என் மலர்
கேரளா
- ஆபரேசன் ‘டி’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை.
- தலைமறைவான குற்றவாளிகள் 1501 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் போதைப் பொருள் பயன்படுத்து பவர்கள் சம்பந்தப்பட்ட குற்ற வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் அதனை கட்டுப்படுத்த அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஆபரேசன் 'டி' என்ற பெயரில் மாநிலம் முழு வதும் கடந்த மாதம் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எம்.டி.எம்.ஏ., ஹெராயின், மெத்தம்பேட்டமைன், பிரவுன் சுகர், நைட்ரஸெபம் மாத்திரைகள், கஞ்சா, கஞ்சா சாக்லெட்டுகள், எரிசாராயம் என பல்வேறு வகையிலான போதை வஸ்துகள் போலீசாரின் வேட்டையில் சிக்கின.
மாநிலம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியே 9 லட்சம் ஆகும். இது தொடர்பாக 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதவிர கலால் துறை தொடர்பான வழக்குகளில் தலைமறைவான குற்றவாளிகள் உள்பட1501 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
- இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை சங்கிலியால் கட்டிவைத்து நாய்களைப் போல மண்டியிட்டு நடக்கவும், தரையில் இருந்து நாணயங்களை நக்கவும் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை, ஆனால் இது தொடர்பாக , விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும்.
- கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வழக்கமான பூஜை, வழிபாடுகளுடன் உத்சவ பலி, ஸ்ரீபூத பலி உள்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவில் வருகிற 10-ந் தேதி இரவு சரம்குத்தியில் பள்ளி வேட்டையும், 11-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழாவும் நடைபெறும்.
வழக்கமாக சபரிமலையில் ஆராட்டு ஊர்வலத்திற்கு நெற்றிப்பட்டம் கட்டிய ஒரு யானை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு முதல் ஊர்வலத்திற்கு 2 யானைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆராட்டு விழா, சாமி ஊர்வலங்களுக்கு பயன்படுத்தப்படும் யானைகளுக்கு போதிய ஓய்வு அளிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் வருகிற 11-ந் தேதி நடைபெறும் ஆராட்டு சாமி ஊர்வலத்திற்கு சபரிமலையில் இருந்து பம்பைக்கு ஒரு யானையும், ஆராட்டுக்கு பின் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மற்றொரு யானையும் பயன்படுத்தப்படும்.
இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெளிநல்லூர் மணிகண்டன் என்ற யானை நேற்று சபரிமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. மற்றொரு யானையை பம்பையில் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஊர்வலத்தின் போது செண்டை உள்ளிட்ட மேளங்களை தவிர்த்து தவில் உள்ளிட்ட மேளங்கள் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
- பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயனின் மகள் வீணா. இவர் எக்சா லஜிக் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் கொச்சின் மினரல் ரூட்டில் லிமிடெட் என்ற தனியார் சுரங்க நிறுவனத்தில் வீணா லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்குவதற்காக தான் எக்சாலஜிக் மற்றும் அதன் துணை நிறுவனமான எம்பவர் இந்தியா பணம் பெற்றதாக வீணா தரப்பில் கூறப்பட்டது.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் வீணா விஜயன் உள்பட 27 பேர் மீது லஞ்ச குற்றம் சாட்டி அவர்கள் மீது கொச்சி பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.
கோர்ட்டு இந்த புகாரை ஏற்றுக் கொண்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பவார்கள்.
160 பக்க குற்றப்பத்திரிகையில் வீணா மற்றும் அவரது நிறுவனம் மீது நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 447-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இல்லாத செலவு களை அதிகப்படுத்தி போலி பில்களை உருவாக்குவதன் மூலம் மோசடி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது
இந்த பிரிவின் கீழ் குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இந்த புகார் சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை எட்டி உள்ளது.
மகள் மீது லஞ்சக் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து பினராய் விஜயன் விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் எம்.பி. கூறுகையில், முதல்-மந்திரியோ அவரது மகளோ ஆதாரங்களை தவிர்க்க முடியாது. பணம் வாங்கியவர்கள் இறுதியில் விளைவுகளை சந்திப்பார்கள். இது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க கூடிய குற்றமாகும்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வழி தேடுவதற்காக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளனர். இந்த விஷயத்தில் பினராய் விஜயன், முதல்-மந்திரி பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றார்.
மதுரை மாநாட்டிலேயே கட்சி இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். சி.பி.எம். கட்சி கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதை விடுத்து பினராய் விஜயனை காப்பாற்றினால், அது சி.பி.எம்.மின் வீழ்ச்சியின் தொடக்கத்தை குறிக்கும் என்றார்.
கேரள சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான சதீசன் கூறுகையில், இது மிகவும் தீவிரமான விஷயம். குற்றப்பத்திரிகையில் எந்த சேவைகளையும் வழங்காமல் வீணா பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பினராய் விஜயனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறும் போது, பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே பினராய் விஜயன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும் என்றார்.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன.
- பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோல் மாதம்தோறும் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வந்தபடி உள்ளனர்.
இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் வருகிற மே மாதத்தின் மத்தியில் மாதாந்திர பூஜை நடைபெறும் போது சபரிமலைக்கு வர திட்டமிடப்பட்டு வருவதாக தெரிகிறது.
சபரிமலை செல்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் ஜனாதிபதி, பின்பு விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக நிலக்கல்லுக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்லும் அவர், பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதுபற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. ஜனாதிபதியின் யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி மாளிகை அதிகாரிகள், திருவிதாங்கூர் தேவசம்போர்டை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
மேலும் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்திருக்கின்றனர்.
- விகாஸ் நம்பியாரின் வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை காணவில்லை.
- விகாஸ் நம்பியாரின் வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. இதனால் மலையோர கிராம மக்கள் அச்சத்துடனே வாழக்கூடிய நிலை நிலவுகிறது.
இந்தநிலையில் காசர்கோட்டில் ஊருக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காசர்கோடு கல்லடசீட்டா பகுதியை சேர்ந்தவர் விகாஸ் நம்பியார். இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வருகிறார்.
இதனால் கல்லடசீட்டாவில் உள்ள அவரது வீட்டை கிரிஷ் என்பவர் பராமரித்து வருகிறார். இந்தநிலையில் விகாஸ் நம்பியாரின் வீட்டில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்ட நாயை காணவில்லை. அதனை கிரிஷ் தேடியபோது சற்று தொலைவில் எஸ்டேட் பகுதியில் நாயின் ஒரு கால் பகுதி துண்டாக கிடந்தது.
ஏதே விலங்கு கொன்றிருப்பதை யூகித்த அவர், அதுபற்றி டெல்லியில் உள்ள விகாஸ் நம்பியாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருந்த வீடியோவை டெல்லியில் இருந்தவாரே பார்த்தார்.
அப்போது ஒரு நாள் இரவில் சிறுத்தை ஒன்று நாய் இருந்த பகுதியில் நடந்து சென்றதும், அதற்கு மறுநாள் வீட்டின் மாடியில் சிறுத்தை நடமாடியபடி நின்றதும், மாடியில் இருந்து கீழே இருக்கும் நீச்சல் குளத்தை பார்த்துக்கொண்டு சிறுத்தை நின்றதும் பதிவாகியிருந்தது. இதனால் ஒரு சிறுத்தை தொடர்ந்து அந்த பகுதியில் நடமாடி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் விகாஸ் நம்பியாரின் வீட்டில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளும் வனத்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதனடிப்படையில் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
- ஏப்ரல் 18-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது.
- சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து விளக்கு ஏற்றினார்.
பின்பு காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றம் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறுகிறது.
மறுநாள் (11-ந்தேதி) பகல் 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருவிழா கொடியிறக்கப்படுகிறது. அத்துடன் 10 நாட்கள் ஆராட்டு திருவிழா முடிவடைகிறது.
அதன் தொடர்ச்சியாக சித்திரை விஷூ பண்டிகை மற்றும் மாதாந்திர பூஜை வருவதால் ஆராட்டு திருவிழாவுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படவில்லை. ஏப்ரல் 14-ந்தேதி சித்திரை விஷூ திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தந்திரிகள் மற்றும் மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கைநீட்டம் வழங்கு வார்கள்.
சித்திரை விஷூ மற்றும் மாதாந்திர பூஜை முடிவ டைந்து ஏப்ரல் 18-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது. பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகை அடுத் தடுத்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.
அந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் என்றும், சித்திரை விஷூ தினத்தில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப் படும் எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித் துள்ளது.
பக்தர்கள் 18 நாட்களும் வழக்கமாக நடக்கும் பூஜை களில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம், இரு முடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டும் சாமி தரிச னத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.
சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்ற நடைமுறை கடைபிடிக்கப் படுகிறது. உடனடி சாமி தரிசனத்துக்காக பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. பங்குனி ஆராட்டு திருவிழா இன்று தொடங்கியிருப்பதை தொடர்ந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
- எம்புரான் திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியானது.
- இப்படத்திற்கு தடைவிதிக்க கோரி பா.ஜ.க. நிர்வாகி விஜேஷ் கேரள ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார்.
திருவனந்தபுரம்:
மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் நடித்திருக்கும் படம் எல்2: எம்புரான். இந்தப் படம் மார்ச் 27-ம் தேதி வெளியானது.
இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல் மந்திரியாக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதாக எதிர்ப்பு எழுந்தது.
இதற்கிடையே, இந்தப் படத்தில் இந்திய ராணுவம் குறித்தும் குஜராத் கலவரம் குறித்து வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் நிர்வாகி வி.வி.விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விளம்பர நோக்கத்துடன் கொடுக்கப்படும் புகார் என கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், எம்புரான் படத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.
இந்நிலையில், எம்புரான் படத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த திருச்சூர் மாவட்ட நிர்வாகி விஜேஷ் மீது ஒழுங்கு நடவடிக்கையாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது.
- ஒரு தடவை கோவிலை சுற்றி வரும்போது 4 தூக்க நேர்ச்சை நடந்து முடிகிறது.
- ஒவ்வொரு தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்ப்பணம் நடைபெறும்.
கொல்லங்கோடு:
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தூக்கத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த விழாவின் போது நடைபெறும் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை சிறப்பு வாய்ந்தது.
இந்த விழாவில் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குழந்தைகளுடன் பங்கேற்பது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தூக்கத் திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூக்க நேர்ச்சைக்கு முதல் நாள் நடக்கும் வண்டியோட்டம் நேற்று மாலை நடந்தது.
தூக்க வில்லை சோதனை செய்யும் வகையில் கோவிலை சுற்றி நடத்தப்பட்ட வண்டியோட்டம் நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 4 மணியளவில் வழக்கமான பூஜைகள் முடிந்ததும் தூக்கக்காரர்கள் முட்டு குத்தி நமஸ்காரம் செய்தனர். தொடர்ந்து 5 மணிக்கு அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார். அதன்பிறகு காலை 6.30 மணிக்கு முதல் தூக்க நேர்ச்சை தொடங்கியது. இதில் முதல் தூக்கம் தேவி தூக்கம்.
அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம் தொடங்கியது. ஒரு வில்லில் 4 குழந்தைகளை தூக்ககாரர்கள் தூக்கிச் சென்றனர். தூக்க நேர்ச்சையில் பங்கேற்க 1166 குழந்தைகள் பதிவு செய்துள்ளனர். இதற்காக தூக்கதாரர்களும் தயாராக இருந்தனர்.
தூக்க வில்லானது ஒரு தடவை கோவிலை சுற்றி வரும்போது 4 தூக்க நேர்ச்சை நடந்து முடிகிறது. அதன்படி வில்லானது 350-க்கும் மேற்பட்ட முறை கோவிலை சுற்றி வந்து தூக்க நேர்ச்சை நிறைவடைகிறது.
ஒவ்வொரு தூக்க நேர்ச்சை முடிந்த உடன் குருதி தர்ப்பணம் நடைபெறும். இன்று இரவு வரை இந்த நிகழ்ச்சி நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூக்கத் திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் மற்றும் கேரளா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதை கருத்தில் கொண்டு போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
- இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும்.
சபரிமலை:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதுதவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோவில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.
விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி, 11-ந்தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது.
அதைத்தொடர்ந்து சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். விஷூ பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். அதே நடைமுறை இப்போதும் பின்பற்றப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நேரடியாகவும், மற்றவர்கள் மேல் நடைபாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- அதில் உள்ள காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது
- எம்புரான் உள்பட அவர் நடித்த 'குருதி' முதல் 'ஜன கண மன' படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே உள்ளன.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி பான் இந்தியா அளவில் வெளியான படம் எம்புரான். கடந்த 2019 இல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் இது.
படம் வெளியாதுமுதல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இப்படத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அதற்கு காரணம் படத்தில் 2002 இல் மோடி முதல்வராக இருந்தபோது நடைபெற்ற குஜராத் கலவரத்தை மையப்பையடுத்திய காட்சிகளும், வில்லனும் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தினால் படத்தின் 17 காட்சிகள் வரை நீக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. நடிகர் மோகன்லாலும் தனது சமூக ஊடகப் பதிவில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில் படத்தின் இயக்குனரான பிருத்விராஜ் மீது வலதுசாரி அமைப்புகள் வசைமாரி பொலிந்து வருகின்றன.
ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகை ஒன்று பிருத்விராஜை தேச விரோதி என்றும் இந்து விரோதி என்றும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.
அந்த கட்டுரையில், பிருத்விராஜ் தேச விரோதிகளின் குரலாக உள்ளார். இது எப்போது தெரிய வந்ததென்றால், இது எப்போது தெரியவந்தது என்றால். தீவுகளை நவீனமயமாக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது அதனை வகுப்புவாத கண்ணோட்டத்தில் காண்பிக்கும் விதமாக 'லட்சத் தீவுகளைக் காப்போம்' என்ற பிரசாரத்தை முன்னெடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார்.
சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தில் ஜாமியா மாணவர்களுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். சமூக வலைதளங்களிலும் சிஏஏ போராட்டத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டார்.

எம்புரான் படத்தின் தொடக்கத்தில், காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனை என்று குறிப்பிட்டனர். ஆனால், அதில் உள்ள காட்சிகள் அனைத்தும் கருத்தியல் விஷத்தை பரப்பும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிருத்விராஜை விமர்சித்து பாஜக இளைஞர் அமைப்பான ''பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா' மாநில பொதுச் செயலாளர் கணேஷ் தனது பேஸ்புக் பதிவில்,"நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜின் வெளிநாட்டு தொடர்புகள் பற்றி விசாரிக்கவேண்டும். ஆடு ஜீவிதம் படத்திற்கு பின், அவருடைய திரைப்படங்கள் தேசவிரோத கருத்துகளையே பரப்பி வருகின்றன.

எம்புரான் உள்பட அவர் நடித்த 'குருதி' முதல் 'ஜன கண மன' படம் வரை தொடர்ந்து பயங்கரவாத சித்தாந்தங்களை நியாயப்படுத்தும் படங்களாகவே உள்ளன. ஆடுஜீவிதம் படப்பிடிப்பின்போது அவர் ஜோர்டன் நாட்டில் சிக்கிக் கொண்டார். அப்போது, அவர் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது பற்றி விசாரணை நடத்தவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
- கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
- அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
கேரளாவில் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியின் பாதுகாப்பு வாகனத்தை மறித்து நின்ற யுடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரியங்கா காந்தி இரவு 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார்.
மன்னுத்தி பைபாஸ் சந்திப்பில் பிரியங்கா காந்தியின் வாகனத்துக்கு முன் சென்ற பாதுகாப்பு வாகனம் தொடர்ந்து ஹாரன் அடித்ததால் அதனை மறித்து கேரள யூடியூபரான அனீஷ் ஆபிரஹாம் தனது காரை நிறுத்தியுள்ளார்.
அவரைக் காவல்துறையினர் அங்கிருந்து செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு வாகனத்தை மறித்தது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்படி வாகனம் ஓட்டியது, காவல்துறையினரிடம் அத்துமீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் அனீஷ் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
மேலும் அவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் அவர் ஜாமீனில் வெளியானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிரியங்கா காந்தியின் பாதுகாப்பில் அலட்சியம் காட்டப்படுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.






