என் மலர்
டெல்லி
- நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன.
- சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
டெல்லியில் பிரியாவிடை விழாவில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் போலீஸ் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் ரவிக்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற சக ஊழியரின் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே விழுந்தார். இதையடுத்து ரவிக்குமார் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ரவிக்குமாரின் இறுதித் தருணங்கள் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரும் மற்றொரு நபரும் பாடல் ஒன்றுக்கு காலை அசைத்தபடி நடனம் ஆடுகின்றனர். சிறிது நேரம் கழித்து, ரவி சிரித்துக்கொண்டே ஒதுங்குவதைக் காணமுடிகிறது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உயிரிழந்த ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் 2010-ம் ஆண்டு முதல் டெல்லி போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். 45 நாட்களுக்கு முன்புதான் அவருக்கு ஆஞ்சியோகிராபி செய்யப்பட்டது.
நடனம் அல்லது நிகழ்ச்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் தனது சகோதரரியின் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருந்த 18 வயது இளம்பெண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
இந்தூரில் நடந்த ஒரு யோகா நிகழ்வில் தேசபக்தி பாடலில் உற்சாகமான நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்த போது, இந்தியக்கொடியைப் பிடித்தபடி ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் முழுவதும் கர்பா நிகழ்வுகளில் குறைந்தது 10 மாரடைப்பு இறப்புகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் இளையவர் 17 வயது மட்டுமே.
- பாஜக-வில் இணைந்தது மிகப்பெரிய தவறு.
- என்னுடைய குடும்பத்திற்கு திரும்ப விரும்பினேன். எனது தவறை சரிசெய்து கொள்ள விரும்பினேன்- கவுன்சிலர்.
டெல்லி மாநிலத்தின் 28-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ராமச்சந்திரா. இவர் பவானா தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர் சில தினங்களுக்கு முன் பாஜக-வில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று ஆம் ஆத்மி மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சஞ்சய் சிங் மற்றும் சந்தீப் பதக் ஆகியோரை சந்தித்து மீண்டும் ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பாஜக-வில் இணைந்தது மிகப்பெரிய தவறு. தற்போது என்னுடைய குடும்பத்திற்கு திரும்ப விரும்பினேன். எனது தவறை சரிசெய்து கொள்ள விரும்பினேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மணிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில் "நான் ஆம் ஆத்மியின் சக கூட்டாளியும், முன்னாள் பவானா தொகுதி எம்.எல்.ஏ-வும் ஆன ராமச்சந்திராவை சந்தித்தேன். இன்று (நேற்று) ஆம் ஆத்மி குடும்பத்திற்கு திரும்பியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
தன்னை சிலர் தவறாக வழிநடத்தினர் ராமச்சந்திரா குற்றம்சாட்டியிருந்தார். "என்னை சிலர் தவறாக வழி நடத்தினர். வருங்காலத்தில் இதுபோன்ற செயலுக்கு அடிபணியமாட்டேன் என உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன்" என கட்சி தலைவர்கள் முன் உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
- இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் டெல்லி என்சிஆரில் தனது மையத்தை அமைக்கிறது.
- இதற்கான அனுமதி கடிதத்தை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பல்கலைக்கழகத்திடம் இன்று வழங்கினார்.
புதுடெல்லி:
இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் டெல்லி என்சிஆரில் தனது இந்திய மையத்தை அமைக்க உள்ளது. மத்திய அரசின் 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இந்தியாவில் தனது மையத்தை அமைக்கும் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் என்ற சிறப்பை சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இதற்கான அனுமதி கடிதத்தை மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்திற்கு இன்று வழங்கினார்.
இதுதொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள எக்ஸ் செய்தியில், இந்த முயற்சி தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கூறப்பட்ட உள்நாட்டில் சர்வதேசமயமாக்கல் என்ற இலக்கை அடைவதற்கான ஒரு அடியாகும். இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் வளாகங்களை நிறுவுதல் என்பது கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மட்டுமல்ல, இது ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவற்றின் துடிப்பான சூழலை உருவாக்குவதாகும் என பதிவிட்டுள்ளார்.
- இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- மஸ்தான் ராவ் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு மாறியவர்.
புதுடெல்லி:
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போது சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக உள்ளார். அதேசமயம் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான பீதா மஸ்தான் ராவ் ஜாதவ் மற்றும் வெங்கடரமண ராவ் மோபிதேவி ஆகிய இருவரும் தங்கள் ராஜ்யசபா உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
இவர்களது ராஜினாமாவை துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டுள்ளார் என பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் 9 ஆக குறைந்துள்ளது.
இவர்கள் இருவரும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஸ்தான் ராவ் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- விவசாயிகள் போராட்டம் குறித்து பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்தன.
- பா.ஜ.க. தேசிய தலைவரான ஜே.பி.நட்டாவை கங்கனா ரனாவத் இன்று சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
மத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜ.க. அரசுக்கு எதிராகப் போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான கங்கனா ரனாவத் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி.யான கங்கனா ரனாவத் சமீபத்தில் நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அதில், விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கையை எடுக்காமல் போயிருந்தால் வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவிலும் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் பாலியல் துன்புறுத்தலும், கொலைகளும் அரங்கேறின. படுகொலை செய்து தூக்கிலிட்ட சம்பவங்களும் நடந்தன. அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றிருக்காவிட்டால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்கக் கூடும் என தெரிவித்திருந்தார்.
விவசாயிகள் போராட்டம் குறித்த கங்கனாவின் சர்ச்சை கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சிம்ரன்ஜித் சிங் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அவருக்கு கற்பழிப்பு அனுபவம் அதிகம். அதனால் அவர் நன்றாக அறிந்திருக்க வேண்டும். கற்பழிப்பு எப்படி நடக்கிறது என்பதை நீங்கள் அவரிடம் கேட்கலாம். மக்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது போலவே, அவருக்கு இதேபோன்ற பலாத்கார அனுபவம் உண்டு என காட்டமாக தெரிவித்தார்.
- கவுதம் அதானி முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- இந்தியாவில் 1,539 பேரிடம் தலா ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது.
2024ம் ஆண்டின் ஹுரன் இந்தியா கோடீஸ்வரர் பட்டியல் குறித்து ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கவுதம் அதானி முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அதன்படி, கவுதம் அதானி ரூ.11.61 லட்சம் கோடி சொத்துக்களுடன் முதலம் இடம் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, முகேஷ் அம்பானி ரூ.10.14 லட்சம் கோடி சொத்துக்களுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார்.
3ம் இடத்தை ரூ.3.14 லட்சம் கோடியுடன் எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, சைரஸ் பூனாவாலா (ரூ.2.89 லட்சம் கோடி), திலிப் சங்க்வி (2.49 லட்சம் கோடி) ஆகியோர் 4 மற்றும் 5ம் இடங்களை பிடித்துள்ளனர்.
இதேபோல், இந்தியாவில் 1,539 பேரிடம் தலா ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 220 அதிகம் ஆகும்.
இவர்களின் சொத்து மதிப்பு ஏறக்குறைய 25% அதிகரித்துள்ளது. முதல்முறையாக இந்தி நடிகர் ஷாருக்கான் இந்த பட்டியலில் நுழைந்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு ரூ.7,300 கோடி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்டு 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- மேஜர் தியான்சந்த் பிறந்தநாளான இன்று அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஹாக்கி விளையாட்டின் மந்திர மனிதன் என அழைக்கப்படும் மேஜர் தியான்சந்த் பிறந்த நாளான இன்று, அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாட்டுக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, தற்காப்பு கலை பயிலும் மாணவர்களைச் சந்தித்தார். அவர்களுடன் சேர்ந்து பயிற்சி செய்தும், உரையாடி மகிழ்ந்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்தோம். எங்கள் முகாம் தளத்தில் தினமும் மாலையில் ஜியு-ஜிட்சு பயிற்சி செய்வதை நாங்கள் வழக்கமாகக் கொண்டிருந்தோம்.
ஆரோக்கியமாக இருப்பதற்கான எளிய வழியாகத் தொடங்கிய இது, நாங்கள் தங்கியிருந்த ஊர்களைச் சேர்ந்த சக யாத்ரிகர்களையும் இளம் தற்காப்புக் கலை மாணவர்களையும் ஒன்றிணைத்து சமூக நடவடிக்கையாக உருவானது.
தியானம், ஜியு-ஜிட்சு, ஐகிடோ மற்றும் வன்முறையற்ற மோதலைத் தீர்க்கும் நுட்பங்களின் இணக்கமான கலவையான ஜென்டில் ஆர்ட்டின் அழகை இந்த இளம் மனங்களுக்கு அறிமுகப்படுத்துவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது.
வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதை நோக்கமாகக் கொண்டோம். மேலும் இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம்.
இந்த தேசிய விளையாட்டு தினத்தில், உங்களில் சிலரை ஜென்டில் ஆர்ட் பயிற்சியில் ஈடுபட ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையில், எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 43 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது.
- ஒவ்வொரு நாளும் 22 குற்ற நடவடிக்கைகள் தலித்-பழங்குடியின பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மேலும் பல இடங்களில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் பிரதமர் மோடி பெண்கள் பாதுகாப்பு பற்றி செங்கோட்டையில் கொடி ஏற்றும்போது பேசுகிறார். ஆனால் அவரது அரசு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்துச் சென்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.
நம்முடைய பெண்களுக்கு எதிரான எந்தவொரு அநீதியையும் ஏற்றுக் கொள்ள முடியாது. வேதனையானது. கண்டிக்கக்கூடியது. மகள்களுக்கு சமாமான உரிமையை உறுதிப்படுத்துவது நமக்கு அவசியமானது. பெண் குழந்தைகளை காப்பது மட்டுமல்ல.
பெண்களுக்கு பாதுகாப்பு தேவை. பாதுகாப்பது அல்ல. நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 43 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் 22 குற்ற நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்ட தலித்-பழங்குடியின மக்களின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கிறது. அச்சம், மிரட்டல், சமூகக் காரணங்களால் - பதிவு செய்யப்படாத எண்ணற்ற குற்றங்கள் உள்ளன.
பிரதமர் மோடி செங்சோட்டையில் கொடி ஏற்றி, பலமுறை பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசியிருக்கிறார். அவரது அரசு கடந்த 10 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக குற்றத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது கட்சி பலமுறை பாதிக்கப்பட்டவரின் கேரக்டர்களை படுகொலை செய்துள்ளது வெட்கக்கேடானது.

ஒவ்வொரு சுவரிலும் பேட்டி பச்சாவோ (பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) ஓவியம் வரைவது சமூக மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கை திறமையாக மாற்றுமா?
நாம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியுமா? நமது குற்றவியல் நீதி அமைப்பு மேம்பட்டுள்ளதா? சமூகத்தின் சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இப்போது பாதுகாப்பான சூழலில் வாழ முடியுமா?
2012ல் டெல்லியில் நிர்பயா சம்பவம் நடந்தபோது, நீதிபதி வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது, அந்த பரிந்துரைகளை இன்று முழுமையாக அமல்படுத்த முடியுமா?
பெண்கள் எல்லா இடங்களிலும் பயம் இன்றி செல்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கும் நேரம் தற்போது நமக்கு வந்துள்ளது.
இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.
- 1.47 பங்குகளை விற்பனை செய்கிறார். இது மொத்த பங்குகளில் 3.8 சதவீதம் ஆகும்.
- 2022-ல் இருந்து தனது பங்குகளை குறைக்க தொட்ஙகினார் ராகேஷ் கங்வால்.
இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்குளோப் அவியேசன் லிமிடெட் (InterGlobe Aviation Ltd) நிறுவனத்தின் 1.47 கோடி பங்குகள் அல்லது 3.8 சதவீதம் பங்குகளை இண்டிகோ நிறுவனத்தின் இணை-நிறுவனரான ராகேஷ் கங்வால் விற்பனை செய்கிறார்.
இந்த பங்குகளின் மொத்த மதிப்பு 804 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய பண மதிப்பில் சுமார் 6750 கோடி ரூபாய்) ஆகும். ஒரு பங்கின் விலை 4593 ரூபாய் ஆகும்.
கங்வால் ஆதரவு பெற்ற குரூப் இன்டர்குளோப் அவியேசன் நிறுவனத்தின் 19.38 சதவீத பங்குகளை வைத்திருந்தது. கங்வால் 5.89 சதவீத பங்குகளை வைத்திருந்தார். இந்த விற்பனைக்குப் பிறகு கங்வால் ஆதரவு பெற்ற குரூப்பின் பங்கு சதவீதம் 15.58 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜே.பி. மோர்கன், கோல்டுமேன் சச்ஸ், மோர்கன் ஸே்டேன்லி இந்தியா ஆகியவை இந்த பங்கு விற்பனையை நடத்தும் எனத் தெரிகிறது.
இன்டர்குளோப் அவியேசன் லிமிடெட் இண்டிகோவை இயக்கி வருகிறது. இந்தியா மிகப்பெரிய விமான சேவையை மேற்கொள்ளும் இந்த நிறுவனம் இந்திய பங்குசந்தையில் 62 சதவீத பங்குகளை வைத்துள்ளது. 16.9 சதவீத பங்குகளை வெளிநாட்டு மார்க்கெட்டில் வைத்துள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம் ராகுல் பாட்டியா மற்றும் ராகேஷ் கங்வால் ஆகியோர் இணை நிறுவனர்கள். 2019-ல் இந்த பார்ட்னர்ஷிப் பிரிந்தது. 2022-ல் முக்கிய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தனத பங்குகளை குறைக்க தொட்ஙகினார் ராகேஷ் கங்வால்.
- தன்னை கைது செய்யாமல் இருக்க இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி பூஜா மனுதாக்கல் செய்தார்.
- என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.
புதுடெல்லி:
புனேவைச் சேர்ந்த பூஜா கெத்கர், பயிற்சி பெற்று வரும்போதே ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளையும் கேட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஐஏஎஸ் தேர்வுக்கு ஓபிசி மற்றும் உடல் ஊனம் வசதி பெற்றது என அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் கூறப்பட்டன. விசாரணை முடிவில் யுபிஎஸ்சி பூஜா கெத்கரின் ஐஏஎஸ்-ஐ ரத்து செய்தது. மேலும் தேர்வு எழுத தடைவிதித்தது.
இதற்கிடையே இந்த புகார் வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் மறுத்த மாவட்ட நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு எதிரான யுபிஎஸ்சியின் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி ஐகோர்ட்டில் பூஜா கேத்கர் பதில் தாக்கல் செய்தார். அந்த பதிலில், என்னை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரத்தை யுபிஎஸ்சிக்கு கிடையாது என வாதிட்டார்.
இதுதொடர்பாக சி.எஸ்.இ. 2022 விதிகளின் விதி 19ன்படி 1954-ம் ஆண்டு அகில இந்திய சேவைகள் சட்டம் மற்றும் தகுதிகாண் விதிகளின் கீழ் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
- ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக IRMS அதிகாரி சதீஷ்குமார் நியமனம்.
- செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்திய ரெயில்வே வாரியத்தின் புதிய தலைவராக இந்திய ரயில்வே மேலாண்மை சேவை (IRMS) அதிகாரி சதீஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ரெயில்வே வாரியத்தின் 119 ஆண்டுகால வரலாற்றில் தலைவராகும் முதல் பட்டியலினத்தவர் என்ற சிறப்பை சதீஷ்குமார் பெற்றுள்ளார்
செப்டம்பர் 1 ஆம் தேதி ரெயில்வே வாரியத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
சதீஸ்குமார் 1986 ஆம் ஆண்டு ரெயில்வேயில் வேலை செய்து வருகிறார். 34 ஆண்டு கால சேவைக்கு பிறகு அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- பெண் டாக்டர் கொலையாளிகளை தண்டிக்கக் கோரி பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- ஆர்.ஜி.கர். மருத்துவமனை முன்னாள் முதல்வர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
புதுடெல்லி:
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை விரைவாகத் தண்டிக்கக் கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெண் டாக்டர் கொல்லப்பட்ட ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது சி.பி.ஐ. விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
ஆர்.ஜி.கர். மருத்துவமனையில் உள்ள முன்னாள் முதல்வர் அலுவலகத்திலும், கல்லூரி வளாகத்தில் உள்ள உணவகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சந்தீப் கோஷ் வீடு உள்பட மொத்தம் 15 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்து இந்திய மருத்துவ சங்கம் உத்தரவிட்டது.






