என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையன் குறித்து பதில் சொல்ல அவசியமில்லை- எடப்பாடி பழனிசாமி
- தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மதுரை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் முன்கூட்டியே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. 4 முனை போட்டி உருவாகும் என்ற கருத்து நிலவி வரும் நிலையில் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை. அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரலாம் என்றும், அதுதொடர்பான இறுதி முடிவு வருகிற ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி திருமண விழா மதுரையில் இன்று நடந்தது. சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த அவரது திருமணத்தை நடத்தி வைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து தனியார் ஓட்டலில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இதையடுத்து வெளியே வந்த அவரிடம், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இல்லை. அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. என்னிடம் கேள்வி கேட்காதீர்கள், அவரிடமே சென்று கேளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
பின்னர் தனியார் ஓட்டலில் தென்மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மற்றும் தென்மாவட்ட செயலாளர்கள், அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலின்போது அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த போதிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகளில் கூடுதல் பணியாற்றி அதனை அ.தி.மு.க. வசமாக்க வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலத்தையும், தி.மு.க. அரசின் மீதான மக்கள் விரோத போக்கினை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக எண்ணிக்கையில் அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.






