என் மலர்
இந்தியா

திருப்பதி கோவிலில் 2 மணி நேரத்தில் தரிசனம்
- நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- கோவில் வளாகம் மற்றும் திருமலை முழுவதும் வண்ணவண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அதிகாலை முதல் விரைவாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதால் சுமார் 2 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
விரைவாக தரிசனம் செய்வதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை கருட கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனால் கோவில் வளாகம் மற்றும் திருமலை முழுவதும் வண்ணவண்ண மின் விளக்குகள் மற்றும் பல்வேறு மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் இன்று மாலை அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. நாளை இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.
திருப்பதியில் நேற்று 59,304 பேர் தரிசனம் செய்தனர். 28,391 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.08 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






