என் மலர்
ஆந்திர பிரதேசம்
- சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.
- 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி சென்று விட்டனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் அமரபுரம் மண்டலம் அனுமந்துனி பல்லே என்ற கிராமத்தை சேர்ந்தவர் லிங்கப்பா. விவசாயி. இவருடைய மகன் ருஷி கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக லிங்கப்பா 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டார். ஆம்புலன்ஸ் மூலம் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதக சிறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுவனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுமாறு ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் லிங்கப்பா அழுதபடி கேட்டார்.
ஆனால் 108 ஆம்புலன்சில் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்கள் சென்று விட்டனர்.
இதனால் லிங்கப்பா அவரது உறவினர் ஒருவரை வரவழைத்தார். பின்னர் சிறுவன் உடலை 40 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் தூக்கிச் சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மதகசிறை மற்றும் அமரபுரம் மண்டல வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 மாதங்களுக்கு பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- பஞ்சாயத்தில் சிறுமிக்கு சிவக்குமார் ரூ.10 ஆயிரம் தருவதாகவும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம் செந்துலுடுவை சேர்ந்த சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் கிராம தன்னார்வலராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு அவரது பாட்டி வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த சிவகுமார் சிறுமியிடம் ஆதார் அட்டை கேட்டு வீட்டிற்குள் சென்றார்.
அப்போது வலுக்கட்டாயமாக சிறுமியை பலாத்காரம் செய்தார். 2 மாதங்களுக்கு பிறகு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய் அவரை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். சிறுமியை பரிசோதித்த டாக்டர் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து செய்தார்.
பஞ்சாயத்தில் சிறுமிக்கு சிவக்குமார் ரூ.10 ஆயிரம் தருவதாகவும், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. 2 பேரின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் குவிந்தனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிவக்குமார் கலந்து கொண்டார். அதிகாலை திருமண மேடைக்கு வரவேண்டிய சிவக்குமார் தலைமறைவானார்.
நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது அறைக்கு சென்று பார்த்தபோது சிவக்குமார் அங்கு காணவில்லை.
மாப்பிள்ளையை பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் திருமண களைகட்டி இருந்த வீடு சோகத்தில் மூழ்கியது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- கருட சேவையையொட்டி சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினமும் காலை இரவு சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஏழுமலையான் முத்து பந்தல் வாகனத்திலும், இன்று காலை சர்வ பூபால வாகனத்திலும் வீதி உலா வந்தார்.
பிரமோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான தங்க கருட சேவை நாளை நடைபெறுகிறது. கருட சேவை தரிசனத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் இன்று காலை முதல் குவிய தொடங்கி உள்ளனர்.
இதனால் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கருட சேவையை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை மறுநாள் காலை வரை மலைப்பாதையில் பைக்குகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இன்று இரவு முதலே கருட சேவையை காண பக்தர்கள் 4 மாட விடுதிகளில் குவிவார்கள் என்பதால் அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கருட சேவையையொட்டி சென்னை, வேலூர், சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பதியில் நேற்று 72, 123 பேர் தரிசனம் செய்தனர். 26,054 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.01 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 3 மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வாகன வீதி உலாவுக்கு முன் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலாவும், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வபூலபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.
- சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
- மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சங்கு-சக்கரதாரியுடன் பத்ரிநாராயணர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துக் கொண்டு செல்லப்பட்டன. மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.
- ஸ்ரீகாளஹஸ்தியில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது.
- மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பல்வேறு கோவில்களில் நவராத்திரி உற்சவம் நடந்து வருகிறது. விழாவின் 2-நாளான நேற்று ஞானப்பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உற்சவர் அம்மன், பிரம்மசாரினிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஸ்ரீகாளஹஸ்தி கனகாசலம் மலைமீதுள்ள கனகதுர்க்கையம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் மீனாட்சி தேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பங்காரம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் காயத்ரிதேவி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முத்தியாலம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
- ஆந்திர மாநிலம் நல்லமலா வனப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு தென்பட்டன.
- தொடர்ந்து அதிக அளவில் கேமராக்களை பொருத்தி பழுப்பு நிற மான்களின் நடமாட்டத்தை கண்காணிப்போம்.
திருப்பதி:
சிங்கரா என அழைக்கப்படும் பழுப்பு நிற மான்கள் இந்திய விண்மீன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த வகை மான்கள் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உட்பட தெற்கு ஆசியாவை பூர்வீகமாக கொண்டது. இந்தியாவில் இந்த பழுப்பு நிற மான்கள் ராஜஸ்தான் மற்றும் கர்நாடக காடுகளில் அரிதாக உள்ளன.
இந்த வகை மான்கள் கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் நல்லமலா வனப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு தென்பட்டன. அதற்குப் பிறகு இந்த மான்கள் நடமாட்டம் இல்லை.
இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் நல்ல மலா வனப்பகுதியில் பாலூட்லா என்ற பகுதியில் 2 பழுப்பு நிற மான்கள் நடமாடி வருகிறது.
இதனை அந்த பகுதியில் உள்ள வனத்துறை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அதிக அளவில் கேமராக்களை பொருத்தி பழுப்பு நிற மான்களின் நடமாட்டத்தை கண்காணிப்போம்.
அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- பிரமோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா வருவதை காண திருமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
- வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் போது பக்தர்களை அடிக்கடி தடுத்து நிறுத்தி தரிசனத்திற்கு அனுமதித்ததால் நீண்ட நேரம் ஆனது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது.
அன்று இரவு ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் விழா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு அம்ச வாகனத்திலும் ஊர்வலமாக எழுந்தருளினார். இன்று காலை சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
பிரமோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா வருவதை காண திருமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகளை ரத்து செய்தது.
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் போது பக்தர்களை அடிக்கடி தடுத்து நிறுத்தி தரிசனத்திற்கு அனுமதித்ததால் நீண்ட நேரம் ஆனது.
தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்தில் எந்த சிரமம் இன்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,859 பேர் தரிசனம் செய்தனர். 30,634 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- சந்திரபாபு நாயுடு மிகவும் நல்ல மனிதர்.
- கோர்ட்டுகளில் அரசியல் தலையீடு உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க.வுடன் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கும் என அந்த மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் சிந்தாமோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சந்திரபாபு நாயுடு மிகவும் நல்ல மனிதர். சகிப்புத்தன்மையின் எல்லைக்கு அப்பால் முன்னாள் முதல் மந்திரியான அவரை தொந்தரவு செய்வது ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அநியாயமாகும். சந்திரபாபு நாயுடுவை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். கோர்ட்டுகளில் அரசியல் தலையீடு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் சேர வேண்டும். அவ்வாறு சேர்ந்தால் அவர்களது அரசியல் உறவு பலனளிக்கும்.
தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் வாக்கு வங்கி 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 75 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். ஓபிசி பிரிவினருக்கு உடனடியாக அரசியல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வி வேலைவாய்ப்பில் ஓபிசியினருக்கு 27 செய்த இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 2005-ம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்தை காங்கிரஸ் நிறைவேற்றி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
- நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டம் கதிரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாணவி ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு தண்ணீர் குடிக்க சென்றார்.
அப்போது அங்கிருந்த ஆசிரியர் ரெட்டி நாகைய்யா மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனால் பயந்து போன மாணவி இது குறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் ரெட்டி நாகைய்யா பலமுறை மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மாணவிக்கு கடந்த சனிக்கிழமை கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரசவத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது மாணவிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரை மேல் சிகிச்சைக்காக அனந்தபுரம் தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
அவரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ரெட்டி நாகையா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு நேற்று ஷார்ஜாவில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.
விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 2 பெண்கள் கொண்டு வந்த உடமைகளை சோதனை செய்தனர்.
அதில் 1.4 கிலோ எடையுள்ள கால் கொலுசுகள், செயின்கள், மோதிரம், வளையல் உள்ளிட்ட வெளிநாட்டு தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு ரூ.80 லட்சம் ஆகும். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விஜயவாடா வருவதற்கு முன்பு கோவாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமானத்தில் சென்று உள்ளனர். பின்னர் அங்கிருந்து தங்க நகைகளை கடத்தி வந்ததக தெரிவித்தனர்.
- தினமும் 3 முறை டாக்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர்.
- சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக சி.ஐ.டி. போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். ஆனால் ஜெயில் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை நன்றாக உள்ளதாக தெரிவித்தனர்.
தினமும் 3 முறை டாக்டர்கள் சந்திரபாபு நாயுடுவின் உடல் நிலையை பரிசோதித்து வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ், மருமகள் பிராமணி ஆகியோர் நேற்று அவர்களது வீட்டில் கைகளை கட்டிக்கொண்டு நீதி கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனது தந்தையை சட்ட விரோதமாக கைது செய்து நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைத்து உள்ளனர். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.
உடல் நலம் குன்றிய நிலையிலும், உடல்நிலை சரியாக இருப்பதாக பொய்யான அறிக்கையை கொடுத்து அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றார்.






