என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா.
- ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி கோவர்த்தனகிரி மலையை தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 4 மணியளவில் புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, கோவர்த்தனகிரிமலைைய தனது சுண்டு விரலால் தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்திலும், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாா்கள் ருக்மணி, சத்தியபாமா அலங்காரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அனுமன் வாகனச் சேவையில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி சோர்வடைந்ததால், அவர் தனது உபய நாச்சியார்களுடன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளி இளைப்பாறினார்.
இந்த தனித்துவமான புஷ்பக விமானம் தென்னங்குருத்தோலைகளால் தயாரிக்கப்பட்டது. புஷ்பக விமானம் 27 அடி உயரம், 15 அடி நீளம், 14 அடி அகலம் மற்றும் ஒரு டன் எடை கொண்டது. அதில் 6 வகையான பாரம்பரிய மலர்கள் பயன்படுத்தப்பட்டன.
புஷ்பக விமானம் மூன்று நிலைகளில் வடிவமைக்கப்பட்டது. முதல் நிலையில் அஷ்ட லட்சுமிகள், 2-வது நிலையில் அஷ்ட நாகங்கள், 3-வது நிலையில் திருநாமங்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இருபுறமும் ஆஞ்சநேயர், கருடன் உருவம் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த 20 பேரும், திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டத்துறையைச் சேர்ந்த 10 பேரும் அற்புதமான புஷ்பக விமானத்தைத் தயார் செய்தனர். அதை அவர்கள் வடிவமைக்க ஒரு வாரம் கடுமையாக உழைத்ததாக தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த காணிக்கையாளரும் பக்தருமான ராம்பிரசாத்பட் புஷ்பக விமானத்தின் கவர்ச்சிகரமான வடிவமைப்பை காணிக்கையாக வழங்கினார்.
- பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
- திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் பணத்தில் ஒரு சதவீதம் அல்லது ரூ.36 கோடியை திருப்பதி மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு ஒதுக்குவது என தேவஸ்தானம் முடிவு செய்தது.
பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தும் பணத்தை மாநகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்க பா.ஜ.க, தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மீது மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிதி ஒதுக்கீடுக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான ஆண்டு பட்ஜெட்டில் ஒரு சதவீதத்தை திருப்பதி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு ஒதுக்க வேண்டாம் என நிதி ஒதுக்கீட்டை மாநில அரசு நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் கரிகால் வளவன் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டிக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
- அதிகாரப்பூர்வ வலை தளமான http://apps.tirumala.org/dsp/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பித்த பாடகர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் ஸ்ரீ கோவிந்தராஜ சாமி கோவில்களில் நடைபெறும் ஊஞ்சல் சேவையில் தாசா சாகித்ய திட்டம் சார்பில், பக்திப் பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.
இந்த ஊஞ்சல் சேவையில் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாட ஆர்வமுள்ள பாடகர்கள் மற்றும் பாடகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக தேவஸ்தானத்தின் தாசா சாகித்ய திட்டம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள பாடகர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ வலை தளமான http://apps.tirumala.org/dsp/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நேரடியாக அல்லது பிற ஊடகங்கள் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. கலைஞர்கள் தங்கள் விண்ணப்பங்களை இன்று முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பாடகர்களுக்கு நவம்பர் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை திருப்பதியில் உள்ள மகதி ஆடிட்டோரியத்தில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பித்த பாடகர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இந்தச் செயல்முறை தொடர்பாக தேவஸ்தானம் எந்த முகவர்களையும், பிரதிநிதிகளையும் நியமிக்கவில்லை.எனவே மோசடி செய்பவர்களால் பாடகர்கள் ஏமாற வேண்டாம்.
கூடுதல் விவரங்களுக்கு தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
- மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது.
- சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைத் தொடா்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதற்காக ககன்யான் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் கீழ் தரையில் இருந்து 400 கி.மீ. தொலைவுள்ள புவிதாழ் வட்டப்பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரா்களை அனுப்பி, அவா்களை மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாகத் திருப்பி அழைத்து வர இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கு முன்னதாக 3 கட்ட பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்காக கவுண்ட்டவுன் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்தச் சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒற்றை பூஸ்டா் திறன் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. பூமியில் இருந்து புறப்பட்டு சுமாா் 17 கி.மீ. உயரத்தில் ராக்கெட் சென்றதும் மாதிரி கலன் தனியாக பிரிந்துவிடும். அது பாராசூட்கள் மூலம் மெதுவாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வங்கக்கடல் பகுதியில் பாதுகாப்பாக இறக்கப்படும்.
அதன்படி, மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் கலன் சோதனை ஓட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், 8.30 மணிக்கு தாமதமாக சோதனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. 8.30 மணிக்கு தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் தாமதமானது.
மோசமான வானிலை காரணமாக சோதனை ஓட்டம் தாமதம் ஆனதாக தகவல் வெளியானது. மீண்டும் 8.45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் 3வது முறையாக கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டது. அப்போது சோதனை ஓட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ககன்யான் திட்டத்திற்கான முதல்கட்ட சோதனை ஓட்டம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறுகையில், என்ஜின் கோளாறு காரணமாக சோதனை ஓட்டம் நிறுத்தப்பட்டது. திட்டமிட்டபடி என்ஜின் செயல்படாததால் ராக்கெட்டை ஏவ முடியவில்லை. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்வோம் என்று கூறினார்.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி புவனேஸ்வரி ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல உள்ளார்.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அதிர்ச்சியில் இறந்த கட்சியினரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிய இருந்த நிலையில் காணொலி மூலம் விஜயவாடா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கோர்ட்டு அறிவித்தது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி புவனேஸ்வரி ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல உள்ளார். உண்மை வெல்லும் என்ற பெயரில் புவனேஸ்வரி யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் அவர் உண்மை வெல்லும் யாத்திரையை தொடங்குகிறார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அதிர்ச்சியில் இறந்த கட்சியினரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
இதே போல தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பிரசார பயணம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதுவும் இந்த வாரம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
- ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தற்போது நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று சாமி உற்சவத்தின் போது 15 பேர் கொண்ட ஆந்திர கரகாட்டகுழுவினர் நடனம் ஆடினர்.
சுமார் 100-க்கும் மேற்பட்ட கரகாட்டக் கலைஞர்கள் வரிசையாக நின்று நடனமாடினர்.
இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போல ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.
- சூலூர்பேட்டை அருகே செல்லும்போது மதினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் மற்றும் குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பதி:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் யபாபி. இவருடைய மனைவி மதினா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். யபாபி பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் மதீனா 3-வதாக கர்ப்பமானார். நேற்று யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சூலூர்பேட்டை அருகே செல்லும்போது மதினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அப்போது பயணிகள் சிலர் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ரெயில் சூலூர்பேட்டை வந்ததும் அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் மற்றும் குழந்தையை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவித்தனர்.
- பிரமோற்சவ விழாவில் 6-வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
- ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 66 ஆயிரத்து 757 பேர் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழாவில் 5-வது நாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது.
தங்க கருட வாகனத்தில் உலாவந்த ஏழுமலையானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பிரமோற்சவ விழாவில் 6-வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து இன்று மாலை புஷ்பகவிமான வாகன உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 66 ஆயிரத்து 757 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 395 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- கருட சேவை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இன்று அதிகாலை முதலே 4 மாட வீதிகளில் காத்திருக்கின்றனர்.
- திருப்பதியில் நேற்று 68,763 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம்.
இன்று மாலை 6.30 மணிக்கு சூரிய அஸ்தமனம் முடிந்தவுடன் வழக்கத்திற்கு மாறாக 30 நிமிடத்துக்கு முன்னதாக 6.30 மணிக்கு ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார்.
கருட சேவை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இன்று அதிகாலை முதலே 4 மாட வீதிகளில் காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவைகளை தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,763 பேர் தரிசனம் செய்தனர். 28,377 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
ரூ 2.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேற்று நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் மட்டுமே பக்தர்கள் உள்ளனர்.
இதனால் சுமார் 5 மணி முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
- கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா
- கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. இன்று இரவு `கருடசேவை' நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, `ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 11 கலாசார குழுக்களை சேர்ந்த 281 கலைஞர்கள் குஸ்ஸாடி நடனம், லம்படா நடனம், சுக்கா பஜனை மற்றும் கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களும், பெண்களும் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார் போன்ற வேடமிட்டு சென்றனர். வாகன வீதி உலா தொடங்கும் முன் பல்வேறு ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி பிரம்மோற்வ வழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கில் (மோகினி அலங்காரம்) வாகன வீதிஉலா, இரவு கருடசேவை நடக்கிறது.
- பூமியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் உயரம் வரை விண்ணுக்கு செல்லும் சக்தி படைத்தது.
- பாராசூட்டுகள் சுமந்து வந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக தரை இறக்கி சோதனை பார்க்கப்படுகிறது.
விண்ணில் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதைக்கு மனிதக் குழுவினரை அனுப்பி, அவர்களைப் பத்திரமாக பூமிக்குக் திருப்பி அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை வருகிற 2025-ம் ஆண்டு செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டு உள்ளது. இந்த பணியின் மூலம், மனித விண்வெளிப் பயணத் திறனை வெளிப்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது.
அதன்படி முதல் சோதனை ராக்கெட் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து டிவி-டி1 ராக்கெட் மூலம், 'குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்' என்று அழைக்கப்படும் விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதியை விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.
இந்த சோதனைக்கு டிவி-டி1 என்ற ஒரே ஒரு உந்து சக்தி (பூஸ்டர்) கொண்ட திரவ எரிபொருள் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது. இது பூமியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் உயரம் வரை விண்ணுக்கு செல்லும் சக்தி படைத்தது. இதில் சோதனைகளுக்காக சிஎம்.பேரிங் மற்றும் இன்டர்பேஸ் அடாப்டர்களுடன் குரு மாட்யூல் மற்றும் குரு எஸ்கேப் சிஸ்டம்களுடன் அவற்றின் வேகமாக செயல்படும் திட மோட்டார்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
'குரூ மாட்யூலுடன் கூடிய குரூ எஸ்கேப் சிஸ்டம்' என்று அழைக்கப்படும்' விண்வெளி வீரர்கள் ஆபத்தான நேரங்களில் தப்பிக்கும் வசதியுடன் கூடிய அமரும் பகுதி' ராக்கெட்டின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டு இருக்கும். பூமியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கிலோ மீட்டர் உயரத்தில் சென்ற உடன் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்து விடுகிறது. இதனை பாராசூட்டுகள் சுமந்து வந்து, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக தரை இறக்கி சோதனை பார்க்கப்படுகிறது.
இந்த முதல் கட்ட சோதனையில் வீரர்கள் அமரும் பகுதி பத்திரமாக திட்டமிட்ட இலக்கு வரை சென்று மீண்டும் சேதமடையாமல் கடலில் பத்திரமாக தரை இறங்குகிறதா? என்று சோதித்து பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் விழுந்த உடன் இதனை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் இதனை மீட்டு மீண்டும் இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள்.
ராக்கெட் ஏவப்படுவதை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர் உள்ளிட்ட விபரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.
- மந்திரி ரோஜாவின் பேச்சுக்கு பூம்பூம் மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது குறித்து விமர்சனம் செய்து பேசிய மந்திரி ரோஜா எதற்கெடுத்தாலும் சந்திரபாபு நாயுடு பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டுவதாக பேசியுள்ளார்.
மந்திரி ரோஜாவின் இந்த பேச்சுக்கு பூம்பூம்மாடு வளர்ப்போர் கண்டம் தெரிவித்துள்ளனர்.
அதன் சங்க மாநில தலைவர் தாசரி சத்தியம் மற்றும் தாசரி ஸ்ரீனு, முங்கி வெங்கடேஸ்வரராவ், தாசரி சின்னா, ராம்பாபு ஆகியோர் நந்தி கம போலீசில் மந்திரி ரோஜா மீது புகார் அளித்தனர்.
அதில் எங்கள் குலத்தொழிலையும், எங்கள் சாதியை பற்றி இழிவாக பேசிய மந்திரி ரோஜா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறி இருந்தனர்.
இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.






