என் மலர்tooltip icon

    பீகார்

    • நிதிஷ் குமார் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
    • இலாகா தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதனால் 20-ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி வழங்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் அமைச்சராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளனர்.

    யார் யாருக்கு எந்த இலாகா என்பதை முடிவு செய்ய பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் இடையில் பெரும்பாலான இலாகாக்களை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆனால், உள்துறை அமைச்சர் இலாகாவை பாஜக-வுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதேபோல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.

    இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய நிலை. ஒருவேளை மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும்பான்மையை தக்கவைக்க இரண்டு பதவிகளும்தான் முக்கியமானவை. இதனால் இந்த பதவிகளை தக்கவைக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டு வருகின்றனர்.

    • பீகாரில் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.
    • போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

    பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது.

    அதற்கு ஏற்ப பா.ஜ.க., ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட ஆளும் கூட்டணியையும், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியையும் தேர்தல் பிரசாரத்தில் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

    மொத்தம் உள்ள 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களம் இறக்கினார். ஆனால் அவர்களில் 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகிவிட்டனர். இதனால் ஜன்சுராஜ் கட்சி 238 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டது.

    போட்டியிட்ட 238 தொகுதிகளில் அனைத்திலும் ஜன்சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். அதோடு 236 தொகுதிகளில் டெபாசிட்டும் பறி கொடுத்தனர்.

    இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர், "நாங்கள் மேற்கொண்ட நேர்மையான முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தது. இதை ஒப்புக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. எங்களால் இந்த சிஸ்டமை மாற்றமுடியவில்லை என்பதை விட அதிகாரத்தில் கூட எங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    ஆனால் பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக குறிப்பிட்ட பங்கைக் கொண்டிருந்தோம். மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதில் இருந்தே நாங்கள் எங்கோ வறு இருந்திருக்கிறோம் என்பது புரிகிறது.

    மக்கள் எங்கள் மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால், அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது தான். பீகார் மக்களின் நம்பிக்கையை என்னால் வெல்ல முடியவில்லை என்பதற்கு நான் 100% பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும்.
    • ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளார்.

    பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.

    பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே நேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார் வரும் 20 ஆம் தேதி புதிய அமைச்சரவையுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் பீகார் சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    சட்டமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருக்க குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெறும் 6 தொகுதியில் வெற்றிபெற்றிந்தபோதும் ஆர்ஜேடி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 10 சதவீததிற்கும் சிறிது அதிகம் ஆகும்.

    எனவே கடந்த ஆட்சிக்காலத்தை போலாவே தேஜஸ்வி யாதவ் எதிர்கட்சித் தலைவராக தொடர உள்ளார். இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ரஹோபூர் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக மீண்டும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.
    • ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைக் தக்க வைத்துள்ளது.

    தோ்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக நிதீஷ் குமாா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாக பா.ஜ.க. கூறியிருந்தது.

    இந்த நிலையில் சட்டசபைத் தோ்தலில் தொடா்ந்து 2-வது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பா.ஜ.க. அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்-மந்திரி பதவியை பா.ஜ.க. விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால் முதல்-மந்திரியாக நிதீஷ்குமாா் நீடிப்பாா் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), இந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்தன. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும், நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என்று அறிவித்தனர்.

    தோ்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள்கள் ஆகியுள்ள நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று தீவிரமடைந்தன.

    பாட்னாவில் முதல்-மந்திரி நிதீஷ் குமாரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினார்கள். இதையடுத்து ஒருமித்த சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக பீகார் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்கு வசதியாக பதவிகளை ராஜினாமா செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவர் மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கவர்னரை சந்தித்தார். தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னரிடம் கொடுத்தார்.

    அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர் புதிய ஆட்சி அமையும் வரை தற்காலிகமாக முதல்-மந்திரி பதவியை தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

    பீகாா் சட்டசபையின் பதவிக் காலம் வருகிற 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும்.

    நாளை தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. அதில் நிதிஷ்குமார் புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார். இதைத் தொடர்ந்து புதிய அரசு அமைப்பதற்கான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 20-ந் தேதி நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர்.

    • பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான்.
    • ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

    பீகார் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.

    இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய ஜனதாதளம்-காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதிலும் பாரம்பரியமிக்க தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட 61 தொகுதிகளில் வெறும் 6 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பது போல இந்த ஒற்றை இலக்க வெற்றி அமைந்தது.

    இத்தோல்வி காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தியா கூட்டணிக்கே இது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

    தொண்டர்கள் மட்டுமின்றி பீகாரில் வெற்றி பெற்ற 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் மனநிலையும் தற்போது சற்று மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இனியும் காங்கிரசில் பயணித்தால் தங்களுக்கு எதிர்காலம் இருக்குமா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுந்துள்ளது.

    இதனால் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் சிலர் காங்கிரசில் இருந்து விலகி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தில் இணையலாமா? என ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஐக்கிய ஜனதாதள முக்கிய தலைவரிடம் தொடர்பில் இருப்பதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்து இருக்கிறது. பீகாரில் வெற்றி பெற்றதே 6 எம்.எல்.ஏ.க்கள் தான். அவர்களும் ஒரு வேளை கட்சி தாவி விட்டால் ஒண்ணுமே இல்லாமல் போய் விடுமே என கட்சி மேலிடம் கருதுகிறது. அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    அதே சமயம் ஐக்கிய ஜனதாதளமும் காங்கிரசை துடைத்தெறிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியிலும் அக்கட்சி ஈடுபட்டு வருவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்காக திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதனால் எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற சஸ்பென்ஸ் பீகாரில் நீடித்து வருகிறது.

    • அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.
    • லாலுவின் மற்ற மூன்று மகள்களும் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பீகார் தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவைத் தொடர்ந்து, ஆர்ஜேடி நிறுவனர் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    லாலுவின் மகன் ரோஹிணி ஆச்சார்யா நேற்று, அரசியலை விட்டு விலகுவதாகவும் குடும்பத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

    இதன் பின்ணணியில் தேஜஸ்வி யாதவ் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பிறகு வீட்டில் ஏற்பட்ட சண்டையில், தேஜஸ்வி, மூத்த சகோதரி ரோகிணியை குடும்பத்தின் சாபம் என்றும் அவரின் சாபத்தால் தான் தேர்தல் தோல்வி ஏற்பட்டதாகவும் திட்டியுள்ளார் என்றும் ரோஹிணி மீது தேஜஸ்வி செருப்பை எடுத்து வீசியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரோஹிணி தந்தை லாலுவுக்கு சிறுநீரக தானம் செய்திருந்த நிலையில் அதையும் தேஜஸ்வி குறை சொன்னதாக கூறப்படுகிறது.

    இதைத்த்தொடர்ந்தே ரோஹிணி அறிக்கை விட்டுள்ளார். அதில், "நேற்று, யாரோ ஒருவர் என்னை சபித்து, நான் என் தந்தைக்கு மிகவும் அழுக்கான சிறுநீரகத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்று, மக்களவை டிக்கெட் வாங்கினேன் என்று சொன்னார்கள்.

    இப்போது என் மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் உட்பட என் குடும்பத்தினரின் அனுமதியைப் பெறாமல் என் சிறுநீரகத்தை தானம் செய்தது ஒரு பெரிய தவறு என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நான் கடவுளாகக் கருதும் என் தந்தையைக் காப்பாற்ற இதைச் செய்தேன்.

    தந்தையுடன் ரோகிணி

     

    இப்போது நான் தொடர்ந்து கேட்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், அது ஒரு மோசமான வேலை. உங்களில் யாரும் மீண்டும் இதுபோன்ற தவறைச் செய்யக்கூடாது. ரோகிணியைப் போன்ற ஒரு மகள் மீண்டும் எந்த குடும்பத்திலும் பிறக்கக்கூடாது" என்று தெரிவித்துள்ளார். தனது குடும்பம் தன்னை ஒதுக்கிவிட்டதாக அவர் விரக்தியுடன் தெரிவித்தார். மேலும் தேஜஸ்வியின் நெருங்கிய கூட்டாளிகள் இருவர் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரோகிணி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஏற்கனவே மனைவியை விட்டு வேறொரு இளம்பெண்ணுடம் தொடர்பில் இருந்ததால் வெளியேற்றப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், தன்னை போலவே குடும்பத்தால் சகோதரி ரோஹணி அவமதிக்கப்பட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே லாலுவின் மற்ற மூன்று மகள்களும் பாட்டனாவில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாலு மற்றும் ராபிரி தேவி தம்பதிக்கு லாலு மற்றும் ராப்ரிக்கு ஏழு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

    • தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் வெற்றி பெற்றது.
    • நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு 85 இடங்களில் வெற்றி பெற்றது.

    பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி 243 இடங்களில் 202-ல் வெற்றி பெற்றது. பீகார் தேர்தலில் அக்கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    இந்த நிலையில் நிதிஷ் குமார் குமார் மகன் நிஷாந்த் "நாங்கள் தீர்க்கமான வெற்றி கிடைக்கும் என உறுதியாக இருந்தோம். ஆனால் இறுதி முடிவு நாங்கள் எதிர்பார்த்ததைவிட மகத்தானது. மிகப்பெரிய வெற்றியை அளித்த பீகார் மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். தந்தையின் சாதனைப் பதிவு மற்றும் மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான அவரது தொலைநோக்குப் பார்வையைப் பார்த்த பிறகு மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய பெரும்பான்மையை வழங்கியுள்ளனர்" என்றார்.

    • புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
    • பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.

    நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.

    இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.

    இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.

    இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

    பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.

    ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. 

    மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.

    தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.  

    • பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பாட்னா:

    243 உறுப்பினா்களை கொண்ட பீகாா் சட்டசபைக்கு நடைபெற்ற தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    இந்த கூட்டணியில் 89 இடங்களுடன் பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளத்துக்கு 85 தொகுதிகளும், லோக் ஜனசக்திக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) 19 இடங்களும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 5 தொகுதிகளும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவுக்கு 4 இடங்களும் கிடைத்தன.

    ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளின் 'இந்தியா' கூட்ட ணிக்கு பலத்த அடி விழுந்தது. இந்த கூட்டணியால் 34 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. ராஷ்டிரிய ஜனதாதளம் 25, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்டு லெனினிஸ்டு-2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1 இடங்களை கைப்பற்றின.

    தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களிலும் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியிலும், ஐ.ஐ.பி. ஒரு இடத்தையும் பிடித்தன.

    தேர்தலில் பா.ஜ.க.வைச் சோ்ந்த துணை முதல்-மந்திரிகள் சாம்ராட் சவுத்திரி, விஜய் குமாா் சின்கா உள்பட மாநில மந்திரிகள் 25 போ் (பா.ஜ.க. 15, ஐக்கிய ஜனதா தளம் 10) மீண்டும் போட்டியிட்டனா். இவா்களில், ஐக்கிய ஜனதா தளத்தின் சுமித்குமாா் சிங் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனா்.

    இதற்கிடையே பீகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் டெல்லியிலும், பாட்னாவிலும் பேச்சுவார்த்தையை தொடங்கின. பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமாரை அவரது இல்லத்தில் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    ஐக்கிய ஜனதா தள செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

    நிதிஷ்குமாரை மீண்டும் முதல்-மந்திரியாக்க பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சம்மதித்துள்ளன. இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, "பீகார் மக்கள் நல்ல ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து இருக்கிறார்கள். மாநில மக்கள் நிதிஷ்குமார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளனர்" என்றார்.

    புதிய ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக நிதிஷ்குமார் நாளை முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதன் பிறகு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்படுவார். அதை தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து உரிமை கோருவார்.

    நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்கும் விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ஒருவர் தெரிவித்தார். 19-ந்தேதி சர்வ அமாவாசை (நல்ல நாள்) என்பதால் அன்றே அவர் பதவி ஏற்கலாம் என்று கூறப்படுகிறது. பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறும்.

    தற்போது அமைய இருக்கும் புதிய ஆட்சியில் கூட்டணியில் உள்ள மற்ற 3 கட்சிகளும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரிசபையில் இடம் பெறுவதில் ஆர்வத்துடன் இருப்பதாக லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான சிராக் பஸ்வான் நிதிஷ்குமாரை சந்தித்த பிறகு தெரிவித்தார். கடந்த அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. மட்டுமே இடம் பெற்றன.

    பா.ஜ.க.வில் 15 பேரும், ஐக்கிய ஜனதா தளத்தில் 12 பேரும், லோக் ஜனசக்தி கட்சியில் 6 பேரும், இந்துஸ் தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் சார்பில் ஒரு வரும் மந்திரிகள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகாரில் 10-வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.

    முதன்முதலில் அவர் 2000-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி முதல்-மந்திரியாக பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்.ஜே.டி. கட்சி சார்பில் லல்லுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்-மந்திரி ஆனார். அதன்பிறகு 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் முதல்-மந்திரி ஆனார்.

    கடந்த 2010-ம் ஆண்டு நிதிஷ்குமார் 3-வது முறை முதல்-மந்திரி ஆனார். கடைசி 2 ஆட்சியிலும் நிதிஷ்குமாருக்கு பா.ஜ.க. முழு ஆதரவு அளித்தது. பின்னர் 2014-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்தார். லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மெகா கூட்டணியில் இணைந்தவர் 2015-ம் ஆண்டு மகத்தான வெற்றி பெற்றார்.

    இதில் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு அவர் மெகா கூட்டணியில் இருந்து பிரிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினார். 2020-ம் ஆண்டு மறுபடியும் முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022-ல் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி

    ஆர்.ஜே.டி., காங்கிரசின் மெகா கூட்டணி சார்பில் முதல்-மந்திரியானார்.

    இதற்கிடையில் 2024-ம் ஆண்டு மே 24-ந்தேதி முதல் 278 நாட்கள் ஜே.டி.யு. ஆட்சியில் ஜிதன்ராம் மாஞ்சி இடைக்கால முதல்-மந்திரியாக இருந்தார்.

    ஜனவரி 2024-ம் ஆண்டு நிதிஷ்குமார் மீண்டும் மெகா கூட்டணியை விட்டு வெளியேறி பா.ஜ.க.வுடன் இணைந்து 9-வது முறையாக முதல்-மந்திரி ஆனார். தற்போது 10-வது முறையாக முதல்-மந்திரி பொறுப்பேற்க உள்ளார்.

    • பீகார் தேர்தலில் ராஷ்டிரீய ஜனதா தளம் உள்ளிட்ட மகாகட்பந்தன் கூட்டணி தோல்வி அடைந்தது.
    • அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என லாலு மகள் பதிவிட்டுள்ளார்.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டது.

    இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் மகள் ரோகிணி ஆச்சாரியா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தமது எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியலை விட்டு விலகுகிறேன். என் குடும்பத்தையும் துறக்கிறேன். அனைத்து பழியையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்விக்கு ஆதரவாக ரோகிணி பிரசாரம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பீகார் தேர்தலில் படுதோல்வி அடைந்த மறுநாளே லாலு மகளின் அறிவிப்பால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்குச் சென்றுள்ளது.
    • பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

    243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    முதல்வர் நிதிஷ் குமாரின் ஜேடியு -பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

    கூட்டணியில் 101 இடங்களில் போட்டியிட்ட பாஜக 89 இடங்களிலும், 101 இடங்களில் போட்டியிட்ட ஜேடியு 85 இடங்களிலும், 29 இடங்களில் போட்டியிட்ட லோக் ஜனசக்தி 19 இடங்களிலும் இதர கூட்டணி கட்சிகள் 9 இடங்களிலும் வென்றன.

    மறுபுறம் ஆர்ஜேடி - காங்கிரசின் மகபந்தன் கூட்டணி 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியில் 143 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி 25 இடங்களிலும், 61 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றுள்ளது.

    கம்யூனிஸ்ட் கட்சிகள் 3 இடங்களில் வென்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் 5 இடங்களில் வென்றுள்ளது.

    இந்நிலையில் பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதம் வெளியாகி உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 20.08 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இது கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அக்கட்சி பெற்றதை விட 0.5 சதவீதம் அதிகம் ஆகும்.

    அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 19.25 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் உயர்வாகும்.

    மகபந்தன் கூட்டணியில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 23 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.11 சதவீதம் குறைவாகும்.

    அதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி 8.71 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 0.80 சதவீதம் குறைவு ஆகும். பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் 3.44 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

    அதேபோல் 243 தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான மொத்த வாக்குளில் 6.65 லட்சம் வாக்குகள் (1.81 சதவீதம்) நோட்டாவுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

    கடந்த 2020-இல் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தோ்தலில் 7.06 லட்சம் வாக்காளா்கள் (1.68 சதவீதம்) நோட்டாவுக்கு வாக்களித்தனா். 

    வாக்கு சதவீதம் என்ற முறையில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெற்றிருந்தபோதும் அதன் வெற்றி பெற்ற பெற்ற இடங்களின் எண்ணிக்கை கடந்த தேர்தலில் 75 ஆக இருந்த நிலையில் இந்த தேர்தலில் 25 ஆக சுருங்கி உள்ளது.

    பாஜக, ஜேடியு தலா 101 இடங்களில் போட்டியிட்ட நிலையில் ஆர்ஜேடி 143 இடங்களில் போட்டியிட்டதால் அதன் வாக்கு சதவீதம் கூடுதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி படுதோல்வியடைந்தது.
    • ஒன்றிரண்டு இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டெபாசிட் இழந்தது.

    பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பெண்களின் வங்கி கணக்குகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் பண பரிமாற்றம்தான் முக்கிய பங்கு வகித்தது என படுதோல்வியடைந்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தெரிவித்துள்ளார்.

    வேலையின்மை, இடம்பெயர்வு மற்றும் மாநிலத்தில் தொழில் பற்றாக்குறை போன்ற அழுத்தமான பிரச்சினைகளை எழுப்பி, அதிக அளவில் பிரசாரம் செய்த போதிலும், ஜன் சுராஜ் கட்சியால் தனக்கு ஆதரவாக வாக்குகளை பெற முடியவில்லை.

    தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், "சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் நாங்கள் ஏமாற்றமடைந்துள்ளோம். ஆனால் நாங்கள் அப்செட் ஆகவில்லை. நாங்கள் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை என்றாலும், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.

    மக்கள் ராஷ்டிரிய ஜனத தளம் மீண்டும் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்பதையும் இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது. பீகாரில் ஆளும் NDA அரசாங்கத்தால் பெண்களின் கணக்குகளுக்கு ரூ.40,000 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது. இது வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது" என்றார்.

    பீகாரில் உள்ள ஒவ்வொரு பெண்களுடைய வங்கிக் கணக்கில் தொழில் தொடங்கும் வகையில் தலா ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதி அமமல்படுத்தபின்னரும், இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக ஜன் சுராஜ் தெரிவித்துள்ளார்.

    ×