என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.-வுக்கு எதிராக களம் காணும் செங்கோட்டையன்: த.வெ.க.-வுக்கு வலுசேர்ப்பாரா?
- கடந்த சில வாரங்களாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்து கொண்டார்.
- பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் 2 பேரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று தமிழக வெற்றிக்கழகத்தில் தன்னை இணைத்து கொண்டார்.
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் அலுவலகத்தில் நடந்த விழாவில், தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் த.வெ.கவில் இணைந்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்துள்ளது அது த.வெ.க.வுக்கு பலமாக மாறுமா? செங்கோட்டையனின் செல்வாக்கை விஜய் பயன்படுத்திக்கொள்வரா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் இப்போது உள்ள மிக மூத்த அரசியல்வாதிகளில் முதன்மையானவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆரால் 25 வயதிலேயே அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டவர் செங்கோட்டையன்.
1977-ம் ஆண்டு முதல் இன்று வரை 9 முறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். அதுவும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து சாதனை படைத்துள்ளார். 3 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதலே அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செங்கோட்டையன் திகழ்ந்து வந்தார். மூத்த தலைவர் என்பதால் கட்சியிலும், கட்சியினர் இடையேயும் அவருக்கு என தனி மரியாதை இருந்தது.
செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் முதலில் நன்றாகவே புரிதல் இருந்தது. ஆனால் ஒற்றை தலைமை என்ற எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி செல்லும் போது அதில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதனை செங்கோட்டையன் ரசிக்கவில்லை. இதுதான் பிரச்சனைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் கருத்து மோதல், அவரது சொந்த தொகுதியில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என பல்வேறு விஷயங்களில் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள், விலக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் குரல் எழுப்பினார். மேலும் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியின் போது, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
இதனால் செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்ததுடன், அவரை கட்சியை விட்டு நீக்கியும் அதிரடி காட்டினார் எடப்பாடி பழனிசாமி.
இதை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மவுனம் காத்து வந்த செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தன்னை த.வெ.கவில் இணைத்து கொண்டார்.
முன்னதாக விஜய்-செங்கோட்டையன் சந்திப்பானது, நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது. சந்திப்பின் போது கட்சியை வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் 2 பேரும் மனம் விட்டு பேசியுள்ளனர்.
செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்துள்ளது த.வெ.கவுக்கு நிச்சயமாக கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது உண்மை. ஏனென்றால் விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட மாற்றுகட்சியினர் சேர்ந்தனர். கமல் கட்சி தொடங்கிய போது திரை பிரபலங்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் இணைந்தனர். ஆனால் கட்சி தொடங்கி 2 ஆண்டு ஆகியும் விஜயின் கட்சியில் அப்படி யாரும் இணையவில்லை. தற்போது செங்கோட்டையன் இணைந்து அந்த குறையைபோக்கியுள்ளார். இதனால் செங்கோட்டையனின் வருகை நிச்சயமாக த.வெ.கவுக்கு வலு சேர்க்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






