என் மலர்tooltip icon

    டெல்லி

    • தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றினார்.
    • மேலும் வெந்த புண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூரம் டெல்லியில் நடந்துள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் மதங்கிர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ் (28). தினேசுக்கு திருமணமாகி 8 ஆண்டு ஆகிறது. கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. 2 ஆண்டுக்கு முன் தினேஷ்மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே, தினேஷுக்கும், அவரது மனைவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் ஊரே இரவின் அமைதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது, 'அய்யோ, அம்மா' என்ற ஆணின் கதறல் சத்தம் அக்கம்பக்கத்தினர் தூக்கத்தைக் கலைத்தது.

    பலரும் எழுந்து ஓடிவந்தனர். வலியில் கதறித் துடிப்பது தினேஷ் என தெரிந்தது. வீடு உள்புறம் பூட்டப்பட்டிருக்க தினேஷ் கதறிக் கொண்டிருக்க, பலரும் கதவைத் தட்டினர்.

    சிறிது நேரத்துக்குப் பின் கதவு திறக்கப்பட்டது. தினேஷ் உடல் வெந்த நிலையில் கதறுவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    சில நாள் சிகிச்சைக்குப் பின், பேசும் நிலைக்கு வந்த தினேஷ் அளித்த வாக்குமூலம் அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

    'அன்று நானும், என் மகளும் தூங்கிக் கொண்டிருந்தோம். திடீரென்று என் உடல் முழுவதும் கடுமையான எரிச்சலான வலியை உணர்ந்து திடுக்கிட்டு கண்விழித்தேன். அருகில் என் மனைவி நின்று கொண்டிருந்தாள். அவள் என் உடலின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருந்தாள். அத்துடன் நிறுத்தாமல் அந்த தீக்காயத்தில் மிளகாய் பொடியையும் அள்ளித் தூவினாள்.

    நான் வலி பொறுக்க முடியாமல் கதறினேன். 'வேண்டாம் வேண்டாம்' என்று கதறியபோது என் மனைவி, நீங்கள் கத்தினால் நான் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன் என்று மிரட்டினாள்' என்றார் தினேஷ்.

    மருத்துவமனை படுக்கையில் கிடந்தபடியே தன் மனைவி மீது போலீசில் புகார் அளித்தார் அவர். தினேஷின், மார்பு, முகம் மற்றும் கைகளில் ஆழமான தீக்காயங்கள் இருந்தது. தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் உடல்நலம் தேறி வருகிறார். தினேஷ் மனைவியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
    • இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம்.

    புதுடெல்லி:

    டெல்லியில் 9-வது மொபைல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பேசியதாவது:-

    நான் 'மேக் இன் இந்தியா' பற்றி பேசியபோது, பலர் அதை கேலி செய்தனர். அவர்களின் காலத்தில் புதிய தொழில்நுட்பம் இந்தியாவை அடைய கணிசமான நேரம் பிடித்தது. ஒரு காலத்தில் 2 ஜி உடன் போராடிய நாடு தற்போது கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் இணைப்பை அடைந்துள்ளது.

    இந்தியா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 4 ஜி ஸ்டேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு பெரிய உள்நாட்டு சாதனையாகும். இதன் மூலம், உலகில் இந்த திறனைக் கொண்ட 5 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது. இன்று இந்தியாவில் ஒரு ஜி.பி. வயர்லெஸ் டேட்டாவின் விலை ஒரு கப் டீயின் விலையை விடக் குறைவு.

    டிஜிட்டல் இணைப்பு இனி ஒரு சலுகையோ அல்லது ஆடம்பரமோ அல்ல. அது தற்போது ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.

    தொழில் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்ய, புதுமைப்படுத்த மற்றும் தயாரிக்க இதுவே சிறந்த நேரம். நாங்கள் சீர்திருத்தங்களின் வேகத்தை அதிகரித்து வருகிறோம்.

    இந்தியா மொபைல்கள், செமிகண்டக்டர்ஸ் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமூகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

    இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    இந்த நிலையில், நடிகை குறித்து அவதூறு பேசிய வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

    நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. தனது சொல், செயல்களால் நடிகைக்கு ஏற்பட்ட வலி, காயத்திற்கு நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்பதாக சீமான் தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    நடிகைக்கு எதிராக தான் கூறிய அனைத்து அறிக்கைகள், குற்றச்சாட்டுகளையும் திரும்பப்பெறுவதாகவும் நடிகை குறித்து எந்த ஊடகத்திலும் எந்த கருத்தையும் இனி தெரிவிக்க மாட்டேன் என்றும் சீமான் பிரமான பத்திரத்தில் உறுதி அளித்தார்.

    இதனை தொடர்ந்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், சீமானுக்கு எதிரான புகாரை திரும்ப பெறுவதாக நடிகை கூறியதை தொடர்ந்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. மேலும், பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளதை போல் இரு தரப்பும் எந்த ஒரு பரஸ்பர குற்றச்சாட்டையே அவதூறையோ பரப்பக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதனிடையே, சீமான், அவரது ஏஜெண்டுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் எனது குடும்ப பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. நான் சீமானால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது வாழ்வாதாரத்துக்கான உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நடிகை பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 

    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
    • வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    போரூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து, வழக்கில் இருந்தும் விடுதலை செய்தும் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டுள்ளது. வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    கரூர் கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து கரூர் போலீசாரும் விசாரணை நடத்தி த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    நீதிபதி அருணா ஜெகதீசன் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த வழக்கானது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    இதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூருக்கு வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிறப்புக்குழு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    • மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
    • அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.

    கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.

    தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

    இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.

    அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.

    முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.  

    • அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
    • அப்போது, இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது புதினின் 73-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

    அப்போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன், புதினின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி புதினை அழைத்தார்.

    கடந்த வாரம் அதிபர் புதின் தனது இந்திய வருகையை உறுதிசெய்தார். சமீபத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முன்பதிவு செய்த பின், தேதியை மாற்ற வேண்டுமென்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
    • டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தொகை பயணிகள் கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.

    ரெயில்களில் பயணம் செய்ய இந்திய மக்கள் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். திடீரென பயணிகள் திட்டமிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லை என்றால், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். சில சமயங்களில் தவறுதலாக கூட தேதி மாற்றி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    இவர்கள் டிக்கெட் ரத்து செய்துதான், மாற்று தேதிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். வரும் ஜனவரியில் இருந்து, பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரெயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது. இதை இந்திய ரெயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    எனினும், மாற்று தேதிக்கான டிக்கெட் உறுதி (Available) எனச் சொல்ல முடியாது. மாற்று தேதியில் டிக்கெட் இருந்தால் மட்டுமே மாற்ற முடியும். அத்துடன், மாற்று தேதிக்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • உலக பேட்மிண்டன் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • சமீபத்தில் நடந்த சீன ஓபன் இறுதிப்போட்டியில் சாத்விக் சிராக் ஜோடி நுழைந்தது.

    புதுடெல்லி:

    உலக பேட்மிண்டன் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி

    6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    முன்னாள் நம்பர் ஒன் ஜோடியான சாத்விக்-சிராஜ் ஹாங்காங் ஓபன் மற்றும் சீனா ஓபன் போட்டியின் இறுதிக்குள் நுழைந்ததால் இந்த ஏற்றம் கண்டுள்ளது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்ஷயா சென் 19-வது இடத்தையும், ஆயுஷ் ஷெட்டி 28-வது இடத்தையும், எச்.எஸ்.பிரனாய் 34-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 13-வது இடத்தில் தொடருகிறார். உன்னதி ஹூடா 31-வது இடத்தையும், மாளவிகா பன்சோத் 33-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது.
    • மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது/Key decision expected in upcoming board meeting

    புதுடெல்லி:

    ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம்

    வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.

    இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை 2014-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டாக இந்தத் தொகை அப்படியே உள்ளது.

    தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்கங்கள் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன. எனவே இந்தக் கூட்டத்தில் ரூ.2,500 ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

    • சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி 2012-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கின் மீதான விசாரணை 13 ஆண்டாக நிலுவையில் இருந்தது.

    புதுடெல்லி:

    சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் விசாரனை கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை விபத்துகளைக் குறைக்க புதிய பாதுகாப்பு விதிகளை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    13 ஆண்டாக நிலுவையில் இருந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது குற்ப்பிடத்தக்கது.

    • மோடி குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்று 24 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
    • 2014 முதல் பிரதமராக இருந்து வருகிறார்.

    இந்திய பிரதமர் மோடி கடந்த 24ஆம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதில் இருந்து தற்போது வரை சுமார் 24 ஆண்டுகள் மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்.

    24 ஆண்டுகளாக முதல்வர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்றி வருவதை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில் "முதலில் நாடு என்பது தொலைநோக்குப் பார்வையாகவும், வளர்ந்த இந்தியா என்பது நோக்கமாகவும் இருக்கும்போது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தலைமைத்துவம் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், நாட்டிற்கும், பொது சேவைக்கும் 24 வருடங்களை அர்ப்பணித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளாக கருதி அவற்றை தீர்த்து வைத்து, சுயநலமின்றி உழைத்து வரும் பிரதமர் மோடி, முதல்வராக பதவி ஏற்ற இந்த நாள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமாக பதவி ஏற்றார். அதில் இருந்து 3ஆவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னதாக, 12 1/2 வருடங்கள் குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×