என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் 5 மாவட்டங்களில் 581 பேருக்கு நிபா பாதிப்பு
    X

    கேரளாவில் 5 மாவட்டங்களில் 581 பேருக்கு நிபா பாதிப்பு

    • மலப்புரம் மாவட்டத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கேரளாவின் தெற்கு பகுதிகளுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு பரவ வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வைரஸ் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் சமீப காலமாக நிபா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வைரஸ் தாக்குதலுக்கு பிளஸ்-2 மாணவி உள்ளிட்ட 2 பேர் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பலியானதை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியது. இதில் பாலக்காடு, மலப்புரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் தான் நிபா பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்தது.

    பாலக்காடு மாவட்டத்தில் 420 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 96 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 63 பேரும், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என 581 பேர் நிபா தொடர்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 29 பேர் அதிக ஆபத்திலும், 78 பேர் ஆபத்தான நிலையிலும் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    மலப்புரம் மாவட்டத்தில் 14 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நலம் குறித்து விசாரித்த மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், தகுந்த சிகிச்சை அளிக்கவும், கட்டுப்பாடு மண்டலங்கள் அறிவிப்பது குறித்து முடிவு செய்ய மருத்துவ வாரியத்திற்கு அறிவுறுத்தினார்.

    இதற்கிடையில் கேரளாவின் தெற்கு பகுதிகளுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு பரவ வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வவ்வால்கள் மூலமே இந்த நோய் பரவுவதாக கூறப்படும் நிலையில், நோய் தொற்றின் மூலத்தை கண்டறிவது மிகவும் சவலாலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×