என் மலர்tooltip icon

    டெல்லி

    • ராகுல்காந்தி இன்று டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனைக்கு சென்றார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி, டெல்லி சரோஜினி நகர் பேருந்து பணிமனையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், மார்ஷல்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார.

    இது தொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    அந்த பதிவில், "நமது ஜனநாயக சமூகத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் ஒவ்வொரு பிரிவினரையும் ராகுல் காந்தி சந்தித்து அவர்களுக்காக குரல் எழுப்பி வருகிறார்" என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


    • அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அமலாக்கத்துறை ஆவணங்களை கைப்பற்றியது.

    புதுடெல்லி:

    அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் ஜெகத்ரட்சகன்.

    இதற்கிடையே, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். அதன்பின், இந்தப் பங்குகளை மனைவி, மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார்.

    இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது. அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கான உத்தரவு கடந்த 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

    • ஜன்தன் யோஜனா தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • இதன்மூலம் 53 கோடிக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    ஏழைகள் அனைவரும் வங்கிக்கணக்கு தொடங்க கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன்தன் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

    இந்தத் திட்டத்தின் மூலம் மினிமம் பேலன்ஸ் இன்றி வங்கிக் கணக்கைப் பராமரிக்க முடியும். இதன்மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் முறையான நிதி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்.

    இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை 53 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தின் மூலம் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளனர். இதில் 30 கோடி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜன்தன் திட்டத்தின் மூலம் கணக்கு தொடங்கியவர்களில் 66.6 சதவீதம் பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 55.6 சதவீதம் பேர் பெண்கள்.

    இந்நிலையில், ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டதன் 10-ம் ஆண்டு என்பது ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. அனைத்துப் பயனாளிகளுக்கும் வாழ்த்துகள். இத்திட்டம் வெற்றியடைய உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள். நிதி உள்ளடக்கத்தை அதிகரிப்பதிலும், கோடிக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு கண்ணியம் அளிப்பதிலும் ஜன்தன் திட்டம் முதன்மையானது என பதிவிட்டுள்ளார்.

    • ஜாமின் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA) கூறப்பட்டுள்ளது.
    • ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. தண்டனைக்கு முன் சிறை தண்டனை என்பது ஒரு விதிவிலக்கே.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மாநில நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஜாமின் என்பது விதி... சிறை என்பது விதிவிலக்கு என்ற பொதுவான சட்டக் கொள்கை PMLA சட்டத்திற்கும் பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஜாமின் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA) கூறப்பட்டுள்ளது. ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. தண்டனைக்கு முன் சிறை தண்டனை என்பது ஒரு விதிவிலக்கே. PMLA சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் கூட பொதுவாக ஜாமின் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி என நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்ததுடன், பிரேம் பிரகாஷ்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கின்போது தனிநபரின் சுதந்திரம் எப்பொழுதும் விதி மற்றும் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின் மூலம் அதை மறுப்பது விதிவிலக்காகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    • மாநிலங்களவையில் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கை 237 ஆகும்.
    • மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக 96 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

    இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 245. தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளன. நான்கு உறுப்பினர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான்கு பேர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

    பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 12 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    பாஜக-வைச் சேர்ந்த 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் மாஞ்ச் ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்து தலா ஒரு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    தற்போது மாநிலங்களவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 237. மெஜாரிட்டிக்கு 119 தேவை. பாஜக உறுப்பினர்கள் 96 பேர் உள்ளனர். அந்த கூட்டணியில் 112 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர். அத்துடன் 6 நியமனம் எம்.பி.க்கள், ஒரு சுயேட்சை எம்.பி. ஆகியோர் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    தற்போது இரண்டு கூட்டணி கட்சி எம்.பி.க்கள், நியமன எம்.பி.க்கள், சுயேட்சை எம்.பி.க்கள் என பாஜக கூட்டணிக்கு 119 எம்.பி.களுக்கு மேல் பெற்றுள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு 85 மாநிலங்களை எம்.பி.க்கள் உள்ளனர். தெலுங்கானாவில் இருந்து அபிஷேக் சிங்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநிலங்களவையில் மெஜாரிட்டி பெற கடந்த 10 வருடங்களாக பாஜக முயற்சி பெற்று வந்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தனி மெஜாரிட்டி பிடித்துள்ளது. இதன் மூலம் மசோதாக்களை தடங்கல் இல்லாமல் நிறைவேற்ற முடியும்.

    மோடி 2-வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டபோது, பல்வேறு மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது கூட்டணியில் அல்லாத பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவால் மசோதாக்களை நிறைவேற்றி வந்தது.

    • மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.
    • அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த கிரண் சவுத்ரி அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

    புதுடெல்லி:

    நாடுமுழுவதும் 9 மாநிலங்களில் இருந்து காலியாக உள்ள 12 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது.

    தற்போது 229 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு பா.ஜ.க.வுக்கு 87 எம்.பி.க்கள் உள்ளனர். அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து மொத்தம் 105 இடங்கள் உள்ளது. அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் ஆறு நியமன உறுப்பினர்களையும் சேர்த்தால் பாஜக கூட்டணிக்கு 111 இடங்கள் கிடைத்துவிடும். பெரும்பான்மை எண்ணிக்கையான 115-க்கு 4 இடங்கள் குறைவாக உள்ளது.

    யாருக்கும் ஆதரவளிக்காத நிலைப்பாட்டில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியிடம் 11 உறுப்பினர்களும், பிஜேடி கட்சியிடம் 8 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, மத்தியப் பிரதேசத்தில் இருந்து கேரளாவை சேர்ந்த மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன், ராஜஸ்தானில் இருந்து ரவ்னீத் சிங் பிட்டு, பீகாரில் இருந்து மூத்த வழக்கறிஞரான மனன் குமார் மிஸ்ரா, திரிபுராவில் இருந்து ராஜீப் பட்டாச்சார்யா, அரியானாவில் இருந்து கிரண் சவுத்ரி, அசாமில் இருந்து மிஷன் ரஞ்சன் தாஸ், ராமேஷ்வர் டெலி, மகாராஷ்டிராவில் இருந்து தைரிஷீல் பாட்டீல், ஒடிசாவில் இருந்து மம்தா மொஹந்தா ஆகியோர் பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்றனர்.

    இந்நிலையில், அரியானாவில் போட்டியிட்ட கிரண் சவுத்ரி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். இவரை எதிர்த்து யாரும் நிற்கவில்லை என்பதால் போட்டியின்றி தேர்வாகினார்.

    இதேபோல் மத்திய பிரதேசத்தில் இருந்து மத்திய மந்திரி ஜார்ஜ் குரியன், ராஜஸ்தானில் இருந்து மத்திய இணை மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    அரியானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த கிரண் சவுத்ரி அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.
    • டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மேலும், டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், சி.பி.ஐ. வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார்.

    இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கெஜ்ரிவால் இன்று டெல்லி கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா, அவரின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

    • டெல்லி சென்றுள்ள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
    • அப்போது வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    புதுடெல்லி:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, மேப்பாடி கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பாதிப்புக்கு உள்ளாயின. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சிலர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

    இதற்கிடையே, பேரிடர் பாதிப்பு பகுதிகளை மத்திய நிபுணர் குழு பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறது. நிலச்சரிவால் பாதிப்பு அடைந்த பகுதிகளில் பிந்தைய தேவை மதிப்பீடுகள் குறித்து விரிவான மற்றும் அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்து வருகிறது.

    இந்தக் குழு சேதத்தைக் கணக்கிடும்போது பழைய அளவுகோல்களை பயன்படுத்தாமல், உண்மையான இழப்பை மதிப்பிட வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்தக் குழுவிடம் கேரள அரசு வலியுறுத்தி உள்ளது.

    வயநாடு மறுவாழ்வுக்கு ரூ.2 ஆயிரம் கோடியும், இழப்பீடாக ரூ.1,200 கோடியும் கேட்டு மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்றுள்ள கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று பிற்பகலில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    வயநாடு நிலச்சரிவை எல்-3 வகை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், அதிகபட்ச உதவி அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக மோடி சென்றிருந்தார்.
    • ரஷிய அதிபர் புதனுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அண்மையில், அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், உக்ரைன் நாட்டு பயணம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். ரஷியா -உக்ரைன் போர் பற்றிய எனது கருத்துகள் மற்றும் சமீபத்தில் நான் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டது குறித்து உரையாடினோம். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
    • 6 பயங்கரவாதிகள் கைது மூலம் மிகப்பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக டெல்லி போலீசின் சிறப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பிவாண்டி வனப்பகுதிக்கு சென்று அவர்கள் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தீவிர முயற்சியால் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    விமானப்படை நிலையம் அருகே அல்கொய்தா இயக்கத்தினர் முகாம் அமைத்தல் பயங்கரவாத பயிற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

    இதை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளை சிறப்பு படை போலீசார் கைது செய்தார். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை டம்மி ஏ.கே.47, ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    பிடிபட்டவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு நாட்களாக பயிற்சி பெற்று வநதனர்? என்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காட்டுப்பகுதியில் அவர்கள் ஆயுதங்களை மற்றும் தாக்குதல் பயிற்சிகளை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

    ஆயுதப்பயிற்சி எதற்காக நடத்தப்பட்டது, அந்த குறிப்பிட்ட காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? என்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பயிற்சி நடைபெற்ற பகுதி அருகில் இந்திய விமானப்படையின் பயிற்சி மையம் உள்ளதால் வேறு ஏதேனும் சதி திட்டத்தை நடத்த திட்டமிட்டனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆயுத பயிற்சி, 6 பயங்கரவாதிகள் கைது மூலம் மிகப்பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர்.

    • கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
    • கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கவிதாவை கைது செய்தது.

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக தெலுங்கானா மாநிலத்தின் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த இரண்டு வழக்குகளில் கடந்த மார்ச் 15-ம் தேதி கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. அவர் திகார் சிறையில் இருந்தார். கடந்த ஏப்ரல் 11-ம் தேதி சி.பி.ஐ.யும் திகார் சிறையில் வைத்து கைது செய்தது.

    இதனையடுத்து ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் அமலாக்கத்துறை, சிபிஐ தொடர்ந்த 2 வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கவிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆஜரானார்.

    இதே வழக்கில் கைதான ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது, அதே போல் கவிதாவிற்கும் ஜாமின் வழங்கவேண்டும் என்று அவர் வாதிட்டார்.

    கவிதா ஏற்கனவே 5 மாதங்கள் சிறையில் உள்ளார். விசாரணை காவல் அவருக்கு தண்டனையாக மாறக்கூடாது என்று கூறி கவிதாவிற்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

    • காஷ்மீரை டெல்லியில் இருந்து இயக்குவது சரியல்ல.
    • பிரதமர் மோடியுடன் எனக்குள்ள பிரச்சனை என்னவென்றால், அவர் யார் சொல்வதையும் கேட்பது இல்லை.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்திக்கு 54 வயது ஆகிறது. அவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    கடந்த மே மாதம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பொதுமக்களில் இருந்து ஒருவர், ''எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்கள்?'' என்று கேட்டார்.

    அதற்கு ராகுல்காந்தி, ''விரைவில் நடக்கும்'' என்று பதில் அளித்தார்.

    இந்நிலையில், இந்த தடவை காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கல்லூரி மாணவிகளுடன் நடத்திய உரையாடலின்போது, ராகுல்காந்தியிடம் அக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த உரையாடல் வீடியோ, ராகுல்காந்தியின் 'யூ டியூப்' சேனலில் வெளியாகி உள்ளது.

    உரையாடலின்போது, ''திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தம் வருகிறதா?'' என்று மாணவிகளிடம் ராகுல்காந்தி கேட்டார். அவர்கள் அதே கேள்வியை ராகுல்காந்தியிடம் கேட்டனர்.

    அதற்கு ராகுல்காந்தி, ''திருமணம் செய்து கொள்ளுமாறு இருபது, முப்பது ஆண்டுகளாக நிர்பந்தத்தை சந்தித்து வருகிறேன்'' என்று புன்னகையுடன் கூறினார்.

    ''திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறீர்களா?'' என்று மாணவிகள் கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி, ''நான் திட்டமிடுவது இல்லை. அதுவாக நடந்தால் நடக்கும்'' என்று கூறினார்.

    ''எங்களையும் திருமணத்துக்கு அழையுங்கள்'' என்று மாணவிகள் ஒரே குரலில் தெரிவித்தனர். ''அழைக்கிறேன்'' என்று சிரிப்பொலிக்கு மத்தியில் ராகுல்காந்தி கூறினார்.

    காஷ்மீர் சட்டசபை தேர்தல் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கிறது.

    இந்த உரையாடலின்போது, அதுபற்றி ராகுல்காந்தி கூறியதாவது:-

    இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு மாநிலத்தின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஏற்கவில்லை.

    காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் தெளிவான நிலைப்பாடு. காஷ்மீருக்கான பிரதிநிதிகள் வேண்டும். காஷ்மீரை டெல்லியில் இருந்து இயக்குவது சரியல்ல.

    பிரதமர் மோடியுடன் எனக்குள்ள பிரச்சனை என்னவென்றால், அவர் யார் சொல்வதையும் கேட்பது இல்லை. அவர் செய்வது தவறு என்று அவரிடம் ஆதாரம் காட்டினாலும், அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். அது அவரது பலவீனத்தால் வரும் குணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×