search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு மகன் சந்திப்பு: தெலுங்கானாவில் பா.ஜ.க.வுடன் தெலுங்கு தேசம் கூட்டணி?
    X

    மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் சந்தித்து பேசிய காட்சி.

    அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு மகன் சந்திப்பு: தெலுங்கானாவில் பா.ஜ.க.வுடன் தெலுங்கு தேசம் கூட்டணி?

    • பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    • முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவர் மீது மேலும் 3 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 வழக்குகளில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பைபர் நெட் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திரபாபு நாயுடுவின் மகன் நாராலோகேஷ் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

    உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜெயிலில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் கூட்டணி அமைப்பது குறித்தும் அமித்ஷா நாரா லோகேஷ் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த சந்திப்பின்போது ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி, மத்திய மந்திரி கிஷண்ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

    ஆந்திராவை பொருத்தவரையில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. கணிசமான வாக்குகளை பெறவில்லை. இதனால் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க. அதிக கவனத்தை செலுத்தவில்லை.

    அந்த மாநிலத்தில் 9 பாராளுமன்ற தொகுதி 48 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.

    இதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனியாக போட்டியிடவில்லை. சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட விவகாரம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

    ஐதராபாத் வளர்ச்சியில் சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் பெரும் பங்கு வகித்ததாக இந்த பகுதி மக்கள் கருதுகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் வளர்ச்சி அடைந்து உள்ள பா.ஜ.க. டார்கெட் 75 என்ற இலக்குடன் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

    அதனால் தெலுங்கானாவில் பா.ஜ.க. கூட்டணியில் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கட்சிகள் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனால் தெலுங்கானா மாநில அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி கூட்டணியில் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.விற்கு நெருக்கமாக உள்ளார். அவர் அனைத்து திட்டங்களிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால் ஆந்திராவில் பா.ஜ.க. நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×