என் மலர்tooltip icon

    கேரளா

    • விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • விதர்பா சார்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 111 ரன்கள் எடுத்தார்.

    விசாகப்பட்டினம்:

    விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சீசனுக்கான 32-வது விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழகம், விதர்பா அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 48.4 ஓவரில் 256 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. துஷார் ரஹேஷா 75 ரன்கள் எடுத்தார். முகமது அலி 48 ரன்னும், சித்தார்த் 40 ரன்னும் எடுத்தனர்.

    விதர்பா சார்பில் தர்ஷன் நல்கண்டே 6 விக்கெட்டும், ஹர்ஷ் துபே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விதர்பா அணி களமிறங்கியது. அந்த அணியின் கருண் நாயர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    இறுதியில், விதர்பா அணி 43.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கருண் நாயர் 111 ரன்னும், ஷுபம் துபே ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தமிழகம் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர்.
    • பயங்கரவாதிகள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்- மகாராஷ்டிர மாநில மந்திரி.

    பா.ஜ.க.வை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில மந்திரி நிதேஷ் ரானா "கேரளாவில் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது. இந்துக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இந்து பெண்கள் லவ் ஜிகாத் டார்கெட் செய்யப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் நடத்தப்படுவதை போலதான் கேரளாவிலும் நடத்தப்படுகின்றனர்.

    பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து ஆதரவு கிடைப்பதால்தான் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

    கேரளா என்பது ஒரு மினி பாகிஸ்தான். அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது தங்கையும் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். பயங்கரவாதிகள் அனைவரும் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்" எனக் கூறியிருந்தார்.

    கேரளாவை மினி பாகிஸ்தான் எனக் கூறியதற்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பினராயி விஜயன் எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    மகாராஷ்டிர மாநில மந்திரி கேரளாவை மினி பாகிஸ்தான் என அழைத்திருப்பது மிகவும் தீங்கிழைக்கக் கூடியது. மற்றும் கண்டிக்கத்தக்கது.

    மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையான கேரளாவிற்கு எதிராக சங் பரிவாரத்தால் நடத்தப்படும் வெறுப்பு பிரச்சாரங்களை இதுபோன்ற சொல்லாட்சிகள் பிரதிபலிக்கின்றன.

    கேரளா மீதான இந்த கொடூரமான தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம், மேலும் சங் பரிவாரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு பினராயி விஜயன் தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

    • வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன.

    கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

    இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது.

    இதற்கிடையே, வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்க மத்திய அரசு மறுத்து வந்தது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அறிவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக கேரள அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

    இருப்பினும், பேரிடராக அறிவித்த மத்திய அரசு கேரள மாநிலத்திற்கான சிறப்பு நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

    • 12 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி.
    • தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடிகையும் நடன கலைஞருமான திவ்யா உன்னி தலைமையில் பரத நாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.

    கின்னஸ் சாதனைக்காக 12 ஆயிரத்து 600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை காண ஏராளமானோர் மைதானத்தில் திரண்டனர்.

    கேரள மந்திரி சஜி செரியன், திருக்காக்கரா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ் மற்றும் சிலர் வி.ஐ.பி. காலரியில் இருந்து நிகழ்ச்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக உமா தாமஸ் எம்.எல்.ஏ., மேடையில் இருந்து தவறி விழுந்தார். சுமார் 18 அடி உயரத்தில் இருந்து அவர் விழுந்ததில் தலை, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாலரிவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.அவரை வென்டிலேட்டரில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோட்டயம் மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழு விரைந்து வந்து சிகிச்சை முறையை கேட்டறிந்தது.

    சுமார் 2 மணி நேரம் அவர்கள், உமா தாமஸ் எம்.எல்.ஏ. உடல்நிலையை ஆய்வு செய்தனர். அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு, நுரையீரலில் ரத்தம் உறைதல், எலும்புகள் முறிவு உள்ளிட்ட பலத்த காயங்கள் இருப்பதாகவும், அதற்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவக்குழு தெரிவித்துள்ளது.

    சம்பவம் குறித்து பாலாரிவட்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்காலிக மேடையின் முன்பக்கத்தில் ஒருவர் நடக்க கூட இடவசதி செய்யப்படவில்லை.

    அங்கு கட்டியிருந்த கயிறு வலுவாக இருப்பதாக கருதி பிடித்த போது, உமாதாமஸ் எம்.எல்.ஏ. தவறி விழுந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மலையாள நடிகர் திலீப் சங்கர் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றார்.
    • அங்குள்ள ஹோட்டல் அறையில் திலீப் சங்கர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    நடிகர் திலீப் சங்கர் மலையாளத்தில் சினிமா மற்றும் டி.வி. சீரியல்களில் நடித்து வந்தார். அவர் கடந்த 2 நாளுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். 2 நாள் அறையிலேயே இருந்த அவர் வெளியே வரவே இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில், அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அறையின் உள்ளே சென்று பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. ஹோட்டல் ஊழியர்கள் தாங்களே கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றனர். அங்கு திலீப் சங்கர் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து அவர்கள் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் திலீப் சங்கர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திலீப் சங்கரின் திடீர் மரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவரது மறைவுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 4.07 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள்.
    • மகரவிளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ந்தேதி தொடங்கி கடந்த 26-ந்தேதி முடிந்தது. மண்டல பூஜை காலத்தில் மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர்.

    கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மண்டல பூஜை காலத்தில் 4.07 லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். மண்டல பூஜை முடிந்து கடந்த 26-ந்தேதி இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது.

    இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை (30-ந்தேதி) கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நாளை மாலை 5 மணிக்கு கோவில் நடையை திறக்கிறார்.

    அதன்பிறகு பதினெட்டாம்படி அருகே உள்ள ஆழியில் தீ மூட்டப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு சீசனுக்கான மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை ஐயப்பனுக்கு திருவாபாரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

    அததைத்தொடர்ந்து மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யலாம் எனவும், 18-ந்தேதி வரை நெய்யபிஷேகம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20-ந்தேதி காலை பந்தள மன்னர் பிரதிநிதி சாமி தரிசனம் செய்ததும் கோவில் நடை சாத்தப்படுகிறது.

    பக்தர்களுக்கான அனுமதி மண்டல பூஜை சீசன் காலத்தில் பின்பற்றியதை போன்றே மகரவிளக்கு பூஜை சீசன் காலத்திலும் பின்பற்றப்படுகிறது. தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    தினசரி ஸ்பாட் புக்கிங் 10 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அப்போதைய நிலைக்கு தகுந்தாற்போல் கூடுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மண்டல பூஜை காலத்தில் பம்பையில் 7 ஸ்பாட் புக்கிங் கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மகரவிளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுண்டர் களின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறப்பு கவுண்டர் திறக்கப்படுகிறது. பத்தினம் திட்டாவில் தேவசம்போர்டு மந்திரி வாசவன் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    • சன்னிதானம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
    • அவரிடமிருந்து 4.5 லிட்டர் வெளிநாட்டு மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்றுமுன்தினம் (26-ந்தேதி) முடிந்தது. இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனில் 32.50 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மண்டல சீசனை காட்டிலும் 4.07லட்சம் பக்தர்கள் அதிகமாக வந்துள்ளனர்.

    இந்தநிலையில் சபரிமலை சன்னிதானம் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லம் கிளி கொல்லூர் பகுதியை சேர்ந்த பிஜூ(வயது51) என்பவர் சன்னிதானம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக பணியாற்றி வந்திருக்கிறார்.

    அவர், தான் பணிபுரிந்த ஓட்டலில் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அவர் பணிபுரிந்த ஓட்டலுக்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 4.5 லிட்டர் வெளிநாட்டு மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிகிச்சை பலனின்றி தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.
    • மனநலம் பாதித்த மகனுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விஜயன் வயநாடு மாவட்டத்தில் கட்சி ரீதியாக நன்கு அறியப்பட்டவர் ஆவார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மணிச்சரக்கல் பகுதியை சேர்ந்தவர் விஜயன்(வயது74). வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்து வந்தார். விஜயனுக்கு விஜேஷ், ஜிஜேஷ்(28) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஜிஜேஷ் மனநலம் பாதித்தவர் ஆவார்.

    விஜயனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மனநலம் பாதித்து படுத்தபடுக்கையாக இருந்து வந்த தனது இரண்டாவது மகனான ஜிஜேஷை அவரே கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன் மற்றும்mஅவரது மகன் ஜிஜேஷ் ஆகிய இருவரும் தங்களின் வீட்டில் விஷம் குடித்த நிலையில் கிடந்தனர்.

    அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீடடு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்பு அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தந்தை-மகன் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விஜயனின் மகன் ஜிஜேஷ் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வந்துள்ளார்.

    இதனால் மகன் ஜிஜேசுக்கு விஷம் கொடுத்து விட்டு, விஜயனும் விஷம் குடித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் எதற்காக விஜயன் இந்த முடிவை எடுத்தார்? என்பது உறுதியாக தெரியவில்லை. விஜயன் தனது மனநலம் பாதித்த மகனை மிகவும் கஷ்டப்பட்டே கவனித்தே வந்திருக்கிறார். மேலும் பணப்பிரச்சனையாலும் அவதிப்பட்டு வந்திருக்கிறார்.

    நிதி நெருக்கடி காரணமாக விஜயன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களது தற்கொலைக்கு அதுதான் காரணமா? அல்லது வேறு எதுவும் பிரச்சனையா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மனநலம் பாதித்த மகனுடன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் விஜயன் வயநாடு மாவட்டத்தில் கட்சி ரீதியாக நன்கு அறியப்பட்டவர் ஆவார். அவர் சுல்தான்பத்தேரி கிராம பஞ்சாயத்து தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகித்திருக்கிறார்.

    இந்தநிலையில் அவர் தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன.
    • மது விற்பனை கடந்த ஆண்டை விட ரூ.29.90 கோடி அதிகமாகும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு மது வகைகள் மதுபான விற்பனை கழகத்தின் சில்லரை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கேரளா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு, தீபாவளி, ஓணம், சித்திரை விஷு போன்ற பண்டிகை நாட்களில் கேரளாவில் மது விற்பனை அதிகமாக இருக்கும். அதன்படி தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மது விற்பனை படுஜோராக நடந்துள்ளது.

    கடந்த 22, 23, 24, 25 ஆகிய நாட்களில் மட்டும் ரூ.152.06

    கோடிக்கு மது விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.29.90 கோடி அதிகமாகும். அதாவது 24.50 சதவீதம் கூடுதலாக விற்பனை நடந்துள்ளது. இதில் கிறிஸ்துமஸ் நாளில் மட்டும் ரூ.54.64 கோடிக்கு மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    • மோசடியில் ஈடுபட்டவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
    • பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு சார்பில் நல ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நல ஓய்வூதியத்தை அரசுத்துறைகளில் பணிபுரிந்து வரும் 1,458 பேர் மோசடி செய்து பெற்று வந்தது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடமிருந்து மோசடி பணத்தை வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் மோசடியில் ஈடுபட்டவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நல ஓய்வூதிய மோசடியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 38 பேரை 'சஸ்பெண்டு' செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

    அவர்களில் 34 பேர் வருவாய்த்துறையிலும், 4 பேர் சர்வே மற்றும் நில ஆவண துறையிலும் பணிபுரிபவர்கள் ஆவர். இவர்கள்மொத்தம் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்து 400 பணத்தை முறைகேடு செய்துள்ளனர். அந்த தொகையை 18 சதவீத வட்டியுடன் வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

    • மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம்(நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலையணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தடுக்க இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் பக்தர்கள் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய முடிந்தது.

    மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) மூலமாக தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும், உடனடி முன்பதிவு மூலமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 41 நாட்களாக நடந்து வந்த மண்டல பூஜை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

    இதனால், மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு நேற்று முன்தினம் மாலை தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. அதே அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளித்தார். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் விதமாக நேற்று ஆன்லைன் முன்பதிவு முறையில் 60 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு முறையில் 5 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

    மண்டல பூஜை முடிந்து நேற்று இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. கடந்த 41 நாட்கள் நடந்துவந்த மண்டல பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு மொத்தம் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டு இதே சீசன் காலத்தில் 28 லட்சத்து 42 ஆயிரம் பக்தர்கள் சபரி மலைக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.07லட்சம் பக்தர் கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். அதேபோல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.28 கோடி வருமானம் அதிகமாக கிடைத்துள்ளதாக தற்காலிக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு ஜோதி தரிசனம் ஜனவரி 14-ந்தேதி நடைபெறுகிறது. மகர விளக்கு பூஜை காலத்தில் தினமும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை மண்டல பூஜை காலத்தை போன்றே கடைபிடிக்கப்பட உள்ளது.

    மேலும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களையும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களையும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்களில் உடனடி முன்பதிவு அடிப்படையில் எத்தனை பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது என்று முடிவு எதுவும் தற்போது எடுக்கப்படவில்லை.

    • காட்டு யானை ஒன்று அவர்களது ஜூப்பை வழிமறித்தது.
    • 2 மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்கு சென்றது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா அருகே உள்ள நெல்லியம்பதி பகுதியை சேர்ந்தவர் சுஜய் சர்தார். இவரது மனைவி சாம்பா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு இரவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரசவத்துக்காக நெல்லியம்பதி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை கணவர் சுஜய் வீட்டில் இருந்து ஜீப்பில் அழைத்துச் சென்றார். காட்டு வழியில் அவர்கள் ஜீப்பில் பயணித்தனர்.

    அப்போது சாம்பாவுக்கு பிரசவ வலி அதிகமானது. ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஜீப்பிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    அதே நேரத்தில் உடல் நலம் பாதிப்பால் சாம்பாவை ஜூப்பில் இருந்து இறங்க முடிய வில்லை. இதனால் பிரசவத்துக்கு பின் அவருக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் எதுவும் செய்ய முடிய வில்லை.

    இதையடுத்து அந்த இடத்துக்கு சுதினா, ஜானகி என்ற 2 நர்சுகள் வந்தனர். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த இடத்தில் ஜீப்பில் வைத்தே தொப்புள் கொடியே அறுத்தனர். மேலும் சாம்பாவுக்கு தேவையான முதல்கட்ட சிகிச்சைகளும் அளித்தனர்.

    அதன்பிறகு அருகில் உள்ள நென்மாரா சமூக நல மையத்திற்கு சம்பாவை அழைத்துச் செல்வதற்காக ஜீப்பில் புறப்பட்டனர்.

    அந்த நேரத்தில் காட்டு யானை ஒன்று அவர்களது ஜூப்பை வழிமறித்தது. காட்டு யானை நிற்பதை பார்த்த சுஜய், அவரது மனைவி மற்றும் நர்சுகள் பீதியில் உறைந்தனர். வாகன செயல்பாட்டை நிறுத்தி விட்டு அனைவரும் ஜீப்புக்கு உள்ளேயே அமர்ந்திருந்தனர்.

    யானையிடம் பிரசவமான பெண், அவரது கணவர் மற்றும் நர்சுகள் சிக்கியிருப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். இருந்தபோதிலும் யானை வழியை விட்டு விலகிச் செல்லாமல் அங்கேயே நின்றது.

    பெற்றெடுத்த குழந்தையுடன் சாம்பா தவித்தபடி இருந்தார். பின்பு 2 மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்கு சென்றது. அதன்பிறகு சாம்பா, அவர் பெற்றெடுத்த குழந்தை, கணவர் சுஜய் மற்றும் நர்சுகள் ஆகிய அனவரையும் வனத்துறை யினர் காட்டுப் பகுதியில் இருந்து பாது காப்பாக வெளியே அழைத்து வந்தனர்.

    பின்பு சாம்பா மற்றும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தை ஆகிய இருவரும் நென்மாரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து பாலக்காடு பெண்கள் மற்றும் குழந்தை கள் மருத்துவமனைக்கு தாய் மற்றும் சேய் இருவரும் மாற்றப்பட்டனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    ×