என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
சித்தூர்:
சித்தூர் குருவப்பநாயுடு தெரு பெத்தவீதியில் உள்ள சுயம்பு அங்காள பரமேஸ்வரியம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மகாளய அமாவாசையையொட்டி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
நேற்று காலை மூலவர் அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, புஷ்பம் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம், சிறப்புப் பூஜைகள், ஆராதனை செய்யப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவை நடந்தது.
அதன் பிறகு உற்சவர் அங்காள பரமேஸ்வரியம்மன், லட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மஞ்சள் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை உற்சவர் அம்மன், காசி விசாலாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
- 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
- இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்க திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலைப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகனவீதி உலாவுக்கு முன்னதாக கோலாட்டம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.
- அதிகாரப்பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி சிலர் தரிசன டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றனர்.
- பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயரை மாற்றியுள்ளது.
திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிக்கெட் கிடைத்து வந்தது. இதில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
இந்த இணையதளத்தை சிலர் போலியாக பயன்படுத்தினர். குறிப்பாக தரிசன டிக்கெட்டுகளை போலியாக முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்றனர்.
இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளுக்கு புகார் வந்தது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி, ஐ.டி. துறை பொது மேலாளர் சந்தீப் ரெட்டி ஆகியோர் கலந்து ஆலோசித்தனர்.
திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை போலியான செயலியை உருவாக்காமல் மாற்ற முடிவு செய்தனர்.
தற்போது தேவஸ்தான இணையதள முகவரி "ttdevasthanams.ap.gov.in" என மாற்றப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான தரிசனங்கள், தங்கும் வசதிகள், நன்கொடைகள் மற்றும் பிற தேவையான தகவல்களுடன் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைக்கப்பட்ட கோவில்களின் சேவைகள் மற்றும் அம்சங்கள் இந்த அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கிடைக்கும்.
பக்தர்கள் இனிமேல் புதிய இணையதளம் மூலமாகவே முன்பதிவு செய்ய வேண்டும். திருப்பதி தேவஸ்தானத்தில் ஆதாரங்களின்படி, ஒரே இணையதளம், ஒரே பயன்பாடு என்ற தலைப்பின் ஒரு பகுதியாக அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் ரூ.300 ஆன்லைன் டிக்கெட் வெளியிட்டவுடன் பலர் திருப்பதி தேவஸ்தான இணையதள முகவரியை போலியாக பயன்படுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதனால் பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதலாக ஆன்லைன் டிக்கெட்களை வெளியிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளனர்.
- நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருமலை:
நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் பக்தர்களை கவரும் வகையில் மலர்கள்-புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைக்கும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்கும் நாட்களில் பக்தர்களை கவரும் வகையில் திருமலையில் கவர்ச்சியான, கருத்துகளுடன் மலர்-புகைப்படக் கண்காட்சி நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருப்பதி தேவஸ்தான தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு கலை வடிவங்களை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதில் துரியோதணன் சபையில் திரவுபதி துகிலுரிக்கப்பட்ட காட்சி, புகழ்பெற்ற மாயா பஜார், மகாபாரதத்தில் இருந்து
பிருஹன்னலா-உத்தர குமார அத்தியாயங்கள் உள்பட இதிகாசங்களில் இருந்து எடுக்கப்பட்ட தனித்துவமான கருத்துகளுடன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணர் என்பவர், கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மலர் கண்காட்சியில் காய்கறிகள், ஐஸ், தானியங்கள், பழங்கள் போன்றவற்றைக் கொண்டு தெய்வ உருவங்களை செதுக்கி வருகிறார். நவதானியங்களில் அனுமன் மற்றும் ராமர் உருவங்களை வடிவமைத்துள்ளார்.
ராவணன் ஜடாயுவை கொன்றது, ராமரின் மகன்களான லவ-குசா, ராம ஜனனம், மோகினி-பஸ்மாசூரன், பீமசேனன்-பாகாசூரன், அனந்தாழ்வார் அத்தியாயங்கள் தவிர திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசாமி போன்ற கலை வடிவங்கள் பக்தர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் திருமலையில் பல்வேறு புகைப்படங்களும் பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அலிபிரியில் உள்ள கருடன் சிலை, திருமலை கோவில் உள்பட பல்வேறு சிற்பங்களை தேவஸ்தானத்தின் பாரம்பரிய சிற்பக்கழகம் வடிவமைத்து வைத்துள்ளது. அதில் கல், சிமெண்டு, இரும்பு, மரம் மற்றும் வண்ணப்பூச்சு வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயுர்வேதப் பொருட்கள், மதம் மற்றும் ஆன்மிக புத்தகங்கள் வைத்திருப்பது தேவஸ்தானத்தின் பெருமையை உயர்த்தியது.
இதுதவிர நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள், ஸ்ரீவாரி புஷ்கரணி உள்பட பல்வேறு இடங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாள், சங்கு, சக்கரம் உருவங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாடவீதிகளில் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோவிலின் தங்க கொடிமரம், பலிபீடம் பிரத்யேக மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் விளக்கு அலங்காரத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் வளாகம், நான்கு மாடவீதிகள் உள்பட பல்வேறு இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
- பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வருகிற 19-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது.
- வருகிற 23-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா இன்று கோலாகலமாக தொடங்கியது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஏழுமலையான் கோவிலில் அங்குரார் பனம் நடந்தது.
இன்று இரவு 7 மணி அளவில் ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரமோற்சவ விழா நடைபெறும் 9 நாட்களும் விஐபி பிரேக் தரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒரு வயது குட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள், ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்து உள்ளது. இதனால் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
பிரமோற்சவத்தின் முக்கிய நாளான வருகிற 19-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. கருட சேவையை காண நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வருகிற 18-ந் தேதி மாலை முதல் 20-ந் தேதி காலை வரை மலைப்பாதைகளில் பைக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன. வருகிற 23-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.
திருப்பதியில் நேற்று 67, 785 பேர் தரிசனம் செய்தனர்.21, 284 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ 2.78 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- கோவில் வளாகம் மற்றும் திருமலை முழுவதும் வண்ணவண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிகாலை முதல் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் சுமார் 2 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
விரைவாக தரிசனம் செய்வதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் திருமலை முழுவதும் வண்ணவண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
திருப்பதியில் நேற்று 59,304 பேர் தரிசனம் செய்தனர். 28,391 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- போலீசார் சந்தேகத்தின் பேரில் லலிதாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
- சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ், சீனிவாஸ், கணேஷ் மற்றும் பாம்பு பிடிக்கும் சந்திர சேகர் ஆகியோருடன் பிரவீன் வீட்டிற்கு வந்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கோதாவரி கனி மண்டலம், மார்க்கண்டேய காலனியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 42) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால் பிரவீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
லலிதா கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்தது.
இதனால் விரத்தி அடைந்த பிரவீன் மது போதைக்கு அடிமையானார். கள்ளக்காதலை கணவர் கைவிடாததால் ஆத்திரம் அடைந்த லலிதா கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி பிரவீன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்யும் ராமகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் ஒத்துழைப்பை லலிதா நாடினார்.
கணவரை கொலை செய்து விட்டால் ஒரு வீட்டுமனை பட்டா தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து கடந்த 10-ந்தேதி இரவு பிரவீன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். கணவர் மது போதையில் தூங்குவது குறித்து லலிதா சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ், சீனிவாஸ், கணேஷ் மற்றும் பாம்பு பிடிக்கும் சந்திர சேகர் ஆகியோருடன் பிரவீன் வீட்டிற்கு வந்தார்.
மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சுரேஷ் அவரது நண்பர்கள் பிரவீனை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.
சந்திரசேகர் விஷப்பாம்பை கொண்டு பிரவீனை கடிக்க வைத்தார். இதில் வாயில் நுரை தள்ளியபடி பிரவீன் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து சென்றனர்.
கணவர் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக லலிதா நாடகமாடினார்.
போலீசார் சந்தேகத்தின் பேரில் லலிதாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததை லலிதா ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்தனர்.
- வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.
- மது போதையில் கோழிக்கறியை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது.
திருப்பதி:
குடிமகன்கள் மது குடிக்கும் பொழுது விதவிதமான தின்பண்டங்களை சாப்பிடுகின்றனர். மது குடிக்கும் போது சைவம், அசைவம் என எதையும் பார்ப்பதில்லை கையில் கிடைப்பதை சாப்பிட்டு மகிழ்கின்றனர்.
ஆந்திராவில் மது குடிக்கும் போது சமைக்காத கோழிக்கறியை தின்றுவிட்டு தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் கொத்த குடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் பீம நாயக் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று வீட்டில் வைத்து மது குடித்தார்.
அப்போது வீட்டில் சமையல் செய்வதற்காக கோழிக்கறி வாங்கி வைத்திருந்தனர்.
மது போதையில் அதனை சாப்பிட பீம நாயக்கிற்கு ஆர்வம் ஏற்பட்டது. மதுவை குடித்தபடி சமைக்காத பச்சை கோழிக்கறியை எடுத்து சாப்பிட்டார்.
சிறிய துண்டுகளை அவர் விழுங்கினார். பின்னர் மது குடித்த படி பெரிய கோழிக்கறி துண்டு ஒன்றை எடுத்து வாயில் போட்டு அப்படியே விழுங்கினார்.
அப்போது எலும்புடன் இருந்த அந்த கோழி கறி துண்டு அவரது தொண்டையில் சிக்கியது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நர்சாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பச்சைக்கோழி கறியை தின்று தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
- முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது மேலும் 3 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்குகளில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பைபர் நெட் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜெயிலில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் கூட்டணி அமைப்பது குறித்தும் அமித்ஷா நாரா லோகேஷ் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி, மத்திய மந்திரி கிஷண்ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆந்திராவை பொருத்தவரையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கணிசமான வாக்குகளை பெறவில்லை. இதனால் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. அதிக கவனத்தை செலுத்தவில்லை.
அந்த மாநிலத்தில் 9 பாராளுமன்ற தொகுதி 48 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனியாக போட்டியிடவில்லை. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் வளர்ச்சியில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் பெரும் பங்கு வகித்ததாக இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் வளர்ச்சி அடைந்து உள்ள பா.ஜ.க. டார்கெட் 75 என்ற இலக்குடன் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.
அதனால் தெலுங்கானாவில் பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால் தெலுங்கானா மாநில அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார். அவர் அனைத்து திட்டங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
இதனால் ஆந்திராவில் பா.ஜ.க. நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
- பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது.
பிரமோற்சவ விழாவையொட்டி நாளை அங்குராற்பனமும் மறுநாள் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்குகிறது.
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் அதிக அளவு சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி. பிரேக் தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஒரு வயது உட்பட்ட குழந்தைகளுடன் வருபவர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால் இலவச தரிசனத்திற்கு நேரம் குறையும்.
ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
வரும் 19-ந்தேதி ஆகம விதிகளின்படி 30 நிமிடங்கள் முன்பாக 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நாளை முதல் 26-ந்தேதி வரை தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து வேலூருக்கு 85 சிறப்பு பஸ்களும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 35 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பக்தர்களின் வருகையை பொறுத்து சென்னையில் இருந்து திருப்பதிக்கு 85 முதல் 90 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதே போல சேலம், கோவை, திருச்சி, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
வரும் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கள் வருகிற 24-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மற்றும் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
திருப்பதியில் நேற்று 65,937 பேர் தரிசனம் செய்தனர். 24,101 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.
- பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஹனுமகொண்டா மாவட்டம் குண்டல சிங்காரம் இந்திரம்மா காலனியைச் சேர்ந்தவர் கமலா. இவருடைய மகளை பிரசாத் என்பவர் திருமணம் செய்துள்ளார்.
இவர், மஞ்சிரியாலா மாவட்டம் கோடபள்ளி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார்.
கமலா தன்னுடைய குடும்ப தேவைக்காக மருமகன் பிரசாத்திடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கினார். அந்த பணத்தை பிரசாத் சில நாட்களாக திருப்பி கொடுக்குமாறு கமலாவிடம் கேட்டு வந்தார். கமலா பணத்தை தராமல் இருந்தார்.
இந்நிலையில் பணத்தை கேட்டு பிரசாத் தனது மாமியார் கமலாவிடம் தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முற்றியது. பிரசாத் ஆத்திரமடைந்து தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கமலாவை சுட்டார். குண்டு பாய்ந்து கமலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
கமலாவை துப்பாக்கியால் சுட்ட பிரசாத்தை பிடித்து கட்டி வைத்தனர்.
இதையடுத்து சிட்டகபாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்த் 2 மகள்களை கொன்று அவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் பாயில் பள்ளி, பவானி நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 42). கூலி தொழிலாளி. இவரது மகள்கள் சிரவந்தி (8), சிரவைய்யா (6).
நேற்று இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீகாந்த் குளிர்பானத்தில் அதிக அளவு தூக்க மாத்திரைகளை கலந்து தனது 2 மகள்களுக்கும் கொடுத்தார். சிறிது நேரத்தில் அவர்கள் துடிதுடித்து இறந்தனர்.
பின்னர் ஸ்ரீகாந்த் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மகள்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீகாந்த் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது ஸ்ரீகாந்த் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பக்கத்து அறையில் அவரது 2 மகள்களும் இறந்து கிடந்தனர்.
அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீகாந்த் 2 மகள்களை கொன்று அவரும் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






