என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மொத்தம் 6 வாஷிங் மெஷின்களில் ரூ.1.30 கோடி இருந்தது.
- பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய அனுப்பி வைத்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இந்த கடையில் இருந்து விஜயவாடாவுக்கு லோடு ஆட்டோவில் 6 வாஷிங் மெஷின்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த வாஷிங் மெஷின்கள் சீல் பிரிக்காமல் இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வாஷிங் மெஷின்களை திறந்தனர். அதில் கட்டு கட்டாக பணம் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 6 வாஷிங் மெஷின்களில் ரூ.1.30 கோடி இருந்தது.
பணம் மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தசரா பண்டிகைக்கு எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய அனுப்பி வைத்ததாக கடை உரிமையாளர் தெரிவித்தார்.
இருப்பினும் பணத்திற்கு உண்டான உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது ஹவாலா பணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
- கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் மாச்சரலாவை சேர்ந்த கடற்படை வீரர். இவர் தற்போது ஒடிசாவில் வேலை செய்து வருகிறார்.
இவருடைய மனைவி தனது 5 வயது மகனுடன் மாச்சரலாவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடற்படை வீரர் விடுமுறை தினங்களில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் கடற்படை வீரரின் மனைவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தை தடையாக இருந்துள்ளது.
இதனால் குழந்தைக்கு அவரது தாய் கை, கால்களில் சூடு வைத்து கைகளை பின்னோக்கி வளைத்து உடைத்தார்.
மேலும் வாளியில் தண்ணீரை நிரப்பி சிறுவனின் தலையை மூழ்கடித்து கடும் சித்ரவதை செய்து வந்தார். மகனை சித்ரவதை செய்யும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து இருந்தார்.
இந்த நிலையில் கள்ளக்காதலனுக்கும் கடற்படை வீரரின் மனைவிக்கும் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் குழந்தையை சித்ரவதை செய்யும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி வைத்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடற்படை வீரர் ஊருக்கு வந்து மகனை தன்னுடன் அழைத்துச் சென்றார்.
மேலும் மனைவியிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகன் என்றும் பாராமல் சூடு வைத்து கை, கால்களை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.
- 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி:
சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 28-ம் தேதி திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்படுகிறது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-
வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடையும்.
கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.
எனவே, 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் மூடப்படும்.
29-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்பட உள்ளது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் கதவுகள் 8 மணி நேரம் மூடப்படும்.
இதன் காரணமாக 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
- ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மந்திரி ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
உண்மை வெற்றியடைய வேண்டும் என்று கோவிலில் வேண்டிக்கொண்டதாக சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி கூறியிருக்கிறார்.
உண்மை வெற்றி அடைந்தால் சிறையில் சந்திரபாபு நாயுடு நிரந்தரமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
புவனேஸ்வரியும் சிறை செல்ல நேரிடும். ஆந்திராவில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலில் ஒன்ஸ்மோர் ஜெகன் என்ற முடிவை மக்கள் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மல்லேஸ்வரர் சாமி உற்சவ மூர்த்தியை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. சண்டையை தடுக்க அவர்களால் முடியவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆலூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தேவார கட்டா என்ற மலை கிராமம் உள்ளது.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் ஆன்மீக ஸ்தலமாக அமைந்து உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற மல்லேஸ்வர சாமி கோவில் உள்ளது. மல்லேஸ்வர சாமிக்கு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று தடியடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
திருவிழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்போது மல்லேஸ்வரசாமி உற்சவர் சிலையை தங்களது ஊருக்கு கொண்டு செல்வதற்காக 2 தரப்பினராக பிரிந்து கட்டைகளால் தாக்கிக் கொள்வது வழக்கம்.
இதனால் ஆண்டு தோறும் நடைபெறும் தாக்குதலில் பலர் உயிர் இழப்பதும், ஆயிரக்கணக்கானோர் காயம் அடைவதும் நடந்து வருகிறது.
இதனை தடுப்பதற்காக கடந்த ஒரு மாதமாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று கட்டைகளால் தாக்கிக் கொள்ளாமல் உற்சவம் நடத்த வேண்டும் என கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிலையில் நேற்று இரவு 12.15 மணிக்கு மல்லேஸ்வர சாமிக்கு சாமி உற்சவம் தொடங்கியது. உற்சவ திருவிழாவில் நிரணி தரணி தண்டா, கொத்தபேட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது சாமிக்கு மஞ்சள் பொடி தூவியும், மல்லேஸ்வரி சாமி பக்தி பாடல்களை பாடியபடி சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையடுத்து மல்லேஸ்வர சாமி உற்சவரை மலையிலிருந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது மலை அடிவாரத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து இருந்தனர். அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பக்தர்கள் தீப்பந்தங்களை ஏந்திய படி நின்று கொண்டு இருந்தனர்.
மல்லேஸ்வரர் சாமி உற்சவ மூர்த்தியை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது தங்களிடமிருந்த தடிகள் மற்றும் இரும்பு கம்பியால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பலரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அந்த பகுதி முழுவதும் ரத்தக்களரியாக காட்சி அளித்தது.
சண்டைக்கு பயந்து பலர் அங்கிருந்த மரத்தின் மீது ஏறினர். ஏராளமானோர் மரத்தின் மீது ஏறியதால் பாரம் தாங்காமல் ஒரு மதத்தின் மரக்கிளை உடைந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஆலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் கணேஷ் மற்றும் ஆலூர் மண்டலம், மொளகவள்ளியை சேர்ந்த ராமாஞ்சேனேயு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. சண்டையை தடுக்க அவர்களால் முடியவில்லை.
பலியான பக்தர்கள் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு ஆலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் பார்ப்பவர்களுக்கு காட்டுமிராண்டி செயலாக தோன்றினாலும், மல்லேஸ்வர சாமி பக்தர்கள் இதனை புனிதமான திருவிழாவாக கருதுகின்றனர்.
பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் பாரம்பரியத்தை தொடர வேண்டும் என பக்தர்கள் எண்ணுகின்றனர். இதையடுத்து சண்டையில் வெற்றி பெற்ற ஒரு தரப்பினர் மல்லேஸ்வர சாமியின் சிலையை தங்களது சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.
சாமி சிலையை கொண்டு சென்றவர்கள் அடுத்த ஆண்டு விஜயதசமி அன்று மீண்டும் தேவாரகட்டா கொண்டு ஒப்படைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா காட்சிகளை மிஞ்சும் இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி நகரில் உள்ள ஜனதா பேட்டையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவர்களுடன் அவரது சித்தி ரமணம்மா (வயது 85) என்பவரும் உடனிருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஓய்வுபெற்ற கல்லூரி விரிவுரையாளருக்கு காவாலியை சேர்ந்த கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
விரிவுரையாளர் கல்லூரி மாணவி வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும்போது தனது சித்தி அதிக நகை போட்டுக்கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மூதாட்டியை கொலை செய்து நகையை பறிக்க மாணவி திட்டம் தீட்டினார். அதன்படி கல்லூரி மாணவி அடிக்கடி யூடியூபில் கிரைம் வீடியோக்களை பார்த்து கொலை செய்வது குறித்து தெரிந்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை விரிவுரையாளர் தனது மனைவியுடன் நடை பயிற்சி சென்றார்.
இதனை கண்காணித்த கல்லூரி மாணவி விரிவுரையாளர் வீட்டிற்குள் சென்றார். தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அவர் அணிந்து இருந்த 5½ பவுன் நகையை திருடி சென்றார்.
இது குறித்து காவாலி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்லூரி மாணவி அந்த பகுதியில் சுற்றி திரிந்தது தெரிந்தது.
இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் ரமணம்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாணவியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியபடுத்தி விட முடியாது.
- நான் வெளியே வரும் வரையில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்குங்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
நான் ஜெயிலில் இல்லை. மக்களின் இதயங்களில் இருக்கிறேன். எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியபடுத்தி விட முடியாது. நான் இப்போது மக்களிடையே இல்லை. ஆனால் வளர்ச்சியின் பெயரால் எல்லா இடங்களிலும் என் பெயர் உள்ளது. நான் எப்போதுமே மக்களுக்காக உழைத்து வந்துள்ளேன்.
எனது முதல் கவனம் தெலுங்கு மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை நோக்கி தான் இருக்கிறது. நான் மாநிலத்தில் இல்லாதபோது மனைவி புவனேஸ்வரி என் சார்பில் செயல்படுவார். அவர் மக்களோடு தொடர்பில் இருப்பார்.
நான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளது பொறுத்துக்கொள்ள முடியாமல் இறந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற அவர் வருவார். இந்த அராஜக ஆட்சியை அவர் முழுமையாக அம்பலப்படுத்துவார்.
சட்டம் இருக்கிறது. கால அவகாசம் எடுத்தாலும் நான் மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும் உழைக்க புதிய வீரியத்துடன் வெளியே வருவேன். நான் வெளியே வரும் வரையில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்குங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜெயிலில் இருந்து கொண்டு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதுவதற்கு அனுமதி இல்லை என்று ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்:-
சந்திரபாபு நாயுடுவின் கடிதத்தை தெலுங்கு தேசம் வெளியிட்டுள்ளது. ஜெயிலில் அவருக்கு பேனாவும், பேப்பரும் எப்படி கிடைத்தது? இந்த கடிதம் போலியானது.
சந்திரபாபு நாயுடுவின் ஊழலால் தான் மக்கள் சோர்ந்து போய் அவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கினர் என கூறப்பட்டுள்ளது.
தன்னை ஜெயிலில் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் இந்த கடிதத்தை கொடுத்து சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
- நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
- திருப்பதியில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்து நாட்காட்டி முறைப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிக மாதங்கள் வரும் ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை முதல் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்தது.
நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
இந்த ஆண்டு நடைபெற்ற 2 பிரம்மோற்சவ விழாக்களில் மொத்தம் 11 லட்சம் பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். 57.64 லட்சம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
33.78 லட்சம் பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர். 4.29 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.47.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது.
திருப்பதியில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
- பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டனர்.
- சிஐஎஸ்எப் பாதுகாப்பு மூலம் துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்றனர்.
அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி பல்வேறு விதமான ஆய்வுகளை செய்து வருகின்றன.
விண்வெளி ஆய்வில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா இதுவரை மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பவில்லை. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கனவு திட்டமாக வைத்திருந்தனர்.
இந்த திட்டத்தை செயல்படுத்த ககன்யான் என்ற விண்கலம் உருவாக்கப்படுகிறது. இந்த கனவு திட்டத்தை இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2025-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, 3 கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.
ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்காக "க்ரூ எஸ்கேப் சிஸ்டம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் உள்ள பாராசூட்டுகள் மூலம் பூமியிலோ அல்லது கடலிலோ விண்வெளி வீரர்கள் தரை இறங்கி தப்ப முடியும். அதன்படிஇந்த முதல் கட்ட சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது.
திட்டமிட்டபடி, குறிப்பிட்ட நேரத்தில் பாராசூட்டுகளுடன் மாதிரி விண்கலம் வங்கக்கடலில் இறங்கியது.
இந்நிலையில், சோதனை முறையில் விண்ணில் ஏவ அனுப்பப்பட்ட ககன்யான் விண்கலம், பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்டதை இந்திய கடற்படையினர் மீட்டு, சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
4 டன் எடை கொண்ட விண்கலத்தை கண்டெய்னர் வாகனத்தில் ஏற்றி சிஐஎஸ்எப் பாதுகாப்பு மூலம் துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்றனர்.
- இன்று காலை தங்க தேரோட்டம்.
- சிவப்பு இக்சோரா மலர் மாலையால் சுவாமி அலங்கரிப்பு
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பிரகாசமான சிவப்பு `இக்சோரா மலர்' மாலையால் அலங்கரிக்கப்பட்டு, சூரிய நாராயணமூர்த்தியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதன் பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திரபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, நவநீத கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை நவராத்திரி கொலு, ஆஸ்தானம் நடந்தது.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தங்கத்தேரோட்டம், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
- தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம், அகிரி பள்ளி மண்டலம், சோப்பரமேடுவை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது 47). இவரது மகன் நாக தேஜா.
சீனிவாசராவுக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சீனிவாசராவ் மகனுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் நாகதேஜாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சீனிவாசராவ் கள்ளத்தொடர்பை கைவிட்டு வாழ வேண்டும் என அறிவுரை கூறினார்.
ஆனாலும் தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார். சீனிவாச ராவ் மகனுக்கு அடிக்கடி அறிவுரை கூறியதால் ஆத்திரம் அடைந்தார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள தந்தையை கொலை செய்ய நாக தேஜா முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு இது சம்பந்தமாக தந்தை மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாக தேஜா அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கினார். தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் மயங்கி கீழே விழுந்த சீனிவாசராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தந்தை இறந்ததை அறிந்த நாகதேஜா அங்கிருந்து தப்பி ஓடினார்.
அருகில் இருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அகிரி பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசராவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.
- அனுமன் வாகன வீதிஉலா.
- இன்று இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான நேற்று காலை அனுமன் வாகனத்திலும் இரவு யானை வாகனத்திலும் மலையப்பசாமி வீதிஉலா வந்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா பிரமாண்டமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை ராமவதாரத்தை விளக்கும் வகையில் அனுமன் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, 'கோதண்டராமர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. கலைக் குழுவை சேர்ந்தவர்கள் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் வேடமிட்டு ஆடி, பாடி சென்றனர். நாட்டிய, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஜீயர் சுவாமிகள் வேத மந்திரங்களை ஓதினார். பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.
அதைத்தொடர்ந்து கஜேந்திர மோட்சத்தை விளக்கும் வகையில் இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.






