என் மலர்tooltip icon

    டெல்லி

    • தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை.
    • இங்கு சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

    அவரது கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி கிஞ்சராப்பு ராம்மோகன் நாயுடு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தின் மிக முக்கிய விமான நிலையங்களில் ஒன்று மதுரை. எனவே, இதை கருத்தில் கொண்டு மதுரை விமான நிலையத்தின் மேம்பாட்டுக்காக அரசு குறிப்பாக விமானப் போக்குவரத்துத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தற்போது விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு விமானங்கள் மட்டுமின்றி சர்வதேச விமானங்களின் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான நிலையத்துக்கான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தீவிர பரிசீலனையில் உள்ளது.

    மதுரை-சென்னை மற்றும் மதுரை-பெங்களூரு விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற உறுப்பினரின் கோரிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நிச்சயம் பேசப்படும். அந்த நிறுவனங்களின் திறனுக்கு உட்பட்டு நிச்சயம் அது அமல்படுத்தப்படும்.

    மதுரை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து இரண்டையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    எங்களைப் பொறுத்தவரை மதுரை விமான நிலையம் உள்நாட்டு விமானப் போக்குவரத்து, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமான இடம். எனவே, அதை மேம்படுத்தும் நோக்கில் எங்கள் பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

    • சசிதரூர் சமீப காலமாக பிரதமர் மோடி, மத்திய அரசின் செயல்பாடுகளை புகழ்ந்து வருகிறார்.
    • கேரள காங்கிரஸ் தலைமையும், ராகுலும் உரிய மரியாதை வழங்கவில்லை என்றார் சசிதரூர்.

    புதுடெல்லி:

    கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்து வருபவர் சசி தரூர். இவர் சமீபகாலமாக பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் புகழ்ந்தும், பாராட்டியும் பேசி வருகிறார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. சக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, கேரள சட்டசபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து ஆலோசிக்க அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களை மேடையில் இருந்த ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார். நிர்வாகிகளுடன் கை குலுக்கினார். அப்போது மேடையில் நின்றிருந்த சசி தரூரை ராகுல் காந்தி கண்டு கொள்ளவே இல்லை. அவருடன் பேசுவதை தவிர்த்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சசி தரூர் நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கேவைச் சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கார்கே அறையில் அரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் உடனிருந்தனர்.

    அதன்பின், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், நாங்கள் ஒரு கலந்துரையாடல் மற்றும் மிகச் சிறந்த, ஆக்கப்பூர்வமான, நேர்மறையான விவாதத்தை நடத்தினோம். எல்லாம் நன்றாக இருக்கிறது. நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் ஒன்றாகச் செல்கிறோம். இதற்குமேல் என்ன சொல்ல முடியும்.

    நான் ஏற்கனவே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எனது வாக்காளர்களின் நம்பிக்கையை நான் பெற்றிருக்கிறேன். நாடாளுமன்றத்தில் அவர்களின் நலன்களைக் கவனிப்பதுதான் எனது வேலை என தெரிவித்தார்.

    • இந்த விழாவுக்கு குதிரைப்படை சூழ ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து வரப்பட்டார்.
    • ராணுவம், கடற்படை, விமானப்படைகளின் இசைக்குழு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

    புதுடெல்லி:

    77-வது குடியரசு தினவிழா கொண்டாட்டங்களின் நிறைவாக முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியின் விஜய் சவுக்கில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு குதிரைப்படை சூழ ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைத்து வரப்பட்டார். பாசறை திரும்பும் நிகழ்வை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல மத்திய மந்திரிகள் நேரில் கண்டுகளித்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடி தனது சோஷியல் மீடியா பதிவில், "இவ்விழா இந்தியாவின் செழுமையான இராணுவப் பாரம்பரிய வலிமையை வெளிப்படுத்தும்" எனக் குறிப்பிட்டார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்யும் ஆயுதப் படைகள் குறித்து ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

    ராணுவம், கடற்படை, விமானப்படை, மத்திய ஆயுதக் காவல் படைகளின் இசைக்குழுக்களின் 30 நிகழ்ச்சிகள் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்தன.

    விழாவின் உச்சகட்டமாக, 'சாரே ஜஹான் சே அச்சா' பாடல் இசைக்கப்பட்டு, தேசியக்கொடி இறக்கப்பட்டு குடியரசு தின கொண்டாட்டங்கள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன

    • ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.
    • இளைய சமுதாயம், சேவை துறையினரை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதையொட்டி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

    * பட்ஜெட் கூட்டத்தொடர் மிகமிக முக்கியமானது. இந்தியாவின் வளர்ச்சியை மனதில் வைத்து எம்.பி.க்கள் செயல்பட வேண்டும்.

    * இந்தியாவின் வளர்ச்சிக்கு அனைத்து எம்.பி.க்களும் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்.

    * ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம்.

    * பாராளுமன்றத்தில் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

    * உலகத்தின் நம்பிக்கையாக தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

    * ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

    * பாராளுமன்றத்தில் ஜனாதிபதி நேற்று ஆற்றிய உரை 140 கோடி இந்திய மக்களின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

    * 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை எட்டுவதற்கு அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியம்.

    * இளைய சமுதாயம், சேவை துறையினரை மனதில் வைத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    * ஜி.எஸ்.டி. வருவாயில்1.65 லட்சம் கோடியை திரட்டி சாதனை படைத்திருக்கிறோம்.

    * 2028-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம்.

    * நீண்ட கால பிரச்சனை என்ற நிலையில் இருந்து நீண்ட கால தீர்வு என்ற நிலையை நோக்கி இந்தியா பயணிக்கிறது.

    * பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீண்ட கால வளர்ச்சிக்கு வித்திடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளி விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் நிறுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருத்து.
    • போலியான அல்லது தரம் குறைந்த வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டதாக சில புகார்கள் உள்ளன.

    ரெயில்வே துறையில் வேலைப்பார்க்கும் அதிகாரிகள் ஓய்வு பெறும்போது, தங்க முலாம் பூசிய வெள்ளிப் பதக்கம் வழங்குவது நடைமுறையாக உள்ளது. இந்த நிலையில் இனிமேல் இந்த பதக்கம் வழங்கப்படாது என ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரெயில்வே அமைச்சகம் அனைத்து மண்டல ரெயில்வேயிக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.

    சுற்றிக்கையில் "தற்போதுள்ள பதக்கம் வழங்கும் நடைமுறை இத்துடன் நிறுத்தப்படுகிறது. ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்டிருக்கும் வெள்ளி பதக்கங்கள் பயனுள்ள மற்ற செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேற்கொண்டு எந்த காரணமும் குறிப்பிடப்படவில்லை. தற்போது வெள்ளி விலை அதிகரித்துள்ளதால் செலவினத்தை கட்டுப்படுத்தவும், தரமற்ற வெள்ளி பதக்கம் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதாலும் நிறுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக தரம் குறைந்த மற்றும் போலியாக வெள்ளி வழங்கப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. இது கூட முக்கிய காரணமாக இருக்கலாம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • கூட்டணி குறித்து இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு.

    டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியுடன் திமுக எம்பி கனிமொழி சந்தித்துள்ளார்.

    கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடுகள் குறித்தும் இறுதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக- காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி எம்பி கனிமொழி, ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.
    • கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

    மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * லட்சாதிபதி சகோதரிகள் திட்டத்தில் நாடு முழுவதும் 2 கோடி பெண்கள் லட்சாதிபதியாக மாற்றி உள்ளனர்.

    * ஏழைக்களுக்காக தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 2.5 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

    * எதிரிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் வீரம் வெளிச்சம்போட்டு காட்டப்பட்டுள்ளது.

    * ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது.

    * இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்.

    * இடதுசாரி பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    * நாட்டில் தற்போது இடதுசாரி பயங்கரவாதம் வெறும் 8 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது.

    * 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இடதுசாரி பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியாக வாழ முடிகிறது.

    * இந்தியாவில் விரைவில் இடதுசாரி பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

    * கடந்தாண்டு 50 ஆயிரமாக இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை இந்தாண்டு 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

    * 2 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் 2 லட்சம் நபர்களுக்க வேலை கிடைத்துள்ளது.

    * உலகக்கோப்பைகளை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு பாராட்டுகள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இந்தியாவுக்கு வெகுதூரம் இல்லை.
    • செமி கண்டக்டர் சிப் உற்பத்தியில் உலகிற்கே முன்மாதிரியாக இந்தியா உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

    மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கடந்தாண்டில் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்து உலகிலேயே முதல் இடத்தை இந்தியா பிடித்து சாதனை படைத்துள்ளது.

    * உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    * தமிழ்நாட்டில் பாம்பன் பாலம் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    * விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இந்தியாவுக்கு வெகுதூரம் இல்லை.

    * கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகன பதிவு செய்யப்பட்டுள்ளது.

    * உலகிலேயே அதிவேகத்தில் வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது.

    * உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் மந்தநிலை இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது.

    * உலகில் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்திய வளர்ச்சி அடைந்துள்ளது.

    * கடந்தாண்டில் மட்டும் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

    * சூரிய மின் திட்டத்திற்கான அரசின் நடவடிக்கைகள் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளோம்.

    * AI துறையில் முதலீடு அதிகரித்துள்ளது. செமி கண்டக்டர் சிப் உற்பத்தியில் உலகிற்கே முன்மாதிரியாக இந்தியா உள்ளது.

    * நாட்டின் பின்தங்கிய மாநிலங்களில் உள்ள மக்களையும் முன்னேற்றும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    * ரெயில் சேவையால் இணைக்கப்பட்ட நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    * அசாமில் உற்பத்தி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.

    * மீன் வளத்தை பெருக்குவதில் உலகிலேயே இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    * உஜ்வாலா திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    * எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

    * நாட்டில் கிட்டத்தட்ட 95 கோடி குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு சலுகைகள் இப்போது கிடைக்கிறது.

    * நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட அரசு உறுதி பூண்டுள்ளது.

    * வளர்ச்சி ஒன்றே தாரக மந்திரம் என மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அஜித் பவாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பலர் இறந்த செய்தி மிகவும் துயரமானது.

    மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித் பவாரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், அஜித் பவாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,

    மகாராஷ்டிராவின் பாராமதியில் நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட பலர் இறந்த செய்தி மிகவும் துயரமானது. அஜித் பவாரின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு.

    மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக கூட்டுறவுத் துறையில், பவார் ஆற்றிய சிறப்புப் பங்களிப்பிற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேலும், இந்த விபத்தில் உயிர் இழந்த மற்ற அனைவரின் குடும்பங்களுக்கும் இந்த வலியைத் தாங்கும் வலிமையை கடவுள் வழங்கட்டும் என்று கூறியுள்ளார். 

    • ஜனாதிபதி தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.
    • கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.

    தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாள் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர்.

    மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது.

    * 2 கோடி மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளது.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    * எல்லோருக்கும் எல்லாமுமான வளர்ச்சியை நோக்கி மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    * பல்வேறு துறைகளில் நாடு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

    * ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
    • வருகிற 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு இன்று தொடங்கி முதல் வருகிற 13-ந் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரையும் நடக்கிறது.

    தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் ஆளுநரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் தொடங்குகிறது.

    முதல் நாளான இன்று, பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

    வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

    5 மாநில தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    • இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது
    • ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

    இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை விட மோசமான நிலையை எட்டியுள்ளதாக காங்கிரஸ் சாடியுள்ளது.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியாவின் 1% செல்வந்தர்களிடம் நாட்டின் 40 சதவீதத்திற்கும் அதிகமான செல்வம் குவிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    1922 முதல் 2023 வரையிலான இந்தியாவின் வருமானம் மற்றும் செல்வச் செழிப்பு குறித்த ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டிய அவர், "மோடியின் பில்லியனர் ராஜ் ஆட்சி, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை விட அதிக ஏற்றத்தாழ்வு கொண்டதாக உள்ளது.

    கடந்த பத்தாண்டுகளில் சாதாரண குடிமக்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் தேக்கமடைந்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு மட்டும் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது.

    அரசு தனக்குச் சாதகமற்ற பொருளாதாரத் தரவுகளை மறைக்கிறது. 2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதது மற்றும் நுகர்வோர் செலவின ஆய்வுகளை வெளியிடாதது போன்றவை மிகப்பெரிய கொள்கை தோல்வி" என்று தெரிவித்துள்ளார். 

    ×