என் மலர்
டெல்லி
- அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை உருவாக்கி உள்ளார்.
- தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில், மூலிகை செடி வளர்ப்பில் ஈடுபடும் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து மோடி கூறும்போது, `நம்மைச் சுற்றி எந்த ஒரு துன்பத்திலும் பொறுமையை இழக்காத சிலர், அதிலிருந்து கற்றுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர் தமிழ்நாட்டின் மதுரையை சேர்ந்த ஆசிரியை சுபஸ்ரீ. இவர் அரிய மற்றும் மிகவும் பயனுள்ள மூலிகைகள் கொண்ட அற்புதமான தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அவரது தந்தையை பாம்பு கடித்தபோது அவரை காப்பாற்ற பாரம்பரிய மூலிகைகள் உதவியது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் பாரம்பரிய மருந்துகள் மற்றும் மூலிகைகளை ஆராயத் தொடங்கினார். அவர் மதுரை வெரிச்சியூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட அரியவகை மருத்துவ குணம் கொண்ட மூலிகை தோட்டத்தை கடினமாக உழைத்து உருவாக்கி உள்ளார்.
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மூலிகைகளை மக்களுக்கு வழங்கினார். இவரது மூலிகைத் தோட்டத்தைப் பார்க்க வெகு தொலைவில் இருந்து மக்கள் வருகிறார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்த நமது பாரம்பரியத்தை சுபஸ்ரீ முன்னெடுத்துச் செல்கிறார். அவரது மூலிகை தோட்டம் நமது கடந்த காலத்தை எதிர் காலத்துடன் இணைக்கிறது. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்றார்.
- சமூக உணர்வோடு சமுதாயத்துக்கு ஆற்றும் பணிகள், மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகிறது.
- ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன்கிபாத்) நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலியில் பேசி வருகிறார். இன்று தனது 114-வது உரையில் மோடி கூறியதாவது:-
நாம் அனைவரும் நமது பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நான் அமெரிக்கா சென்றபோது இந்தியாவை சேர்ந்த 300 கலைப்பொருட்கள் மீட்டு கொண்டு வரப்பட்டன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தனது தனிப்பட்ட இல்லத்தில் கலைப்பொருட்கள் சிலவற்றை எனக்குக் காட்டினார். மீட்ட கலைப்பொருட்கள் டெரகோட்டா, கல், தந்தம், மரம், தாமிரம் மற்றும் வெண்கலம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டவை.
சில மொழிகள் சிலரால் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட மொழிகளில் ஒன்று நமது 'சந்தாளி' மொழியாகும். டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் உதவியுடன் சந்தாளிக்கு புதிய அடையாளத்தை அளிக்கும் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
மரக்கன்று நடுதல் ஒரு அற்புதமான பிரசாரம். உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அதிக மரக்கன்றுகளை நட்டு புதிய சாதனை படைத்துள்ளன.
மனதின் குரல் நிகழ்ச்சியின் செயல்முறை எனக்கு கோவிலுக்கு சென்று கடவுளைப் பார்ப்பது போன்றது. சமூக உணர்வோடு சமுதாயத்துக்கு ஆற்றும் பணிகள், மனதின் குரல் நிகழ்ச்சியில் போற்றப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி உணர்ச்சிமிக்க அத்தியாயமாகும். இந்தியாவின் உணர்வை கொண்டதாகும். மக்கள் நேர்மையான விஷயங்கள், ஊக்கம் அளிக்கும் எடுத்துக்காட்டுகள் கதைகளை விரும்புகிறார்கள்.

மேக் இன் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. அன்னிய நேரடி முதலீடு (எப்டிஐ) அதிகரிப்பு அதன் வெற்றிக்கு சாட்சியாகும் . இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் உதவியுள்ளது. வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை மக்கள் வாங்க வேண்டும்.
கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் பஞ்சம் வரும் சமயத்தில் சமாளிக்க உதவும்.
புதுச்சேரி கடற்கரையில் தூய்மை குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. மாஹே நகராட்சியை சேர்ந்த ரம்யா என்பவரின் குழுவினர் முற்றிலும் தூய்மைபடுத்துகின்றனர்.
இவ்வாறு மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
- கார் ஷோ ரூமில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
- டெல்லி விமான நிலையம் அருகே இருக்கும் உணவகத்தில் துப்பாக்கிசூடு நடந்துள்ளது
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக டெல்லியில் கேங் வார் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துவரும் நிலையில் தலைநகரில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
முதல் சம்பவத்தில் டெல்லி நரைனா பகுதியில் காவல் நிலையத்தின் அருகே உள்ள கார் ஷோ ரூமில் நேற்று இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் விற்பனைக்கு இருந்த சொகுசு கார்கள் சேதமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இரண்டாவதாக டெல்லி விமான நிலையம் அருகே மஹிபல்பபூர் நகர் பகுதியில் இருக்கும் உணவகத்தில் இன்று காலை 2.30 மணியளவில் பைக்கில் வந்த 6 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பணம் கேட்டு மிரட்டி ஹோட்டல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை அவர்கள் துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவதாக இன்று காலை 9.30 மணியளவில் நாங்லோய் [Nangloi] பகுதியில் அமைந்துள்ள சுவீட் கடை ஒன்றில் பணம் கேட்டு மிரட்டி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. முகத்தை மூடிக்கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் இந்த ஸ்வீட் ஷாப் மீது நான்கு ரவுண்டுக்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மூன்று சம்பவசங்களும் காசு கேட்டு மிரட்டுவதற்காகவே நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பல்தானா என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது.
- தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
- வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம்.
செப்டம்பர் 21 அன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது
இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தை மயிலாடுதுறை எம்.பி சுதா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அக்கடிதத்தில் "செப்டம்பர் 21, அன்று 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் படகுகளை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியது தொடர்பாகவும் உங்களுக்கு எழுதுகிறேன்.
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா என்னிடம் கூறியதாவது: கைது செய்யப்பட்ட மீனவர்கள் சம்பவத்தன்று ஆபத்தில் சிக்கிய இலங்கைப் படகை மீட்க முயன்றனர். அப்போது மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதிலும், சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படடு பெரும் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேசி மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்" என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- கதவை உடைத்து பார்த்தபோது வீட்டின் உள்ளே உள்ளே 5 சடலங்கள் கிடந்துள்ளது.
- உயிரிழந்த பெண்களின் சடலங்களின் கையிலும் கழுத்திலும் சிவப்பு நாடா பிணைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் பூட்டிய வீட்டுக்கள் இருந்து ஒரே குடும்பத்தை சேர்த்த ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தெரிவித்த நிலையில் கதவை உடைத்து பார்த்தபோது 5 சடலங்கள் கிடந்துள்ளது. சடலங்களுக்கு அருகே தூக்க மாத்திரைகளும் கிடந்துள்ளது.

உயிரிழந்தது அந்த வீட்டில் வசித்துவந்த ஹீராலால் சர்மா(46) மற்றும் அவரது நான்கு மகள்களான நீத்து(26), நிக்கி(24), நீரு(23),நிதி(20) ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி வீட்டுக்குள் சென்ற அவர்கள் வெளியே வரவே இல்லை என்று கூறப்படுகிறது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது.

ஹீராலால் சர்மாவின் மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் மகள்களில் இருவர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். எனவே மனைவி இறப்பும் மகள்களின் சிகிச்சை என மன உளைச்சலில் இருந்த ஹீராலால் 4 மகள்களையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்களின் சடலங்களின் கையிலும் கழுத்திலும் சிவப்பு நாடா பிணைக்கப்பட்டநிலையில் இருந்துள்ளது இந்த சந்தேகத்துக்கு வலு சேர்த்துள்ளது. இருப்பினும் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் முதல்வருக்கான வீட்டை காலி செய்ய உள்ளார்.
- மக்களை சந்திக்கும் வகையில் தொகுதி அருகிலேயே வீடு பார்த்து வருகிறார்.
டெல்லி மாநில முதல்வராக இருந்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் இவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.
திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க, ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், மக்கள் தன்னை கலங்கமற்றவர் எனக் கூறும்வரை முதல்வர் பதவியை ஏற்கமாட்டேன் என தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அதிஷி புதிய முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
இதனால் கெஜ்ரிவால் பிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அலுவலக வீட்டை காலியும் செய்யும் நிலையில் உள்ளார். நவராத்திரி காலம் அடுத்த மாதம் தொடக்கத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அரசு அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி அமைந்துள்ள பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக புதிய வீட்டை தேடிவருகிறார்கள்.
"அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் முதல்வர் அலுவலகத்தை காலி செய்ய இருக்கிறார். இதனால் மிகவும் தீவிரமாக புதிய வீடு தேடப்பட்டு வருகிறது. நியூடெல்லியான அவரது தொகுதி பக்கத்தில் வீடு பார்க்க கெஜ்ரிவால் முன்னுரிமை காட்டுகிறார். அவரது தொகுதி மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது அவரது நோக்கம்" என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுக்கள் தங்களுடைய வீடுகளை அவருக்கு ஒதுக்க முன்வருவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
கெஜ்ரிவால் தனது வயதான பெற்றோர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
- பா.ஜ.க. சார்பில் கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வார் போட்டியிட்டார்.
- 18 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவில் 10 உறுப்பினர்களுடன் பா.ஜ.க. மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.
புதுடெல்லி:
டெல்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக்குழுவின் கடைசி உறுப்பினருக்கான தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையுடன் நிலைக்குழுவில் பா.ஜ.க. ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநகராட்சியில் மிகவும் அதிகாரம் படைத்த அமைப்பாக இருப்பது உள்ளாட்சி நிலைக்குழு. இந்தக் குழு தான் மாநகராட்சிக்குட்பட்ட திட்டங்களை ஒதுக்கும் முடிவை எடுக்கும். மொத்தம் 18 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பா.ஜ.க.வை சேர்ந்த உறுப்பினர் கமல்ஜித் ஷெராவத் லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யானார். இதன் காரணமாக அந்த இடம் காலியானது.
அந்த காலியிடத்திற்கான தேர்தல் நேற்று நள்ளிரவில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கவுன்சிலர் சுந்தர் சிங் தன்வாரும், ஆம் ஆத்மி சார்பில் கவுன்சிலர் நிர்மலா குமாரியும் போட்டியிட்டனர்.
தேர்தலில் 115 பா.ஜ.க. கவுன்சிலர்களின் ஓட்டு, அக்கட்சியின் வேட்பாளர் சுந்தர் சிங் தன்வாருக்கு முழுமையாக கிடைத்தது. ஆனால், இரவில் நடந்த தேர்தல் என்பதால், 125 கவுன்சிலர்களுடன் பெரும்பான்மை பெற்றிருந்த ஆம்ஆத்மியும், 9 கவுன்சிலர்களைக் கொண்ட காங்கிரசும் தேர்தலை புறக்கணித்தனர். இதன்மூலம், பா.ஜ.க. வேட்பாளர் சுந்தர் சிங் தன்வார் வெற்றி பெற்றார். இதன் காரணமாக, 18 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவில் 10 உறுப்பினர்களுடன் பா.ஜ.க. மீண்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.
இரவில் நடந்த இந்த திடீர் தேர்தலுக்கு அதிருப்தி தெரிவித்த முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவால், மன்றத்தை கூட்டுவதற்கு மேயருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், மன்றம் கூடுவதற்கு வழங்கப்பட்ட 72 மணிநேரம் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
டெல்லி மாநகராட்சி நிலைக்குழுவின் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாய்ப்பு கிடைக்காதது, புதிய முதல்வராக பொறுப்பேற்ற அதிஷிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
- மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
- நாயுடுவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை கோரியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பக்தர்களை உலுக்கிய திருப்பதி லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரிக்க கோரிய மனுக்களை நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.-யான திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவர் ஒய்வி சுப்பா ரெட்டி ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் மனுக்களை நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்க உள்ளது.
லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் விரிவான தடயவியல் அறிக்கையையும் கோரி பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஒய்.வி. சுப்பா ரெட்டி தாக்கல் செய்துள்ள மனுவில், நாயுடுவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியால் கண்காணிக்கப்படும் சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழுவை கோரியுள்ளார்.
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை பிரசாதமாக தயாரிக்க விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் ‘சத் பூஜை’ கொண்டாடப்படுகிறது.
- கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
புதுடெல்லி:
அக்டோபர், நவம்பர் மாதங்களில் அடுத்தடுத்து பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அக்டோபர் 9-ந் தேதி துர்கா பூஜை தொடங்குகிறது. அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 7 மற்றும் 8-ந் தேதிகளில் 'சத் பூஜை' கொண்டாடப்படுகிறது. பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படும். 4 நாட்கள் விரதம் இருந்து புனித நீராடி சூரிய கடவுளை வழிபடுவது இதன் முக்கிய அம்சம் ஆகும்.
துர்கா பூஜை, மேற்கு வங்காளத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும்.
அதனால், இந்த பண்டிகை காலத்தில், பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிகள் நிரம்பி வழிவது வழக்கம்.
இதை கருத்தில்கொண்டு, பண்டிகை காலத்தை முன்னிட்டு சுமார் 6 ஆயிரம் சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 4 ஆயிரத்து 429 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இதுவரை 5 ஆயிரத்து 975 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் 1 கோடிக்கு மேற்பட்ட பயணிகள் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல முடியும்.
இதுதவிர, பயணிகள் நெரிசலை சமாளிக்க 108 ரெயில்களில் கூடுதலாக பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், 12 ஆயிரத்து 500 பெட்டிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
- வீடியோவை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.
டாக்டர் ஆக வேண்டும் என்பது மாணவர்கள் பலரது கனவாக உள்ளது. இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் நீட் தேர்வு எழுதுகின்றனர். எனினும் டாக்டர் படிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
இவ்வாறு போட்டி போட்டு சேரும் மருத்துவ மாணவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது குறித்த வீடியோவை ஒரு மாணவர் வெளியிட அது சமூகவலைதளங்களில் வைரலாகிறது.
அந்த வீடியோவில் இந்தியாவின் முதன்மை மருத்துவ கல்லூரியான எய்ம்ஸ் மாணவர் விடுதியை சுற்றிக் காண்பித்தார். அப்போது அவர் கூறுகையில், விசாலமான படுக்கை, மேஜை, அலமாரி மற்றும் சுழலும் நாற்காலி போன்ற வசதிகளுக்கு மாதம் ரூ.15 வாடகை, 24 மணி நேர மின்சாரத்துக்கு மாதம் ரூ.5 மட்டுமே செலவாகிறது என பேசினார்.
இதனை பார்த்த பலரும் மருத்துவ படிப்புக்கு இவ்வளவுதான் செலவா என வியந்து உள்ளனர்.
? AIIMS Deoghar room tour in Jharkhand. pic.twitter.com/NdCp5j38xx
— Indian Tech & Infra (@IndianTechGuide) September 24, 2024
- குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
- குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை உட்பட 7 பேர் அக்கலவரத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008-ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பில்கிஸ் பானு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த 11 பேரை நன்னடத்தையின் அடிப்படையில் ஆகஸ்ட் 15, 2022 அன்று குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனையடுத்து, 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஜனவரி 8-ம் தேதி அவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்தது. பில்கிஸ் பானு வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றதால், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்குதான் உள்ளது.
ஆகவே குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மேலும் குஜராத் அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்ட்டிருந்தது
இந்த மனு நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் பூயன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தின் கருத்தில் எந்த தவறும் இல்லை. அதை நீக்கக்கோரும் இந்த மனுவில் எந்த தகுதியும் முகாந்திரமும் இல்லை, இது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
- யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, முதல்வர் அதைத் தொடர்ந்து மறைந்த சிபிஐ-எம் பொதுச்செயலாளர் யெச்சூரியின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சீதாராம் யெச்சூரியின் உருவப்படத்திற்கு, முதலமசை்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
முதல்வரை தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து யெச்சூரியின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.






