என் மலர்tooltip icon

    கேரளா

    • கட்சியின் மாநில தலைவரை மாற்ற கோரிக்கை.
    • ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடக்க உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக கே.சுகாதரன் இருந்து வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள காங்கிரஸ் கட்சியினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கட்சியின் மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதனால் கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சீரமைக்க கட்சியின் மேலிடம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்று தேர்தல் பணிக்குழு உறுப்பினர் சுனில் கனு கோலு பரிந்துரைத்து கட்சி தலைமைக்கு அறிக்கை கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    கேரள காங்கிரஸ் தலைமையை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கருத்துகள் அடிப்படையில் கேரள காங்கிரஸ் கட்சி தலைவர் மாற்றப்படுவாரா? என்பது தெரியவரும்.

    தற்போதைய தலை வருக்கு பதிலாக அடூர் பிரகாஷ், கொடிக்குன்னில் சுரேஷ், அன்டோ ஆண்டனி உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. அவர்களின் யாரேனும் புதிய தலைவராக நியமிக்கப்படுவாரா? அல்லது சுதாகரனே தலை வராக நீடிப்பாரா? என்பது நாளை தெரியவரும்.

    தலைவர் பதவியில் இருந்து தன்னை நீக்க கட்சி முடிவு செய்தால், அதனை ஏற்றுக்கொள்வேன் என்று சுதாகரன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் கேரள மாநில காங்கிரஸ் தலை வரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. தலைவராக சுதாகரனே தொடர விரும்புவதாக சசிதரூர் எம்.பி. தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கே. சுதாகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுள்ளது.
    • அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த அர்த்தமும் இல்லை.

    கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே. சுதாகரன் இருந்து வருகிறார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியை சீரமைக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி தலைவர் கே. சுதாகரன் கூட மாற்றப்படலாம் என செய்தி வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில் கே. சுதாகரனை மாற்ற தேவையில்லை என திருவனந்தபுரம் தொகுதி எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-

    கே. சுதாகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவரை மாற்ற வேண்டியதில்லை. சுதாகரன் தலைமையில் இடைத்தேர்தலில் கட்சி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் எந்த அர்த்தமும் இல்லை. அவரை தொடர்ந்து தலைவராக செயல்பட விட வேண்டும். அவருக்காக எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும்.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, "அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்னை பதவி விலக வேண்டும் என கேட்டுக்கொண்டால், விசுவாசமான மற்றும் மேலிடத்திற்கு கீழ்படிவான ஒரு தொண்டனாக அவர்களது கட்டளைக்கு கீழ்படிவேன்" என சுதாகரன் தெரிவித்திருந்தார்.

    • கோழிக்கோடில் இயங்கும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன்.
    • இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்

    கேரள மாநிலம் கோழிக்கோடில் இயங்கும் மத்திய அரசு கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன். இவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பாடும் கமெண்ட் ஒன்றை இவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

    கடந்த ஜனவரி 30, 2024, காந்தியின் நினைவு தினத்தன்று சைஜா ஆண்டவன் பேஸ்புக்கில், "இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்" என்று ஒரு கருத்தைப் பதிவிட்டார். இதற்காக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வன்முறையைத் தூண்டும் நோக்கதுடன் கருத்து தெரிவித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153 இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். தனது கருத்து குறித்து பேசிய சைஜா, காந்திஜியின் கொலையைப் பாராட்டுவதற்காக நான் கருத்து தெரிவிக்கவில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. கோட்சேவின் " நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" என்ற புத்தகத்தைப் படித்திருந்தேன்.

    கோட்சேவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். அவரது புத்தகத்தில் சராசரி மனிதனுக்குத் தெரியாத ஏராளமான தகவல்களும் வெளிப்பாடுகளும் உள்ளன. கோட்சே தனது புத்தகத்தில் நமக்கு அறிவூட்டியுள்ளார் என்றும் தான் எந்த அரசியல் கட்சியையும் சார்தவர் இல்லை என்றும் தான் கல்வியாளர் மட்டுமே என்றும் தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

    இந்நிலையில் பேராசிரியர் சைஜா தற்போது தேசிய தொழில்நுட்பக் கழகத்தின், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

    • தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
    • அபானின் காதலி பசானா கல்லூரியில் படித்து வந்தார்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில்  நடந்த  படுகொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு காவல் நிலையத்திற்குச் சென்றார். தனது தாய், சகோதரன், காதலி உள்பட 6 பேரை தான் கொலை செய்துவிட்டதாக அபான் கூறினார்.

    பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறினார். மேலும், தான் விஷம் குடித்து விட்டதாகவும், வீட்டில் உள்ள கியாஸ் சிலிண்டரை திறந்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    இதை கேட்டு அதிர்ந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்ந்தவிட்டு அவர் கூறிய இடங்களுக்கு சென்று 5 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்தனர். அபானுடைய தாய் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார்.

    கொலைகளை செய்த அபானுடைய குடும்பம் பேருமலை பகுதியை சேர்ந்தது. இவரது தந்தை ரஹீம். தாய் ஷெமி. இளைய சகோதரன் அப்சான் (வயது 13). தந்தை ரஹீம் அரபு நாடு ஒன்றில் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    அபான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்று தந்தைக்கு தொழிலில் உதவியாக இருந்தார். கொரானாவுக்கு பின் அபான் கேரளா திரும்பி வந்தார். ரஹீம் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மகன் அபான் தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

    அபானின் 88 வயது பாட்டி சல்மாபீவி பாங்கோட்டில் வசித்து வந்தார். அபானின் சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாஇருவரும் சுள்ளாளத் பகுதியில் வசித்து வந்தனர். அபானின் காதலி பசானா கல்லூரியில் படித்து வந்தார்.

    அபானின் தந்தைக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அபான் தனியாக தொழில் தொடங்கவும் நினைத்துள்ளார். மேலும், அபான் தனது காதலி பசானாவுக்கு கடந்த சில நாட்களுக்குமுன் புதிய வீடு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் அபான் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இதை சமாளித்து புதிதாக தொழில் தொடங்க தனது பாட்டி மற்றும் சித்தப்பாவிடம் பணம் கேட்டுள்ளார் அபான்.

    ஆனால் பணம் தர மறுத்த அவர்கள், காதலிக்கு வீடு வாங்கி கொடுத்ததையும் கண்டித்துள்ளனர். இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தொடர் அழுத்தத்தில் இருந்த அபான் நேற்று மாலை சுத்தியலை எடுத்துக்கொண்டு அனைவரையும் கொலை செய்ய தனது பைக்கில் கிளம்பியுள்ளார்.

    முதலில் பாங்கோட்டில் உள்ள பாட்டி சல்மாபீவியின் வீட்டிற்கு சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அடுத்து சுள்ளாளத் பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டிற்கு சித்தப்பா லத்தீப், சித்தி ஷாகிதாவையும் சுத்தியலால் அடித்துக் கொன்றார். 

    அடுத்ததாக காதலி பசானாவின் வீட்டிற்கு சென்ற அபான் அவரை பைக்கில் அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

    ஆத்திரம் அடங்காத அப்சாம் வீட்டில் தயார் தாயார் ஷெமி, தம்பி அப்சானை சுத்தியலால் தாக்கினார். மாடி அறைக்கு சென்று காதலி பசானாவையும் சுத்தியலால் அடித்தார். தம்பியும், காதலியும் ரத்த வெள்ளியதில் உயிரிழக்க, தாயார் படுகாயங்களுடன் மயங்கினார்.

    அனைவரும் உயிரிழந்ததாக நினைத்து வீட்டில் கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள விஷம் அருந்தியுள்ளார். அதன்பின் ஆட்டோவில் வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார்.

    அப்சான் வீட்டுக்கு வந்த போலீசார் தயார் ஷெமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெவ்வேறு இடங்களில் இருந்த மற்ற ஐவரின் உடல்கள் மீட்கப்பட்டன. விஷம் குடித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அப்சான் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடந்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

    • "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்"
    • தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்று தெரிவித்துள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

    சமீபத்தில் பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்து சசி தரூர் பாராட்டி பேசினார். கேரளாவில் ஆளும் இடது முன்னணி ( எல்.டி.எப் ) அரசின் கொள்கைகளையும் சசி தரூர் பாராட்டி பேசினார். இது காங்கிரஸ் தலைவர்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

     

    கேரள மாநில காங்கிரஸ் சரியான தலைமை இன்றி தவிப்பதாகவும் அவர் கூறியது உள்ளூர் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கிடையே கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சசி தரூர் சந்தித்து பேசினார்.

    அரை மணி நேர சந்திப்பில் ராகுலிடம் தான் சில முக்கிய பிரச்சனைகளை எடுத்துக்கூறியதாக சசி தரூர் தெரிவித்தார். மேலும் அன்றைய தினம் செய்தியாளர்களிடம் உட்கட்சி பிரச்சனை பற்றி பேச மறுத்துவிட்டார். ''இன்று முக்கிய கிரிக்கெட் மேட்ச். எல்லோரும் சென்று பாருங்கள்'' என்று மட்டும் கூறிவிட்டு நழுவினார்.

    இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் நேர்காணலில் பங்கேற்ற சசி தரூர், நான் எப்போதும் அணுகக்கூடியவனாகவே இருக்கிறேன். கட்சிக்காக பணியாற்றத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், எனக்கு வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றன.

    கட்சி மாறுவது குறித்த வதந்திகள் உண்மை இல்லை. என்னை ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை. புதிய வாக்காளர்களை ஈர்க்க காங்கிரஸ் தனது தளத்தை கேரளாவில் விரிவுபடுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

    கேரளாவில் தேர்தலுக்கு ஒரு ஆண்டு மட்டுமே உள்ளது. அதற்குள் காங்கிரஸ் தனது ஆதரவு மட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் கேரளாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

     

    இதற்கிடையே சசி தரூரை வரவேற்கத் தயாராக இருப்பதாகக் கேரள மாநில சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது. சசி தரூர் அரசியல் அனாதையாக விடப்பட மாட்டார் என்றும் தாங்கள் அவரை வரவேற்போம் என்றும் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். சசி தரூருக்காக கட்சி எப்போதும் ஒரு கதவைத் திறந்து வைக்கும் என்று சிபிஎம் மாநில பொதுச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் கூறினார்.

    சமீபத்தில் சசி தரூரின் எக்ஸ் பதிவு ஒன்றும் வைரலானது. 18 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலக் கவிஞர் தாமஸ் கிரே எழுதிய ஒரு கவிதையிலிருந்து சில வரிகளை சசி தரூர் பகிர்ந்தார். "அறியாமை பேரின்பமாக இருக்கும் இடத்தில், புத்திசாலித்தனமாக இருப்பது முட்டாள்தனம்" என்று அந்த கவிதை கூறுகிறது. சசி தரூரும் அதையே மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது. 

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர்.
    • விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி அடிமாலி அருகே உள்ள பன்னியர்குட்டி பகுதியை சேர்ந்தவர் போஸ்(55). இவரது மனைவி ரீனா (வயது48). இவர்கள் இருவரும் நேற்று முள்ளக்காணம் பகுதியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு ஜீப்பில் சென்றனர்.

    பின்பு இரவில் அங்கிருந்து தங்களின் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஜீப்பை ஆபிரகாம் (50) என்பவர் ஓட்டி வந்தார். பன்னியர்குட்டியில் உள்ள மசூதி அருகே வந்தபோது அவர்களது ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்தில் விழுந்தது.

    இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த இடம் செங்குத்தான பள்ளத்தாக்கு பகுதி ஆகும்.

    இதனால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் ஜீப் விழுந்து கிடந்த பகுதிக்கு சென்றனர். ஜீப்புக்குள் சிக்கி படுகாயங்களுடன் கிடந்த போஸ், ரீனா, ஆபிரகாம் ஆகிய 3 பேரையும் மீட்டு பள்ளத்தாக்கில் இருந்து மேலே கொண்டு வந்தனர். பின்பு ஆம்புலன்சு மூலமாக 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே போஸ் மற்றும் ரீனா ஆகிய இருவரும் இறந்தனர். எர்ணாகுளத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆபிரகாம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் கணவருடன் பலியாகி இருக்கும் ரீனா, கேரளாவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனையான பீனாமோலின் சகோதரி ஆவார். பல ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், 3 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஒலிம்பிக் வீராங்கனையின் சகோதரி உள்பட 3 பேர் பலியான சம்பவம் இடுக்கியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஆண்டு (2024) ஜூலை 30-ந்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டக்கை, சூரல்மலை, வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாயமாகிவிட்டனர். உயிர் பிழைத்தவர்கள் தங்களின் வீடு, உடமைகள் அனைத்தையும் இழந்தனர். அவர்களுக்கு புதிதாக வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

    அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வயநாடு மக்களுக்கான மறுவாழ்வு பணிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்றும், அதனை வழங்க வேண்டும் எனவும் மத்திய அரசை கேரள அரசு வலியுறுத்தியது.

    ஆனால் கேரள அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த நிலையில் பேரிடர் நிவாரணத்துக்கு ரூ.2ஆயிரம் கோடி வழங்க வேண்டும், பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில ஆளும் அரசான இடது ஜனநாயக முன்னணியின் வயநாடு மாவட்ட குழு அறிவித்துள்ளது.

    இந்த போராட்டம் வருகிற 24-ந்தேதி காலை 10 மணி முதல் மறுநாள் (25-ந்தேதி) காலை 10 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரம் நடத்தப்படும் என்றும், முன்னதாக கேரள இல்லத்தில் இருந்து பேரணி நடைபெறும் எனவும் கூறியிருக்கின்றனர்.

    இந்த போராட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள், தன்னார்வலர்கள், இடது ஜனநாயக முன்னணி எம்.பி.க்கள், பிற மாநில எம்.பி.க்கள், தேசிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 10 மீட்டர் தூரத்தில் இருந்தே நோயாளியை மருத்துவர் பரிசோதிக்க முடியும்.
    • ‘புளூடூத் ஸ்டெதஸ்கோப்’ உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான உபகரணம் 'ஸ்டெதஸ்கோப்'. இதனை பயன்படுத்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் இதயத்துடிப்பு, நுரையீரல், இரைப்பை, குடல், கருப்பை ஆகியவற்றில் ஏற்படும் ஒலிகள் உள்ளிட்டவைகளை கேட்க முடியும்.

    அதனை வைத்து தான் நோயாளியின் உடல் நிலை எந்த நிலையில் இருக்கிறது என்பதை மருத்துவர் கண்டு பிடித்து சிகிச்சையை தொடங்க முடியும். இத்தகைய முக்கியத்துவம் நிறைந்த ஸ்டெதஸ்கோப்பை பணியில் இருக்கும் போது மருத்துவர்கள் எப்போதும் தங்களுடன் வைத்திருப்பர்.

    இதனால் டாக்டருக்கான அடையாளமாக 'ஸ்டெதஸ் கோப்' இருந்து வருகிறது. இந்தநிலையில் கேரளாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர், புளூடூத் ஸ்டெதஸ்கோப்பை உருவாக்கியிருக்கிறார். கேரள கால்நடை பல்கலைக்கழகத்தில் மன்னுத்தி வளாகத்தில் உள்ள கால்நடை உற்பத்தி மேலாண்மை கல்லூரியின் டாக்டர் ஜான் ஆபிரகாம் தான் அதனை உருவாக்கி உள்ளார்.

    இந்த ஸ்டெதஸ்கோப் இரண்டு தனித்தனி பாகங்கள் கொண்டதாக இருக்கிறது. ஒன்று நோயாளியின் உடலிலும், மற்றொன்று மருத்துவரின் காதுகளிலும் வைக்கப்படும். நோயாளியின் உடலில் இருந்து உருவாகும் சத்தம், டாக்டருக்கு அவர் காதில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி வழியாக கேட்கிறது.

    இதன் மூலம் 10 மீட்டர் தூரத்தில் இருந்தே நோயாளியை மருத்துவர் பரிசோதிக்க முடியும். இதனால் நோயாளி மற்றும் மருத்துவருக்கு இடையேயான நேரடி உடல் தொடர்பை குறைக்கிறது. நோயாளியின் இதய துடிப்பு, நுரையீரல் ஒலிகள் மற்றும் பிற சத்தங்களை தூரத்தில் இருந்தே மருத்துவர் கேட்க முடியும்.

    மேலும் பாரம்பரிய ஸ்டெதஸ்கோப்புடன் ஒப்பிடுகையில், இந்த 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' விலை குறைவாகும். பாரம்பரிய 'ஸ்டெதஸ்கோப்' விலை பொதுவாக ரூ.8ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். ஆனால் 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' விலை ரூ.5ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

    காட்டு விலங்குகள் மற்றும் ஆபத்தான விலங்குகளுடன் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் உடல் ரீதியான தொடர்பு இல்லாத காரணத்தால் விலங்குகள் தாக்கும் அபாயம் மற்றும் தொற்று நோய்கள் பரவல் உள்ளிட்ட நேரத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    'புளூடூத் ஸ்டெதஸ்கோப்' உருவாக்கியுள்ள டாக்டர் ஜான் ஆபிரகாம், அதற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளார். மேலும் அவர் இதற்கு முன்பு கோழி கழிவுகளில் இருந்து பயோடீசல் உற்பத்தி செய்வதற்கான தயாரிப்புக்கு காப்புரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஜிம்மில் மயங்கி விழுந்த சல்மானை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள அம்பலவயல் பகுதியில் செயல்பட்டு வரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 24 வயதான சல்மான் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உடற்பயிற்சியின் போது திடீரென இளைஞர் மயங்கிவிழுவதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறியடித்து ஓடிவரும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    மயங்கி விழுந்த சல்மானை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சல்மான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சல்மானின் இறப்புக்கான காரணங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என்று சொல்லப்படுகிறது. 

    • அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்து.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் நகார்கோவிலில் இருந்து கல்லூரி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழந்து விபத்துக்குள்ளானது.

    மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே அதிவேகத்தின் காரணமாக வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

    விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத் தொடங்கும்.
    • அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.

    கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தில் ஒரு வித்தியாசமான தகராறு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது பணம் அல்லது நிலம் பற்றியது அல்ல. மாறாக சேவல் காலையில் கூவுவது பற்றியது. ராதாகிருஷ்ண குருப் என்ற முதியவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு இது.

    ராதாகிருஷ்ண குருப் நீண்ட காலமாக இரவில் தூக்கமில்லாமல் இருந்து வந்தார். தனது பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் தினமும் அதிகாலை 3 மணியளவில் கூவத்தொடங்கியதாகவும், இதனால் தனக்கு சரியான தூக்கம் வராமல் போனதாகவும் அவர் நொந்துகொண்டார். தூக்கமில்லாமல் ராதாகிருஷ்ண குருப்பின் உடல்நிலையும் மோசமடைந்தது.

    இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ண குருப் ஒரு அதிரடி முடிவை எடுத்தார். சேவல் கூவுவது தனது அமைதியைக் குலைப்பதாகக் கூறி, இந்தப் பிரச்சினை தொடர்பாக அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் (RDO) ராதாகிருஷ்ண குருப் புகார் அளித்தார். அதிகாரிகள் புகாரை தீவிரமாக எடுத்துக் கொண்டு அதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர்.

    புகாரை விசாரித்த பிறகு, வீட்டின் மேல் தளத்தில் சேவல் வைக்கப்பட்டிருந்ததையும், அதனால் தான் அது கூவும் சத்தம் அதிகமாகக் கேட்டுள்ளது என்றும் RDO கண்டறிந்தார்.

    மேல் தளத்திலிருந்து கோழி கொட்டகையை அகற்றி வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரிடம் கூறி அதிகாரிகள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். இதற்காக, அதிகாரிகள் அனில் குமாருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.  

    • சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.
    • அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏழு சீனியர்கள் முதலாம் ஆண்டு மாணவரை கொடூரமான முறையில் ரேகிங் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    திருவனந்தபுரத்தில் உள்ள கரியவட்டம் அரசு கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த பிப்ரவரி 11 அன்று கரியவட்டம் அரசுக் கல்லூரியில் சீனியர்களுக்கும் ஜூனியர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்தது. இதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்தார். அவர் சீனியர்களுக்கு எதிராக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    காவல்துறையிடம் புகார் செய்ததால், சீனியர்கள் மேலும் கோபமடைந்தனர். புகார் அளித்த முதலாமாண்டு மாணவரின் விடுதிக்குள் நுழைந்து அவரை தேடினர். அவரைக் காணவில்லை என்பதும், அவருடன் இருந்த மற்றொரு மாணவரை அவர்களுடன் அழைத்துச் சென்றனர்.

    ஒரு அறையில் வைத்து அந்த ஜூனியர் மாணவரை மண்டியிட்டு உட்கார வைத்து சுமார் ஒரு மணி நேரம் அடித்ததுள்ளனர். குடிக்க தண்ணீர் கேட்டபோது, அதில் எச்சில் துப்பிய பிறகு தண்ணீர் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்தார். அவர் இந்த தண்ணீரைக் குடிக்க மறுத்தபோது, மேலும் தாக்கப்பட்டார்.

    கல்லூரியின் ராகிங் தடுப்புப் பிரிவு ஜூனியர் மாணவரின் புகாரை விசாரித்தது. கல்லூரி மற்றும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் ஆராய்ந்ததில் நடந்தது உண்மைதான் என்பதை கண்டறிந்து கல்லூரியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    அதன் அடிப்படையில் 7 சீனியர் மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் போலீசார் ராகிங் தடுப்புச் சட்டத்தின கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  

    ×