என் மலர்tooltip icon

    டெல்லி

    • பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
    • தொடர் அமளியால் மக்களவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் அவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே பாராளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், மக்களவையில் மூன்று மசோதாக்களை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார். அவற்றில், அரசியலமைப்பு திருத்த மசோதாவும் அடங்கும். இதேபோன்று, யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025, ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆகியவற்றை இன்று தாக்கல் செய்துதுள்ளார்.

    இந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது, அதன் 54-வது பிரிவில் திருத்தம் கோருகிறது. இதன்படி, முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள், அந்த நேரம் நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ், அவர்கள் குற்றம் செய்திருக்கிறார்கள் என்ற தீவிர குற்றச்சாட்டுகளின்படி கைது செய்யப்பட்டாலோ அல்லது காவலில் வைக்கப்பட்டாலோ அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கான சட்ட வடிவை வழங்குகிறது.

    இதனால், கைது செய்யப்பட்ட 31-வது நாள் முதலமைச்சர் ஆனவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பலாம். காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், முதலமைச்சர் அல்லது அமைச்சர்களை லெப்டினன்ட் கவர்னர் பதவி நியமனம் செய்யும்போது, அதனை தடுக்க உட்பிரிவு எதுவும் இதில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாக்கள், பாராளுமன்றத்தின் கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமித்ஷா கூறினார்.

    இதனால், இரு அவைகளின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர்களுடைய ஆலோசனைகளை வழங்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஆனாலும், அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாட உள்ளனர்.
    • விஜய் வசந்த் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.

    டெல்லியில் நடைபெறும் 14 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் சார்பாக பல்வேறு அணிகள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்தனர்

    தமிழகத்திற்காக விளையாடும் அணிகளில் கன்னியாகுமரி சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாட உள்ளனர்.

    இந்நிலையில் டெல்லிக்கு வருகை தந்த இளம் கிரிக்கெட் வீரர்களை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சந்தித்து போட்டிகளில் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

    அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார்.

    தொடர்ந்து தமிழகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்திருந்த இளம் கிரிக்கெட் அணிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து விஜய் வசந்த், அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    • ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
    • இந்த மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    பீகார் வாக்காளர் திருத்த விவகாரத்தால் பாராளுமன்ற மக்களவை கூடியதும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், பிற்பகல் 12 மணிக்கு பிறகு அவை மீண்டும் கூடியதும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதா தாக்கல் ஆனது. மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்

    அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பீகார் வாக்காளர் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினார்கள். இதனால் ஏற்பட்ட அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

    இதேபோல, மாநிலங்களவையிலும் பீகார் வாக்காளர் திருத்த விவகாரம் எதிரொலித்தது. இது தொடர்பான விவாதத்துக்கு மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    • பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர்.
    • சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது

    ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவால் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த நிலையில் அந்த பதவிக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

    இதில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி வெப்பாளர் தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடி அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவருடன் உடன் இருந்தனர்.

    நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.

    தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் தன்கர் பெற்றதை விட இப்போது பாஜக தலைமை தற்போது சற்று பெரிய வெற்றியை எதிர்பார்க்கிறது என்று சொல்லப்படுகிறது.

    • நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.
    • டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி மால்வியா நகரில் உள்ள எஸ்.கே.வி. அவுஸ், கரோல் பாக் பகுதியில் உள்ள ஆந்திரப் பள்ளிகள் உள்ளிட்ட 50 பள்ளிகளை குறிவைத்து கடந்த 48 மணி நேரத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    இதேபோல் நேற்று முன்தினமும் மர்ம நபர்களால் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

    பள்ளி மாணவர்கள் வெளியேற்றப்பட்டு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொண்டு போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். பள்ளிகளில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    கடந்த மாதம் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மிரட்டல் விடுத்த 12 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். விசாரித்ததில் அவன் விளையாட்டாக செய்ததாக சொல்ல அந்த சிறுவனை எச்சரித்து அனுப்பினர்.

    டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக உள்ளதால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிக எண்​ணிக்​கை​யில் வரு​டாந்​திர பாஸ் வாங்​கப்​பட்ட பட்​டியலில் தமிழ்​நாடு முதலிடத்தில் உள்​ளது.
    • சுங்​கச்சாவடிகளில் சுமார் 1.39 லட்​சம் பரிவர்த்​தனை​கள் பதி​வாகி​யுள்​ளன.

    புதுடெல்லி:

    தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனியார் வாகனங்கள் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்தி வாங்க கூடிய பாஸ்டேக் பாஸ் திட்டம் கடந்த 15-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியை ஓராண்டு அல்லது 200 முறை கடந்து செல்ல முடியும்.

    இந்த நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் இந்த பயண அட்டையை பெறுவதற்காக பதிவு செய்துகொண்டுள்ளனர். அதிக எண்ணிக்கையில் வருடாந்திர பாஸ் வாங்கப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    அதைத் தொடர்ந்து, கர்நாடகா, ஆந்திரா, அரியானா மாநிலங்கள் உள்ளன. பாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி மாலை 7 மணி நிலவரப்படி 1.4 லட்சம் பயனாளர்கள் இந்த வருடாந்திர பாஸை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். சுங்கச்சாவடிகளில் சுமார் 1.39 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

    பாஸ்டேக் வருடாந்திர பாஸை வாங்கி செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ தளமான ராஜ்மார்க்யாத்ரா செயலி கூகுள் பிளே ஸ்டோரில் முதலிடத்தில் உள்ள அரசு செயலியாக மாறியுள்ளது. ஒட்டுமொத்தமாக 23-வது இடத்திலும், பயணப் பிரிவில் 2-வது இடத்திலும் உள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டு 4.5 நட்சத்திர மதிப்பீட்டை இந்த செயலி பெற்றுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை ஆணைய தரவுகளின்படி ஒரே நேரத்தில் சுமார் 20,000 முதல் 25,000 பேர் வரை ராஜ்மார்க்யாத்ரா செயலியை பயன்படுத்துகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,150 சுங்கச்சாவடிகளில் இந்த பாஸ்டேக் வருடாந்திர பாஸை பயன்படுத்தி தனியார் வாகனங்கள் தடையின்றி பயணிக்கலாம்.

    • மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றார்.
    • முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று காலையில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் முதலமைச்சரை கடுமையாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மக்கள் குறைத்தீர் கூட்டத்தில் முதலமைச்சர் ரேகா குப்தா பங்கேற்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது,

    இதில் முதலமைச்சர் ரேகா குப்தாவிற்கு முகம் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. டெல்லி முதல்வர் தாக்கப்பட்ட புகார் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். 

    • 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.
    • இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசியலமைப்பு திருத்த மசோதா உட்பட 3 முக்கிய மசோதாக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்கிறார்.

    ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.

    குறிப்பாக கடுமையான கிரிமினல் குற்றசாட்டுகளால் பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

    எதிர்க்கட்சி முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.
    • இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

    இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் தேஜஸ் LCA (Tejas Light Combat Aircraft ) Mark 1A போர் விமானங்களை வாங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.62,000 கோடி மதிப்பீட்டில் 97 விமானங்களை வாங்க இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் இந்த விமானங்களை தயாரிக்கிறது.

    முன்னதாக ஏற்கனவே ரூ. 48,000 கோடி மதிப்பீட்டில் 83, LCA Mark 1A போர் விமானங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய ஆர்டர், இந்திய விமானப்படையின் காலாவதியான MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும்.

    இந்த புதிய LCA Mark 1A போர் விமானங்கள் மேம்பட்ட ரேடார் மற்றும் மின்னணு அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்த விமானங்களில் 65%க்கும் அதிகமான பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

    இது உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தும் ஒரு முக்கியமான படியாகும்.

    • குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார்.
    • இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் வருடக்கணக்கில் கிடப்பில் போட்டு இழுத்தடித்ததால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநரின் அதிகார மீறலை கண்டித்து மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினர்.

    மேலும் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் 3 மாத காலக்கெடுவை விதித்தது.

    இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. மேலும் குடியரசு தலைவரும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை கோரியிருந்தார். இந்த மனு விசாரணையில் உள்ள நிலையில் தற்போது மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

    அதில், ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களுக்கு நீதிபதிகள் காலக்கெடு விதிக்க அதிகாரம் இல்லை என்றும் அவ்வாறு ஆளுநர்களின் அதிகாரத்தில் தலையிட்டால் அரசியலமைப்பில் பெரும் குழப்பம் ஏற்படும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.

    இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் நடைபெற்றது.

    அரசியலமைப்புச் சட்டத்தின் 143வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவர் ஆலோசனை கோரியுள்ளார். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு வழக்கை மீண்டும் விசாரிக்க பயன்படுத்தப்படக்கூடாது என தமிழகம் மற்றும் கேரளா அரசுகளின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

    இது மத்திய அரசு சார்பில் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

    அப்போது பேசிய பி.ஆர்.கவாய், "அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 12 அன்று அளித்த உத்தரவை மாற்றியமைக்காது.

    ஆளுநரின் செயல் சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆலோசனை கேட்பதை ஒரு மேல்முறையீடாக கருத மாட்டோம். நீதிமன்றம் ஆலோசனை வழங்கும் பணியில் மட்டுமே ஈடுபடும்" என்று தெரிவித்தார். 

    • மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.
    • ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, 2025 க்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    விளையாட்டு அமைப்புகளின் மீது கூடுதல் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா உருவாக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மசோதா சட்டமாக மாறியது.

    ஆகஸ்ட் 11 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 12 அன்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

    இதன்படி, தேசிய விளையாட்டு சம்மேளனங்களை வழிநடத்த ஒரு தேசிய விளையாட்டு வாரியம் அமைக்கப்படும். விளையாட்டு தொடர்பான சச்சரவுகளுக்கு விரைந்து தீர்வு காண ஒரு தேசிய விளையாட்டுத் தீர்ப்பாயம் உருவாக்கப்படும்.

    சம்மேளன தேர்தல்கள் நேர்மையாகவும் முறையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரு தேசிய விளையாட்டுத் தேர்தல் குழு அமைக்கப்படும்.

    நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோருக்கான வயது வரம்பில் தளர்வுகள் கொண்டுவரப்படும்.

    தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.

    • உண்மையான பணத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.
    • அங்கீகரிக்கப்படாத பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

    ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு. அதை ஊக்குவிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி உண்மையான பணத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த அல்லது முற்றிலும் தடை செய்ய இந்த மசோதா வழிவகை செய்வதாக அரசு வட்டார தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

    அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களுக்கு பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படாது. பணம் வைத்து கேமிங்கை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இன்று (புதன்கிழமை) இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    நாடுமுழுவதும் ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தயத்தால் நிதி இழப்புகள், மனநலப் பிரச்சினைகள் மற்றும் அதிகரித்து வரும் தற்கொலைகள் போன்றவை கவலையை ஏற்படுத்தி இருந்த நிலையில் மத்திய அரசு இந்த புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது.

    மசோதா சட்டமானால், புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், அங்கீகரிக்கப்படாத பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

    ×