என் மலர்
இந்தியா
- தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மதுரை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் முன்கூட்டியே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. 4 முனை போட்டி உருவாகும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என்றும், அதுதொடர்பான இறுதி முடிவு வருகிற ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி திருமண விழா மதுரையில் இன்று நடந்தது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த அவரது திருமணத்தை நடத்தி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையடுத்து வெளியே வந்த அவரிடம், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இல்லை. அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், அவரிடமே சென்று கேளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பின்னர் தனியார் ஓட்டலில் தென்மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் தென்மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த போதிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கூடுதல் பணியாற்றி அதனை அ.தி.மு.க. வசமாக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலத்தையும், தி.மு.க. அரசின் மீதான மக்கள் விரோத போக்கினை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
- காவ்யா, அஜித் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
- காவியாவுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து வைத்துள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூரை அடுத்த மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல களக்குடி கொத்தட்டை பரந்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி.
இவரது மகள் காவியா ( வயது 26). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் (26) என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காவியாவின் பெற்றோர் அவருக்கு அவரது அத்தை மகனுடன் திருமணம் பேசி நிச்சயதார்த்தம் செய்தனர். ஆனால் இந்த விவரத்தை அஜித்குமாரிடம் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார். நேற்று இரவு அஜித் குமாருடன் காவியா வீடியோ காலில் பேசினார்.
அப்போது நிச்சயதார்த்தம் செய்த போது எடுக்கப்பட்ட போட்டோக்களை அஜித் குமாரிடம் காண்பித்தார். இதனைப் பார்த்து அஜித்குமார் கடும் ஆத்திரம் அடைந்து என்னிடம் எதுவும் கூறாமல் எப்படி நீ வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம்.
என்னுடன் தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும். வேறு ஒருவரை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டேன் என்று கூறி போன் இணைப்பை துண்டித்தார்.
இந்த நிலையில் இன்று காலை காவியா பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அங்கு வந்த அஜித்குமார் என்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யலாம் எனக் கூறி ஆத்திரத்தில் கத்தியால் சரமாரியாக காவியாவை குத்தினார். இந்தக் கொடூர தாக்குதலில் பலத்த காயம் அடைந்து காவியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த அந்த வழியாக சென்ற ஏராளமானோர் கூடினர். சம்பவ இடத்திற்கு பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்தனர். காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் குமாரை கைது செய்தனர்.
தஞ்சை அருகே பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது பழனிசாமி எங்கிருந்தார்?
- மதுரைக்கு எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக் கொண்டிருக்கும் அடிமை பழனிசாமி, வழக்கம் போலவே உளறிக் கொட்டியிருக்கிறார். ஒன்றிய அரசு விவகாரம் என்றால், கும்பகர்ண தூக்கம் போடும் பழனிசாமிக்கு, திமுக அரசு என்றால் வீராவேசம் வந்துவிடுகிறது. பழனிசாமிக்கு வீரத்தை ஊட்டுவதே திமுகவின் செயல்பாடுகள்தான்!
நெல்மணிகள் நனைந்துவிட்டது என ஸ்பாட்டுக்கு போய் ஓரங்க நாடகம் போட்ட பழனிசாமி, ஒன்றிய அரசு நெல் ஈரப்பத அளவினை 22 சதவிகிதமாக உயர்த்தாததைக் கண்டிக்காமல் எங்கே போனார்?
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது பழனிசாமி எங்கிருந்தார்? மோடி அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களை ஆதரித்த பழனிசாமி, சாகுபடி, பயிர்க்காப்பீடு பற்றியெல்லாம் பேச அருகதை இருக்கிறதா? கஜா புயலின் போது பயிர்கள் எல்லாம் நாசம் ஆன நேரத்தில், மாமனார் வீட்டு விருந்தில் கொண்டாட்டம் போட்ட பழனிசாமி எல்லாம் விவசாயியா?
நெல் கொள்முதலுக்குரிய ஈரப்பத அளவை உயர்த்தாமல் வஞ்சிப்பது ஒன்றிய பாஜக அரசு. அதை எதிர்த்துக் கேட்கத் திராணியில்லாத, தைரியமில்லாத துரோகி பழனிசாமி வீணாகத் தமிழ்நாடு அரசின் மீதும் தமிழ்நாடு முதலமைச்சர் மீதும் அவதூறை பேசினால் மக்கள் ஏமாந்து விடுவார்களா என்ன?
விவசாயத்தை அழித்து விவசாயிகளை விவசாயத்தை விட்டே அப்புறப்படுத்தும் நோக்கிலான மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்!
பல்லுயிர்ப் பெருக்கத்தையும் விவசாயத்தையும் அழிக்கும் மதுரை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்கக் காரணமான கனிம வளச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்த வரலாறு தானே உங்களுடையது.
'மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்குச் செய்தன என்னவென்று!' எனக் கேட்கிறார். 11 தேர்தல்களில் தொடர்ந்து தோற்கடித்து பழனிசாமிக்கு மக்கள் அளித்த பதில் தெரியவில்லையா?
கோவை, மதுரை மெட்ரோவுக்கு வர வேண்டும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியதையே பெரும் சாதனையாகத் தம்பட்டம் அடிக்கிறார் பழனிசாமி. அவர் ஆட்சியில் இருந்த போது அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸைக் கொண்டு வரத் திராணி இல்லாத பழனிசாமிதான் வெட்கப்பட வேண்டும்.
டிவி-யை பார்த்து ஆட்சி நடத்திய கையாலாகாத, நிர்வாகத் திறனற்றவர் என்று இந்தியாவே சிரித்த முதல்வர்தானே பழனிசாமி. கால்கள் மாறுவதையும் கார்கள் மாறுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் பழனிசாமிக்கு ரோசம் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பார்த்துவிட்டு வரும் போது ஏசி காரிலும் 'குப்' என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.
- தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார்.
சென்னை :
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எச்சரிக்கை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நடிகர் விஜய் தலைமையில் த.வெ.க.வில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும். ஏனென்றால்,
அதிமுகவிலிருந்து கட்சி பதவி பறிக்கப்பட்டவுடனே தில்லிக்கு பறந்து அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன்.
"அமித்ஷாவை சந்தித்து அடுத்து என்ன செய்யலாம்" என ஆலோசனை கேட்கத்தான் வந்ததாக வெளிப்படையாக சொன்னார். இப்போது, தவெகவில் இணைவதும் அமித்ஷாவின் ஆலோசனை தானா என்னும் அய்யம் எழுகிறது.
எடப்பாடி பழனிசாமி அவர்களை தடுமாற வைத்து, பாதிக்கு பாதி தொகுதிகளை பெறுவது தான் பாஜகவின் உத்தி. (பீகார் போல)
ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலம் திமுக எதிர்ப்பை வலுப்படுத்துவதும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி உத்தி.
தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவார். அதற்கு பின் பாஜக முழுமையாக
அதிமுகவை கையகப்படுத்தும். அதற்கான உத்திகளை பாஜக தொடங்கி விட்டது.
நடிகர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நடிகர் விஜய்யை ஏற்றுக்கொள்வதில் எந்த மனத்தடையும் இருக்காது என்பதையே செங்கோட்டையன் தவெகவில் இணைவதை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
- பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது. மெயின் அருவி தவிர்த்து புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்புகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திய பின்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று வரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
- மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
- இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
இளைஞரணிச் செயலாளராக - விளையாட்டுத் துறை அமைச்சராக - மாண்புமிகு துணை முதலமைச்சராக நீ ஆற்றிவரும் பணிகளை மக்களும் கழகத்தினரும் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது தந்தையாக மட்டுமல்ல தலைவனாக மகிழ்ச்சி அடைகிறேன்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது,
காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவனாக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும்.
இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அ.தி.மு.க. எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சி.
- செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குவதாக கூறுவது தவறு.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. எப்போதும் தனக்கென்று வாக்கு வங்கி உள்ள ஒரு கட்சி.
* அ.தி.மு.க.வில் இருந்தபோது பா.ஜ.க.வை நம்பி இருந்ததாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
* பா.ஜ.க.வை செங்கோட்டையன் நம்பி இருந்ததாக கூறுவது ஏற்புடையதல்ல.
* செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குவதாக கூறுவது தவறு. அப்படி இயக்கி இருந்தால் அவர் ஏன் த.வெ.க.வுக்கு சென்றார்.
* பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி, ஒரு கவுன்சிலர் கூட இல்லாத த.வெ.க.வுடன் எங்களை ஒப்பிடக்கூடாது.
* செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதரவாளர்களுக்கு த.வெ.க. துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார்.
- சின்ன வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.
பனையூர் உள்ள த.வெ.க. அலுவலத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க. வில் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களுக்கு த.வெ.க. துண்டு அணிவித்து உறுப்பினர் அட்டையை விஜய் வழங்கினார்.
இதனை தொடர்ந்து விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியதாவது:-
* அனைவருக்கும் வணக்கம். 20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்.ஜி.ஆரை நம்பி அவருடைய மன்றத்தில் சேர்ந்தவர்.
* இளம் வயதிலேயே எம்.எல்.ஏ. என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர்.
* அந்த இயக்கத்தில் இருபெரும் தலைவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர்.
* இப்படி ஒரு 50 ஆண்டு ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன் அவர்கள், இன்னிக்கு அவர்களுடைய அரசியல் அனுபவமும், அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஒரு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், இன்றைக்கு அவர்களுக்கும், இணைந்து பணியாற்ற நம்மோடு கைகோர்க்கும் இருக்கும் அனைவருக்கும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்.
* நல்லதே நடக்கும்... நல்லதே நடக்கும்... நல்லது மட்டுமே நடக்கும்... வெற்றி நிச்சயம்... என பேசியுள்ளார்.
- தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், சகோதரர் உதயநிதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உதயநிதி தேசிய சிந்தனை கொண்ட வெற்றிகரமான மக்கள் நல அரசியல்வாதியாக சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
- கண்களை இமை காப்பது போல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து த.வெ.க. அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் த.வெ.கவில் இணைந்தனர்.
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தரப்பட்டது. ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் 4 மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது:
* செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்திருப்பது தற்கொலைக்கு சமமான முடிவு.
* விஜய், செங்கோட்டையன் இருவரில் யார் யாருக்கு அரசியல் பாடம் எடுக்கப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
* செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்ததால் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.விற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
* கண்களை இமை காப்பது போல் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி காத்து வருகிறார்.
* தலைமைக்கே சவால் விடும் செங்கோட்டையன் போன்ற நபர்கள் இருக்கும் வரை கட்சியில் குழப்பம்தான் நீடிக்கும்.
* பழுத்த இலை விழுவதால் மரத்திற்கு எந்த சேதமும் இல்லை. செங்கோட்டையன் சென்றதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம்.
- செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர்.
கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் நன்கு அறியப்பட்ட நபர். கொங்கு மண்டலத்தின் நாடி துடிப்பு என்ன, பிரச்சனைகள் என்ன என்றெல்லாம் அவருக்கு தெரியும். எனவே செங்கோட்டையனின் அனுபவத்தை பயன்படுத்தி கொங்கு மண்டலத்தில் வலுவாக கால்பதிக்க த.வெ.க முயற்சிகளை மேற்கொள்ளும்.
மேலும் எம்.ஜி.ஆரின் அரசியலை கூடவே இருந்து பார்த்தவர் செங்கோட்டையன். எனவே எம்.ஜி.ஆரை அடிக்கடி முன்னிலைப்படுத்தி பேசும் விஜய்க்கு செங்கோட்டையின் அனுபவம் கைகொடுக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் கூட்டங்களை மேலாண்மை செய்த அனுபவமும் செங்கோட்டையனுக்கு உள்ளது. அதிலும் ஜெயலிதாவின் சுற்றுப்பயணங்களை வகுத்து அதற்கு தலைமை தாங்கி பிரசார கூட்டங்களை சிறப்பாக மேலாண்மை செய்த வியூகவாதியாகவும் அவர் இருந்துள்ளார். இதனால் புவியியல் ரீதியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் அத்துப்படி. த.வெ.கவில் அவர் இணைந்துள்ளதால் விஜயின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுக்கும் பணியை இவரே மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் போன்ற நெருக்கடியான சூழலில் உள்ள விஜய்க்கு, செங்கோட்டையின் வியூகங்கள் நல்ல வழியை காட்டும்.
இதனையெல்லாம் தாண்டி, செங்கோட்டையன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம், அக்கட்சியில் ஒருங்கிணைப்பை விரும்பும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
எனவே, இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம். இதற்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கிறார் செங்கோட்டையன்.
இன்று செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்கோட்டையன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனை விஜய் ஏற்று, அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் விரைவில் விஜய் ஈரோட்டில் மக்களை உள் அரங்கில் சந்தித்து பேச உள்ளார்.
அரை நூற்றாண்டு காலம் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைவது விஜய்க்கு ஒரு வலிமை தான் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. மேலும் அவர் பல கட்சி தலைவர்களுடனும் உறவை கொண்டிருப்பதால், த.வெ.க சிறப்பான கூட்டணியை அமைக்கவும் அவர் ஒரு பாலமாக செயல்படலாம்.
செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர். 'கோபிசெட்டிப்பாளையத்தை தாண்டி அவருக்கு ஈரோடில் கூட பெரிய செல்வாக்கு கிடையாது. எங்கள் கட்சியிலேயே எம்ஜிஆர் காலத்து தலைவர் என்பதால் அவருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கினர். மற்றபடி அவரால் கொங்கு மண்டல அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரால் இப்போதுள்ள சூழலில் கோபியில்கூட வெல்ல முடியாது' என்கின்றனர்.
எப்படி பார்த்தாலும் செங்கோட்டையனின் வருகை என்பது தமிழக வெற்றிக்கழகத்துக்கு ஏதோ ஒரு வகையில் லாபம்தான். ஆனால் அதனை விஜய் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- கடந்த சில வாரங்களாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்து கொண்டார்.
- பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் 2 பேரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் நடந்த விழாவில், தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் த.வெ.கவில் இணைந்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்துள்ளது அது த.வெ.க.வுக்கு பலமாக மாறுமா? செங்கோட்டையனின் செல்வாக்கை விஜய் பயன்படுத்திக்கொள்வரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது உள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆரால் 25 வயதிலேயே அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
1977-ம் ஆண்டு முதல் இன்று வரை 9 முறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதுவும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை படைத்துள்ளார். 3 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதலே அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் திகழ்ந்து வந்தார். மூத்த தலைவர் என்பதால் கட்சியிலும், கட்சியினர் இடையேயும் அவருக்கு என தனி மரியாதை இருந்தது.
செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் முதலில் நன்றாகவே புரிதல் இருந்தது. ஆனால் ஒற்றை தலைமை என்ற எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி செல்லும் போது அதில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதனை செங்கோட்டையன் ரசிக்கவில்லை. இதுதான் பிரச்சனைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் கருத்து மோதல், அவரது சொந்த தொகுதியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என பல்வேறு விஷயங்களில் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் எழுப்பினார். மேலும் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியின் போது, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
இதனால் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்ததுடன், அவரை கட்சியை விட்டு நீக்கியும் அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்து கொண்டார்.
முன்னதாக விஜய்-செங்கோட்டையன் சந்திப்பானது, நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. சந்திப்பின் போது கட்சியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் 2 பேரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.
செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்துள்ளது த.வெ.கவுக்கு நிச்சயமாக கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது உண்மை. ஏனென்றால் விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மாற்றுகட்சியினர் சேர்ந்தனர். கமல் கட்சி தொடங்கிய போது திரை பிரபலங்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் இணைந்தனர். ஆனால் கட்சி தொடங்கி 2 ஆண்டு ஆகியும் விஜயின் கட்சியில் அப்படி யாரும் இணையவில்லை. தற்போது செங்கோட்டையன் இணைந்து அந்த குறையைபோக்கியுள்ளார். இதனால் செங்கோட்டையனின் வருகை நிச்சயமாக த.வெ.கவுக்கு வலு சேர்க்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






