என் மலர்
இந்தியா

ஆன்லைன் கேமிங் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. சூதாட்டம், பணம் வைத்து ஆடும் கேம்களுக்கு தடை?
- உண்மையான பணத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த இந்த மசோதா வழிவகை செய்கிறது.
- அங்கீகரிக்கப்படாத பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த மசோதாவின் கீழ், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டு. அதை ஊக்குவிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி உண்மையான பணத்தை உள்ளடக்கிய ஆன்லைன் கேமிங் தளங்களை ஒழுங்குபடுத்த அல்லது முற்றிலும் தடை செய்ய இந்த மசோதா வழிவகை செய்வதாக அரசு வட்டார தகவலை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.
அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களுக்கு பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படாது. பணம் வைத்து கேமிங்கை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் மசோதாவில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று (புதன்கிழமை) இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நாடுமுழுவதும் ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தயத்தால் நிதி இழப்புகள், மனநலப் பிரச்சினைகள் மற்றும் அதிகரித்து வரும் தற்கொலைகள் போன்றவை கவலையை ஏற்படுத்தி இருந்த நிலையில் மத்திய அரசு இந்த புதிய மசோதாவை உருவாக்கி உள்ளது.
மசோதா சட்டமானால், புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ், அங்கீகரிக்கப்படாத பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.






