search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி ஏழுமலையான் 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா
    X

    திருப்பதி ஏழுமலையான் 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா

    • 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா.
    • ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி கோவர்த்தனகிரி மலையை தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 4 மணியளவில் புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, கோவர்த்தனகிரிமலைைய தனது சுண்டு விரலால் தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்திலும், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாா்கள் ருக்மணி, சத்தியபாமா அலங்காரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அனுமன் வாகனச் சேவையில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி சோர்வடைந்ததால், அவர் தனது உபய நாச்சியார்களுடன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளி இளைப்பாறினார்.

    இந்த தனித்துவமான புஷ்பக விமானம் தென்னங்குருத்தோலைகளால் தயாரிக்கப்பட்டது. புஷ்பக விமானம் 27 அடி உயரம், 15 அடி நீளம், 14 அடி அகலம் மற்றும் ஒரு டன் எடை கொண்டது. அதில் 6 வகையான பாரம்பரிய மலர்கள் பயன்படுத்தப்பட்டன.

    புஷ்பக விமானம் மூன்று நிலைகளில் வடிவமைக்கப்பட்டது. முதல் நிலையில் அஷ்ட லட்சுமிகள், 2-வது நிலையில் அஷ்ட நாகங்கள், 3-வது நிலையில் திருநாமங்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இருபுறமும் ஆஞ்சநேயர், கருடன் உருவம் அமைக்கப்பட்டது.

    தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த 20 பேரும், திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டத்துறையைச் சேர்ந்த 10 பேரும் அற்புதமான புஷ்பக விமானத்தைத் தயார் செய்தனர். அதை அவர்கள் வடிவமைக்க ஒரு வாரம் கடுமையாக உழைத்ததாக தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தெரிவித்தார்.

    சென்னையைச் சேர்ந்த காணிக்கையாளரும் பக்தருமான ராம்பிரசாத்பட் புஷ்பக விமானத்தின் கவர்ச்சிகரமான வடிவமைப்பை காணிக்கையாக வழங்கினார்.

    Next Story
    ×