநோய் இருப்பதாக தெரிவித்த அவரது உறவினர்களுக்கு கூட எப்போது எவ்வாறு அந்த நோயாளி அவற்றை உட்கொண்டார் என்பது தெரியவில்லை.

    "இது போன்ற ஒரு வழக்கை இப்போதுதான் முதல்முறையாக நாங்கள் காண்கிறோம். சுமார் 2 வருடங்களாக வயிற்று வலியால் அந்த நோயாளி அவதிப்பட்டுள்ளார். அனைத்து பொருட்களையும் நாங்கள் வெளியில் எடுத்து விட்டோம். நோயாளி இன்னமும் சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை இன்னமும் சீராகவில்லை. அத்தனை பொருட்களும் நீண்ட காலமாக அவர் வயிற்றிலேயே இருந்ததால், அவருக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில காலம் அவருக்கு சிகிச்சை தேவைப்படும்" என மெடிசிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர். அஜ்மெர் கால்ரா தெரிவித்தார்.

    • பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    • அமிர்தசரஸ்-டெல்லி ரெயில் பாதையில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தினர்.

    அமிர்தசரஸ்:

    பயிர்க்கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்த கோரிக்கைகள் ஏற்கப்படாததை தொடர்ந்து நேற்று அவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாள் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கினர். ரெயில் தண்டவாளங்களில் ஆயிரக்கணக்கில் அமர்ந்து இருந்த அவர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இந்த போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் தொடரும் என விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

    இந்த போராட்டத்தில் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி, பாரதிய கிசான் யூனியன், ஆசாத் கிசான் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    அமிர்தசரஸ் அருகே உள்ள தேவிதாஸ் புராவில், அமிர்தசரஸ்-டெல்லி ரெயில் பாதையில் ஆயிரக்கணக்கில் விவசாயிகள் குவிந்து போராட்டம் நடத்தினர்.

    இதைப்போல ஜலந்தர், மோகா, ஹோஷியார்பூர், குர்தாஸ்பூர், சங்ரூர், பாட்டியாலா, பதிண்டா, பெரோஸ்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் ரெயில் மறியல் போராட்டம் நடந்து வருகிறது.

    அமிர்தசரசில் நடந்த போராட்டத்தில் பேசிய விவசாய அமைப்பு தலைவர் குர்பசன் சிங், 'வட இந்திய மாநிலங்களுக்கு ரூ.50,000 கோடி வெள்ள நிவாரண நிதி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கை ஆகும்' என தெரிவித்தார். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் ஒட்டுமொத்த பயிர்க்கடனையும் ரத்து செய்ய வேண்டும் எனக்கூறிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    விவசாயிகளின் இந்த ரெயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப்பின் பல பகுதிகளில் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    • தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
    • சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பஞ்சாப், பதிந்தா நகரை சேர்ந்த மணிஷா(வயது 21), டிம்பிள்(27). இணை பிரியாத தோழிகளான இருவரும் சண்டிகர் அருகில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்தபோது காதலித்தனர்.

    தன்பாலின ஈர்ப்பாளராக இருந்த இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து பெற்றோர் மூலமாக உள்ளூர் சீக்கிய குருத்வாராவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என 70 பேர் இத்திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சீக்கிய மதகுரு ஹர்தேவ் திருமணம் செய்து வைத்தார்.

    பின்னர் இந்த திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. உடனே, இதுகுறித்து சீக்கிய மத குருக்களின் தலைவரான ரக்பீர் சிங் தன்பால் திருமணம் இயற்கைக்கு மாறானது. சீக்கிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்றார். இதை தொடர்ந்து மதகுரு ஹர்தேவ் உட்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    • எம்.எல்.ஏ. வீட்டில் ஜலாலாபாத் போலீசார் சோதனை நடத்தினர்.
    • சுக்பால்சிங் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. சுக்பால்சிங் கைரா. இவர் மீது கடந்த 2015-ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. இவ்வழக்கு தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இன்று அதிகாலை சுக்பால்சிங் எம்.எல்.ஏ. வீட்டில் ஜலாலாபாத் போலீசார் சோதனை நடத்தினர்.

    பின்னர் சுக்பால் சிங் எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுக்பால்சிங், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசார் சோதனை செய்தபோது, அதை பேஸ்-புக் பக்கத்தில் சுக்பால்சிங் குடும்ப உறுப்பினர் ஒருவர் நேரடியாக ஒளிபரப்பினார். சுக்பால்சிங் எம்.எல்.ஏ. கைதுக்கு காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டம் தில்வான் பகுதியை சேர்ந்தவர் ஹர்தீப் சிங்(வயது 22). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது பயங்கர ஆயுதங்களுடன் மர்மநபர்கள் வந்தனர்.

    திடீரென்று ஹர்தீப் சிங்கை சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது உடல் பாகங்களை வெளியில் வீசிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஹர்தீப் சிங்கை மீட்டு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே ஹர்தீப் சிங் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தில்வான் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கபடி வீரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    மொகாலி:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 276 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டேவிட் வார்னர் அரை சதம் அடித்து 52 ரன்களில் அவுட் ஆனர். ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்னும், ஸ்மித் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இந்திய அணி சார்பில் முகமது ஷமி 5 விக்கெட்டும், பும்ரா, அஷ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    சுப்மன் கில் 74 ரன், ருதுராஜ் 71 ரன், சூர்யகுமார் யாதவ் 50 ரன் மற்றும் கே.எல்.ராகுல் 58 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

    இந்நிலையில், வெற்றி குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் பேசியதாவது:

    நான் கேப்டனாக இருப்பது இது முதல் முறை கிடையாது. யாரேனும் இல்லை என்றால் இந்த பொறுப்பு என்னை தேடி வந்துவிடும். இதற்கு நான் பழகிக் கொண்டு விட்டேன். இந்த பொறுப்பும் எனக்கு பிடித்திருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் எங்கள் அணி வீரர்கள் காட்டிய உத்வேகம் மிகவும் சிறப்பானது.

    எங்கள் அணியில் இன்று 5 பந்துவீச்சாளர்கள் தான் இருந்தார்கள். அதனால் அனைவருமே 10 ஓவர்கள் வீச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்யும்போது கில் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். எனினும் கில் ஆட்டம் இழந்த பிறகு போட்டியில் நாங்கள் நெருக்கடியை சந்தித்தோம்.

    ஏனென்றால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் ஆட்டம் இழந்தால் எப்போதுமே பின்னால் வருபவர்களுக்கு சிக்கல்தான். நானும் சூரியகுமாரும் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்அமைத்தோம். ஒரு வீரராக இது போன்ற கடின சவால்களை சந்திக்க ஆசைப்படுகிறேன்.

    அதிரடியாக ஆடி விக்கெட்டுகளை இழக்க நாங்கள் விரும்பவில்லை. போட்டியை கடைசி வரை கொண்டு சென்று வெற்றி பெற வேண்டும் என நானும் சூரியகுமாரும் பேசி வைத்து விளையாடினோம் என தெரிவித்தார்.

    ×