என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
    திடீரென எதிர்பாராத சூழ்நிலை வந்தால் அதைச் சமாளிக்கத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பெண்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். இதைப் பற்றி பெண்களிடம் வலியுறுத்துவதைப்போலவே, ஆண்களிடமும் பேச வேண்டியுள்ளது. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்புக்கு ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டியவை இவைதாம்…

    பொருளாதார ரீதியாக ஆணைச் சார்ந்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும் (மனைவி, தாய், மகள்) அவரை டெர்ம் பாலிசி (ஆயுள் காப்பீடு) எடுக்க வைக்க வேண்டும். அவரது ஆண்டு வருமானத்தின் 15 மடங்காவது காப்பீட்டுத் தொகை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    காப்பீடு குறித்துத் திட்டமிடும்போது பெண்களும் இருப்பது அவசியம். தேவையற்ற பாலிசிகளைத் தவிர்த்தல், விண்ணப்ப விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்த்தல், நாமினியாகத் தன்னை நியமிக்கச் சொல்லி வலியுறுத்துதல், நாமினியின் விவரங்களைச் சரியாக எழுதுதல் (பெயர், உறவு, பிறந்த தேதி இன்ன பிற) ஆகியவை பெண்களின் கடமை.

    எங்கெல்லாம் ஜாயின்ட் ஓனர்ஷிப் சாத்தியமோ (வங்கிக்கணக்கு, அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தும்) அவையெல்லாம் இருவர் பெயரிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    அப்படி இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் என்னென்ன சேமிப்புகள்/முதலீடுகள் உள்ளன, அவற்றைக் கணவரின் ஆயுளுக்குப் பிறகு எப்படி வாங்குவது என்பதைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் தவறோ, சென்ட்டிமென்டோ எதுவும் இல்லை.

    உயில் இன்றியமையாதது. தெள்ளத் தெளிவாக யார் யாருக்கு என்னென்ன சேர வேண்டும் என உயிலில் எழுதி கையெழுத்திட்டு சாட்சிக் கையெழுத்துகளோடு வையுங்கள். உயில் பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். உயிலை எழுதுபவர் அவர் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் அதை மாற்றி எழுதலாம். ஒருமுறை எழுதிவிட்டால் கன்ட்ரோல் போய்விடும் என்று அவர் பயப்படத் தேவையில்லை.



    பிள்ளைகள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், மனைவியையே நாமினியாகவும் வாரிசுதாரராகவும் எழுதுங்கள். மனைவியைப் பிள்ளைகளின் தயவில் விட்டுவிடாதீர்கள்.

    வங்கிக்கணக்கு, செல்போன் அக்கவுன்ட் லாகின், இ-மெயில் லாகின் உள்பட அனைத்து பாஸ்வேர்டுகளையும் இருவரும் அறிந்த ஓரிடத்தில் (லேப்டாப், நோட்புக்) சேமித்து வையுங்கள். ஒவ்வொரு முறை பாஸ்வேர்டு மாற்றும்போதும் தவறாமல் அதில் அப்டேட் செய்துவிடுங்கள்.

    கணவன் மனைவி இருவரும் உபயோகிக்கும் செல்போன்கள் பரஸ்பரம் மற்றவர் பெயரில் இருந்தால் நல்லது. திடீரென ஒருவருக்கு ஏதேனும் விபரீதம் என்றால் மற்றவர் அந்த போன் நம்பரைத் தொடர்ந்து உபயோகிக்க இயலும். செல்போனில் வரும் ஓடிபி (One Time Password) இல்லாமல் வங்கிக் கணக்கு, இணையப் பணப்பரிவர்த்தனை என எதிலும் பாஸ்வேர்டு மாற்றுவது கடினம்.

    பெரும்பாலான தளங்களில் பாஸ்வேர்டு ரெக்கவரிக்கு சில கேள்வி பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து 10 கேள்விகளைத் தேர்ந்தெடுத்து, இருவருமாகச் சேர்ந்து அவற்றுக்கான பதில்களை உள்ளீடு கொடுத்து வையுங்கள். அவற்றையும் பாஸ்வேர்டு ஷீட்டில் சேமித்து வையுங்கள். ஒருவேளை ஏதோ ஒரு தளத்தின் பாஸ்வேர்டு தெரியாவிட்டாலும் இவற்றின் மூலம் பாஸ்வேர்ட்டை மாற்ற இயலும்.

    குழந்தை பிறப்புக்குப் பின் குடும்ப நிர்வாகியாக மாறும் பெண்கள், குழந்தைகள் ஓரளவு வளர்ந்து முழுநேரப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின்னர் மீண்டும் வேலைவாய்ப்பு தேட வேண்டும். பகுதி நேரமாகவோ, வீட்டிலிருந்தோ செய்யும் வாய்ப்புகள் இன்று எல்லா துறைகளிலும் பெருகியிருக்கின்றன. அவற்றை பற்றிப் பெண்கள் யோசிப்பதும் முக்கியம்.

    விபத்தும் உயிரிழப்பும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம். நம் குடும்பத்தில் நிகழாதவரை பேரிழப்பும் வெறும் புள்ளிவிவரமே. ஒருவேளை நம் குடும்பத்தில் அது நிகழ்ந்தால் அடுத்து என்ன செய்வது என்பதையாவது பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். 
    காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். காபியில் உள்ள காபீன் என்கிற வேதிப்பொருள் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
    சோர்வாக உணரும் போது காபி அல்லது டீ குடிக்க நினைக்கிறோம். காரணம் அவற்றில் மனிதனின் நரம்பு மண்டலத்தை தூண்டி உற்சாகப்படுத்தும் வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அதன் காரணமாக காபி அல்லது டீ குடித்ததுமே நாம் உற்சாகமாக உணர்கிறோம். தவிர, காபியில் காபீன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது ஒருவித மயக்கத்தை ஏற்படுத்துவதால்தான் அடிக்கடி காபி குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

    ஒரு நாளுக்கு இரண்டு முறை டீயோ, காபியோ குடிப்பது உடல்நலத்துக்கு கேடு விளைவிக்காது. அப்படி குடிப்பதால் சில நன்மைகளும் ஏற்படலாம். காபி குடிப்பதால் அல்சைமர், பார்கின்சன்ஸ், இதய நோய், ஈரல் நோய், கீல்வாதம், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் கூறுகின்றனர். மூளை நரம்புகளில் அடினோசினின் ஆதிக்கத்தை காபீன் குறைப்பதால் மனஅழுத்தம் குறையும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். காபியில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அந்த அளவுக்கு டீ குடிப்பதிலும் நன்மைகள் இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன. டீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமட்டாய்டு ஆர்த்ரட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்கு குறைகிறதாம்.

    ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள். இவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களை குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும்.

    காபியும், டீயும் மட்டும்தான் நலம் தருமா என்ன? அளவுக்கு அதிகமான பயன்பாடு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையை தாண்டும் போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.

    அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரைப்படையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காக குடிக்கப்படும் காபியின் அளவு, அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம்.

    இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றால் பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான். எலும்பின் உறுதிக்கு துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியை பாதிக்கிறது. பற்சிதைவுக்கும் அளவுக்கு அதிகமான டீ காரணமாக இருக்கலாம் என்றும் டாக்டர்களால் நம்பப்படுகிறது.
    குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மதிய உணவிற்கு சூப்பரான இறால் முட்டை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - 300 கிராம்
    முட்டை  - 3
    வடித்த சாதம் - ஒரு கப்
    பச்சை மிளகாய் - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
    இஞ்சிபூண்டு பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு



    செய்முறை:

    இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    உதிரியாக வேக வைத்த சாதத்தை ஆற வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த இறாலை போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.

    பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.

    இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.

    கடைசியாக அதனுடன் ஆற வைத்த சாதம், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ட்ரெட்மில்லில் பயிற்சி செய்பவர்கள் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது? என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இப்போதெல்லாம் வாக்கிங் செல்பவர்களைவிட, ட்ரெட்மில்லில் ஓடுபவர்கள்தாம் அதிகம். பலரும் இதை வரப்பிரசாதமாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சி செய்வதெல்லாம் அந்தக் காலம். இப்போது வீட்டிலேயே வாங்கிவைத்துப் பயிற்சி செய்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

    “சுற்றுச்சூழல் மற்றும் வானிலை மாற்றங்கள் காரணமாக, நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியாமல் இருப்பவர்களுக்கும், தினமும் வெளியில் சென்று பயிற்சி செய்ய முடியாதவர்களுக்கும் ட்ரெட்மில் சிறந்த தீர்வு. ஆனால், இதைச் சரியாக, முறையாகப் பயன்படுத்தினால்தான் அதன் நன்மைகளைப் பெற முடியும்.

    * ட்ரெட்மில்லில் ஓடும்போது, உடலின் அனைத்துத் தசைகளும் இயங்குவதால், தசைகள்  வலுப்பெறும். முக்கியமாக, கால் மற்றும் தொடைப் பகுதி தசைகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மூட்டுவலிப் பிரச்னை சரியாகும்.

    * ஃப்ளாட்டான பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டால், அதிகக் கலோரிகளைக் குறைக்கலாம். அந்த வகையில், வெளியில் சென்று பயிற்சி செய்வதைவிட, ட்ரெட்மில்லில் பயிற்சி செய்வது நல்லது.

    * ட்ரெட்மில் பயன்படுத்துவதால், உடல் மட்டுமல்ல… உள்ளமும் புத்துணர்ச்சி பெறும்.

    * பின் முதுகில் வலி இருப்பவர்கள், ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யக் கூடாது.

    * ட்ரெட்மில்லில் பயிற்சி செய்யும்போது, அதற்குத் தேவையான ஷூ வகைகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மூட்டுவலி, குதிகால்வலி, ப்ளான்டர்ஸ் ஃபேஸிடிஸ் (Plantars fasciitis) போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    * சிலருக்குக் கால் பாதம் தட்டையாக இருக்கும். அவர்கள், மீடியம் லார்ஜ் இன்சோல் (Insole) வாங்கி, அதை ஷூவில் வைத்துப் பயன்படுத்த வேண்டும்.

    * ட்ரெட்மில்லில் பயிற்சி செய்ய ஆரம்பித்த முதல் சில நாள்களுக்கு மூட்டுவலி, கால்வலி போன்றவை ஏற்படும். அவற்றைப் பொருட்படுத்தாமல், அன்றாடம் பயிற்சி மேற்கொண்டால், போகப் போக பிரச்சனை சரியாகிவிடும்.



    * மற்ற நேரத்தைவிட, காலை நேரத்தில் ட்ரெட்மில் பயிற்சி செய்வது நல்லது. உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

    * வெகு நாள்கள் கழித்து ட்ரெட்மில் பயன்படுத்துபவர்கள், புதிதாக உபயோகிப்பவர்கள், நேர விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். ஆரம்பத்திலேயே அதிக நேரம் ஓடக் கூடாது. அரை கிலோமீட்டரிலிருந்து தொடங்கலாம். ஒவ்வோர் ஐந்து அல்லது ஆறு நாள் இடைவெளியில் இந்த நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்துக்கொள்ளலாம்.

    “ட்ரெட்மில் பயன்படுத்தும்போது, டிரெஸ்ஸிங் சரியாக இருக்க வேண்டும். வெறுங்காலுடன் நடக்கக் கூடாது. சரியான ஷூ, ஷாக்ஸ், டி-ஷர்ட், ட்ராக்ஸ் அணிந்திருக்க வேண்டும். பயிற்சி செய்யும்போது, உடலும் மனதும் ரிலாக்ஸாக இருக்கவேண்டியது அவசியம்.

    * ட்ரெட்மில்லில் நடக்கும்போது, வியர்வையைத் துடைத்துக்கொள்ள பக்கத்திலேயே ஒரு துண்டு வைத்துக்கொள்வது நல்லது. ஜிம் சென்று பயிற்சி மேற்கொள்பவர்கள், இதைக் கண்டிப்பாகப் பின்பற்றவும்.

    * முதன்முதலாக ட்ரெட்மில் உபயோகிப்பவர்கள், வேகத்தை எப்படிக் கூட்டிக்கொள்வது அல்லது குறைப்பது, எமெர்ஜென்சி ஸ்டாப் எப்படிச் செய்வது, பாடல் கேட்பது அல்லது வீடியோக்கள் பார்ப்பது எப்படி என்பதையெல்லாம் பயிற்சியாளரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்.

    * ட்ரெட்மில்லின்  ப்ளஸ், அதன் டிஜிட்டல் திரை. ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் பயிற்சி செய்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் நடந்திருக்கிறீர்கள், பயிற்சியால் உடலில் எவ்வளவு கலோரிகள் கரைந்திருக்கின்றன, இதயத்துடிப்பின் வேகம் எவ்வளவு இருக்கிறது போன்றவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.

    * உடல் பருமனாக இருப்பவர்கள், ஜிம்முக்குச் சென்று ட்ரெட்மில் பயிற்சியை ஆரம்பிப்பதுச் சிறப்பு. காரணம், அங்கு வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள், மிக உறுதியாக இருக்கும்.

    * பயிற்சி செய்யும்போது வெளியேறும் வியர்வை, பயிற்சியை முடிக்கும்போது டீஹைட்ரேஷன் பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே, பயிற்சியைத் தொடங்குவதற்கு முன்னர், நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்’’.

    * உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், ட்ரெட்மில்லில் தாராளமாகப் பயிற்சி மேற்கொள்ளலாம். 6 mph (Miles per Hour) என்ற வேகத்தில், 20 நிமிடங்கள் நடந்தால் உடலிலுள்ள 229 கலோரிகளைக் குறைக்கலாம். 8 mph (Miles per Hour) என்றால், 300 கலோரிகளைக் குறைக்கலாம். இந்தப் பயிற்சிகளோடு சேர்த்து ஊட்டச்சத்திலும் கவனம் எடுத்துக்கொண்டால், விரைவில் உடல் எடையைக் குறைக்கலாம். 
    விஷம நோக்கத்துடன் வருபவர்களைச் சமாளிக்க தற்காப்பு வித்தைகளை கற்று வைத்திருப்பது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகளே உங்கள் தனிமையை கவலையற்றதாக்கும்.
    தனிமையில் நடக்கும் பெண்களைத் தாக்கி நகை பறிப்பது, வீடுபுகுந்து கொள்ளையடிப்பது, எதிர்த்து போராடுபவர்களை கொலை செய்துவிடுவது போன்ற செய்திகளை அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறோம்.

    வீடு புகுந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் கொடிய ஆயுதங்களுடன் வருவதாக கணிக்கப்படுகிறது. நம் நாட்டிலும் இதுபோன்ற குற்றங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இத்தகைய ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாக்க தனிமையில் இருக்கும் இல்லத்தரசிகள், மாணவிகள் நிச்சயம் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருபது அவசியம். உங்கள் தனிமையை யாரோ கவனிக்கிறார்கள் என்பதுதான் இதுபோன்ற குற்றங்களின் பின்னணி. எனவே விழிப்புணர்வுடன் இருங்கள், ரகசியத்தை கசியவிடாதீர்கள்.

    கதவைத் தொட்டால் ஓசை எழுப்பும் கருவியை பொருத்தலாம். இப்போதெல்லாம் நவீன கருவிகள் கிடைக்கின்றன. வெளிபுறம் நிற்பவரை படம் பிடித்துக் காட்டும் கருவி, செல்போனுக்கு தகவல் அனுப்பும் கருவிகள் கூட வந்துவிட்டன.

    வீட்டின் சுற்றுபுறத்தில் நல்ல விளக்கு வசதி செய்யுங்கள். மறைவிடங்களோ, இருட்டோ இல்லாமல் இருப்பது குற்றவாளிகளை வீட்டை நெருங்காமல் செய்யும் ஒரு வழியாகும்.



    மிளகாய்த்தூள், மிளகுத்தூள் ஸ்பிரே, தற்காப்புக் கம்பி ஆகியவற்றை கைவசம் வைத்திருக்கலாம். வெளிநாடுகளில் மின்தாக்குதல் நடத்த `எலக்ட்ரிக் ஷாக்’ கருவிகள்கூட கிடைக்கின்றன. துப்பாக்கி பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்.

    வீட்டுக்கு அருகில் முன்பின் தெரியாதவர்கள் நடமாடினாலோ, தங்கி இருந்தாலோ காவலாளிகளிடம் அவர்களை கண்காணிக்கச் சொல்லலாம். சந்தேகம் அதிகரித்தால் காவல் துறைக்குத் தகவல் கொடுக்கலாம்.

    பக்கத்து வீட்டில் இருப்பவர்களை எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தினருடன் நல்ல நட்புறவுடன் இருப்பது கூடுதல் பாதுகாப்பாக இருக்கும்.

    வீட்டிற்குள் வரும் திருடர்களின் முக்கியக் குறி நகை மற்றும் பணமாக இருக்கிறது. எனவே உங்கள் தேவைக்கான பணம் மற்றும் நகைகளை மட்டுமே கையில் வைத்து பயன்படுத்துங்கள். அதிகமாக இருக்கும் பணம், நகைகளை வங்கிகளில் பாதுகாக்க வேண்டும்.

    விஷம நோக்கத்துடன் வருபவர்களைச் சமாளிக்க தற்காப்பு வித்தைகளை கற்று வைத்திருப்பது பெண்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். பாதுகாப்புகளை மீறி குற்றம் நடக்கும் இக்கட்டான சூழலில் சாதுரியமாக செயல்படும் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    உங்களின் ரகசியங்கள் கசிந்து விடுவதே ஆபத்துகளுக்கு காரணமாகும். நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களிடம் எவ்வளவு பணம், நகை இருக்கிறது, அவற்றை எங்கே வைத்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களையும் உங்கள் குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. டைரி, இணையதளங்களில் இதுபோன்ற ரகசிய விவரங்களை குறித்து வைப்பதும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். விழிப்புணர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகளே உங்கள் தனிமையை கவலையற்றதாக்கும்.

    கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.
    நமது துணையை அணைக்கும் போது ஒரு இதமான உணர்வு ஆழ் மனதில் இருந்து உண்டாகும். கட்டிபிடிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் புதுவித உணர்வை உணர்வோம். இது நமது காதலிக்கு மட்டுமில்லை. நமக்கு விருப்பமான ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது இந்த உணர்வு நமக்கு உண்டாகும்.

    தினமும் கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் பலவித மாற்றங்கள் உண்டாகும். அதில் இதுவும் ஒன்று. கட்டிப்பிடிக்கும் போது நமது உடலில் டோபமைன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரந்து தாம்பத்தியத்தை சிறப்பான முறையில் வைத்து கொள்கிறது. உடலுறவு வைத்து கொள்ள இந்த கட்டிப்பிடித்தல் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளது.

    தினமும் கட்டிப்பிடிக்கும் போது எதிர்ப்பு சக்தி பல மடங்காக நமது உடலில் அதிகரிக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. கட்டிப்பிடிக்கும் இருவருக்கும் இந்த பயன் கிடைக்குமாம். இதனால் நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

    கட்டிப்பித்தலை பற்றிய ஆராய்ச்சியில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, ஆண்கள் தான் கட்டிபிடித்தலை பெரும்பாலும் துவங்குகின்றனர் என்று..! இது இருவருக்கும் அதிக நெருக்கத்தை ஏற்படுத்த முக்கிய பாலமாக உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

    நமது மனசுக்கு பிடித்த ஒருவரை கட்டிப்பிடிக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்கள் ஏரளமான வகையில் மாற்றம் பெறுகின்றன. குறிப்பாக ஆக்சிடாக்சின், டோபோமின் போன்ற ஹார்மோன்கள் சந்தோஷத்தை தர கூடிய ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. மேலும், ஹார்மோன்களின் செயல்திறனும் சீராக இருக்கிறது.

    கட்டிப்பிடிப்பதால் உடளுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மன அழுத்தம் குறைதல் தான். தினமும் கட்டிபிடிப்பதால் உயர் ரத்த அழுத்தம் குறைந்து விடுகிறது. மேலும், இதயம் சார்ந்த நோய்களும் தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன.

    கட்டிப்பிடிக்கும் பலர் இதை உணர தவறுகின்றனர். கட்டிப்பிடிக்கும் போது நமது துணையின் இதய சத்தத்தை கேட்டால் நமது உடலுக்கு மகிழ்ச்சியை தருமாம். அத்துடன் நமது இதய செயல்திறனையும் சீராக வைக்கும்.



    சில தம்பதியர் தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த கட்டிபிடித்தல் புதுவித யுக்தியாக உதவும். கட்டிப்பிடிப்பதால் ஹார்மோன்கள் தாம்பத்திய உணர்வை அதிகரித்து இனிமையான தம்பத்தியத்தை ஏற்படுத்தும்.

    கட்டிபிடித்தலில் பலவித வகைகள் உள்ளன. அவற்றில் ஒரு சில மட்டுமே பெரும்பாலும் பிடிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதில் ஆண்களுக்கு பிடித்தமானதை விட பெண்களுக்கு பிடித்தமானதே பல வகையில் உள்ளதாம்.

    உங்கள் துணையை முழுவதுமாக கட்டிபிடித்து கொண்டால் அதுவே ஹனிமூன் கட்டிப்பிடி என்று அர்த்தம். இது தூங்கும் நிலையில் இருக்கும் போது முழுமையாக கட்டிப்பிடிப்பதை குறிக்கிறது.

    பெண்கள் பலருக்கு இந்த வகை கட்டிபிடித்தலை பிடிக்கும். உங்களது காதலியை பின்னிருந்தது கட்டிப்பிடித்தால் அவருக்கு உங்கள் மீது அதிக காதல் உண்டாகும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஒருவர் மடியில் தூங்கி கொண்டே காட்டுப்பிடிக்கும் வகையை பெரும்பாலும் அதிக ரொமான்டிக் கொண்டதாக மக்கள் கருதுகின்றனர். பூங்கா, கடற்கரை போன்ற இடத்தில் இது போன்ற கட்டிபிடிக்கும் வகையை உங்களால் பெரிதும் பார்க்க இயலும்.

    பலருக்கு இது மிகவும் பிடித்தமான ஒன்று. பெரும்பாலும் ஆண்கள் தான் இந்த வகை கட்டிபிடித்தலை செய்வார்கள். ஆதாவது, ஒரு காலை தனது துணையின் மேல் போட்டு கொண்டு தூங்குவார்கள். இது இருவருக்குள்ளும் நெருக்கத்தை அதிகரிக்கும்.

    யாராக இருந்தாலும் கட்டிபிடித்தல் ஒரு சிறந்த மருந்தாக தான் செயல்படுகிறது. தினமும் கட்டிபிடித்தால் மேற்சொன்ன நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். எனவே, அதிக காதலுடனும் அன்புடனும் உங்கள் இணையை கட்டிப்பிடித்து வாழுங்கள் நண்பர்களே..! 
    காலையில் சத்துநிறைந்த சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கவுனி அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கவுனி அரிசி மாவு - ஒரு கப்
    உப்பு - தேவையான அளவு
    நெய் - ஒரு டீஸ்பூன்
    தேங்காய்த்துருவல் - தேவையான அளவு
    நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும்.

    மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும்.

    பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.

    தேங்காய்த்துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஹேர் டை உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். இயற்கை முறையிலான டை வகைகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது நன்மை பயக்கும்.
    நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற  என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்  மற்றொரு காரணமாக உள்ளது.

    சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். இதனை  மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி  சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.

    தொடர்ந்து டை அடிப்பதால், சருமத்தில் நெற்றி, முகம் ஆகியவை சிவந்துபோதல், அரிப்பு ஆகியவை ஏற்படும். மேலும் கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல்,  சருமத்தில் புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது.  தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி,  வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை தோன்றும்.

    பெண்கள் கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும் டை அடிப்பதை தவிர்க்கவேண்டும். “தலைமுடி சாயம்” உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க  விளைவுகள் ஏற்பட்டால், அதைனை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். உடனடியாக, பயன்படுத்திய தலைமுடி சாயம் பாக்கெட்டுடன் மருத்துவரை  சந்திக்கவேண்டியது அவசியம்.

    ஹேர் டை உபயோகிக்கும்போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், டை பயன்படுத்துவதை நிறுத்திவிடுங்கள். அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன்  சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம். எனவே இயற்கை முறையிலான டை வகைகளை பயன்படுத்தி நோய்களிலிருந்து பாதுகாத்து கொள்வது  நன்மை பயக்கும். 
    பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.
    பயில்வான் போன்ற உடல் வலிமை உடையவர்கள் கூட பல் வலியில் துடித்து விடுவார்கள். காரணம் முறையான பல் பாதுகாப்பின்மைதான். பல் சுகாதாரமின்மை ஈறுகளில் நோய், பல் சொத்தை இவற்றினை எளிதில் உருவாக்கி விடும். பல், ஈறு பாதிப்புகள் அத்துடன் நிற்பதில்லை. சர்க்கரை நோய், குறை பிரசவம், இருதய பாதிப்பு, பக்க வாதம் இவைகள் ஏற்படவும் காரணமாகின்றது.

    இன்று பல் மருத்துவம் மிகப்பெரிய முன்னேற்ற நிலையினை அடைந்துள்ளது. இருப்பினும் பல் பாதிப்பு, சொத்தை இவை எதனால் ஏற்படுகின்றது! என்றால் தீய பாக்டீரியாக்கள், சர்க்கரை, ஆசிட் இவைகளே பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    பல்லில் எனாமல் தேயும் பொழுது ஓட்டைகள் ஏற்படுகின்றன. முதலில் பாதிக்கப்பட்டுள்ள இடம் மிருதுவாகும். வலி இருக்கும். சூடு, குளுமை, ஸ்வீட் சாப்பிட்டால் அந்த குறிப்பிட்ட இடத்தில் வலிக்கும். இந்த அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே பல் மருத்துவரிடம் சென்றால் உங்கள் பல்லினை பாதுகாத்து விடுவார். பொதுவில் வருடம் ஒருமுறையாவது பல் செக்-அப் செய்து கொள்வது அவசியமே.

    இருப்பினும் பல்லை பாதுகாக்க நாமும் சில வழிமுறைகளை கடைபிடிக்கலாமே.

    • பல்லில் எனாமல் கால்சியம், பாஸ்பேட் நிறைந்தது. இவை இரண்டும் உடலில் கிடைக்க வைட்டமின் டி நமக்கு வேண்டும். மருத்துவ அறிவுரையோடு வைட்டமின் ‘டி’ எடுத்துக்கொள்வோம்.

    • பாஸ்பரஸ் இருந்தாலே எனாமல் நன்கு பாதுகாக்கப்படும். கொட்டை வகைகள், முட்டை, பூண்டு, தக்காளி, பீன்ஸ் போன்றவை பாஸ்பரஸ் சத்தினை பெற உதவும்.

    • அன்றாட உணவில் 5 சதவீதத்துக்கு மேல் இனிப்புகள் வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்றது. இனிப்பில் உள்ள ஆசிட் பல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.

    • சோடா அருந்துவதனை தவிர்த்துவிட வேண்டும்.

    • தூங்கும்பொழுது வாய்மூடி இருக்க வேண்டும். வாய் திறந்து தூங்கும் பொழுது வாய் வறண்டு விடுகின்றது. வாயில் உமிழ்நீர் வாய் மூடி இருக்கும் பொழுதே வாய் வறண்டு விடாமல் காக்கும். வறண்ட வாயில் பல் பாதிப்பு ஏற்படும்.

    • பாதுகாப்பான பல் பவுடர், பற்பசையினை உபயோகியுங்கள்.

    • காய்கறி ஜூஸ், பச்சை காய்கறிகள் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

    • 4-5 முந்திரியினை தினமும் உண்ணுங்கள். கெட்ட கிருமிகளை எதிர்க்கும் சத்துகள் இதில் அதிகம்.

    • ஆயுர்வேதம் எண்ணெய் வாய் கொப்பளிப்பினை பரிந்துரைக்கின்றது.
    பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.
    தலைமுடியின் அழகும், வண்ணமிகு ஆடையின் அழகும், வாசனைப் பூச்சின் அழகும் உண்மையான அழகாகாது. நாம் நல்லவனாக இருக்கிறோம் என்ற உறுதிப்பாட்டினைத் தருகின்ற ஒழுக்க கல்வியைப் பெறுதலே சிறந்த அழகாகும். எது சிறந்த கல்வி, எது உண்மையான அழகு என்பதை நாலடியார் அழகாகச், சிறப்பாகச் சொல்கிறது. நல்ல ஒழுக்கங்களை, கற்றுத் தரும் கல்வி அறிவே இன்று மிக முக்கியத் தேவை. முன்பு மாணவர்கள் குருகுலத்தில் தங்கி குருவிடம் நல்ல பண்புகள், ஒழுக்கங்கள் என்று கற்றுக்கொண்டார்கள். படிப்பு முடிந்து அவர்கள் வரும்போது வாழ்வை எதிர்கொள்ளும், தீரம், தைரியம், நம்பிக்கை மனம் முழுதும் நிரம்பி இருக்கும்.

    ஆனால் இன்றைய கல்வி முறை மாணவர்களை, அடிப்படை மனித குணங்கள் இல்லாதவர்களாக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களின் பொறுமை, நல்ல எண்ணங்கள், நம்பிக்கை போன்றவற்றை கல்வி அழித்துவிட்டதோ என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அதற்கு சாட்சியாக எத்தனை விதமான செய்திகள். ஆசிரியர் திட்டியதால் மாணவி தற்கொலை. பெற்றோர் திட்டியதால் மாணவர் விஷம் குடித்து சாவு, தந்தையைக் கொன்ற மகன், ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவன் என்ற செய்திகளை படிக்கும்போது மனம் பதறுகிறது.

    படிக்கும் காலத்தில் பாதை மாறுவது, பெரியவர்கள், ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடப்பது, கண்டித்தால் உடனே விபரீத முடிவு எடுப்பது என்று இன்றைய இளைய சமுதாயம் பயமுறுத்துகிறது. தான் தவறு செய்தாலும் திட்டுவது, மனம் நோகப் பேசக் கூடாது, கண்டிக்கக் கூடாது என்றால் அவர்களை எப்படிதான் திருத்துவது, ஆசிரியர் எப்படி திட்டுவது.

    எந்தச் சுயநலமும் இல்லாமல் நம் குழந்தைகள் இவர்கள். இவர்கள் நன்றாகப் படித்து, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறைதான் ஆசிரியரின் கண்டிப்பில் இருக்கும். இதேபோல்தான் பெற்றோர்களும். நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்தவர்கள். நமக்காக பாடுபட்டு, தன் சுக துக்கங்களை மறந்து பெற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்களுக்கு, ஒரு தவறை சுட்டிக் காட்டித் திட்டவோ, கண்டிக்கவோ உரிமை இல்லையா?

    கல்வியும் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கடினமாக இருக்கிறது. தேர்ச்சி என்ற ஒரு இலக்கை மட்டுமே வைத்து கல்வி நிறுவனங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு சிறிது கூட ஓய்வு என்றில்லாமல் எப்போதும் எதோ ஒரு தேர்வு வந்து கொண்டிருக்கிறது. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களிலும் ஏதாவது வகுப்புகள் வைத்து மாணவர்களுக்கு பொழுதுபோக்குக்கு தடை ஏற்படுத்தி விடுகின்றனர்.

    சிறிது கவனம் பிசகினாலும் தேர்ச்சி அடைய முடியாது என்று பயம். தொழில்நுட்ப உலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாழ்வில் ஸ்திரமாக்கி நிற்க வேண்டும் என்ற பயம் மாணவர்கள் மனதில். போட்டிகளைச் சமாளித்து முதலிடத்தை தக்க வைக்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என்ற பதற்றம் கல்வி வியாபார நிறுவனங்களிடம்.

    மனம் ஒரு மாற்றத்திற்கு ஏங்குகிறது. அப்போது ஒரு சினிமா, பாடல், மனசை குறுகுறுக்க வைக்கும் விஷயத்தில் கவனம் போய் விடுகிறது. பல மாணவிகள் படிக்கும் காலத்தில் பாதை மாறிப் போவது இதனால்தான். இந்த நேரத்தில் ஒரு சின்ன வழிகாட்டலை ஆசிரியரும், பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் திட்டினால் பெற்றோர்களும் உடனே அது குறித்து புகார் தருவது, அரசியல் பிரமுகரை அழைத்துக்கொண்டு வந்து பள்ளியில் ஆசிரியரை தரக் குறைவாகப் பேசுவது என்ற மனப்பான்மையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

    எந்த ஆசிரியரும் ஆசைப்பட்டு மாணவர்களை திட்டுவதில்லை. அவர்கள் தவறு செய்தால் கண்டிக்க வேண்டியது ஒரு ஆசிரியராக அவர்களது கடமை. ஆசிரியர் கண்டிப்பது நல்ல பண்புகளுடன் நடக்கத்தான் என்ற உணர்வும், ஆசிரியையும் பள்ளியில் அவளுக்கு ஒரு தாய் என்ற உணர்வும் மாணவர்களுக்கு வர வேண்டும்.

    “கல்வி கரையில், கற்பவை நாள் சில” என்கிறது அதே நாலடியார். “நல்ல ஒழுக்கமுள்ள பெற்றோர்களும், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களே இன்று நம் தேவை” என்கிறார் மகாத்மா. கல்வியின் முழுப் பயன் எது? என்பதை உணர்ந்து அதை கற்க வேண்டும். “கற்க கசடற, நிற்க அதற்குத் தக” என்கிறது குறள். இன்று பயங்கரவாதம், ஊழல், லஞ்சம், பாலியல் வன்முறை என்று பல சம்பவம் நடப்பதை காண்கிறோம். அதில் ஈடுபட்டவர்களைப் பார்த்தால் அதிகம் பேர் மெத்தப் படித்தவர்கள். மதிப்பான பதவியில் இருப்பவர்கள். கல்வி இவர்களுக்கு கற்றுத் தந்தது என்ன? ஒழுக்கக் கல்வி என்பது பிறக்கும்போதே ஆரம்பித்து விட வேண்டும்.

    மனிதப் பண்புகள், தன்னைப் போலவே பிறரையும் நினைக்கும் பாங்கு, அன்பு, கருணை, பொறுமை, நேர்மை, என்ற நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் பள்ளிகளும், வீடுகளும்.

    ஒழுக்கம் என்பது யாரும் இல்லாத போதும் நம் செயல்கள், சிந்தனைகள், பேச்சுகள் நேர்மையாக இருப்பதே. அது மனசாட்சியின் வடிவம். அதை மீறி நடந்தால் பின் வாழும் நாள் வரை உறுத்தலோடுதான் வாழ வேண்டும். கல்வியின் முழு வடிவம் என்ன என்று ஆசிரியர்கள் தெளிவாக உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும். சமூகத்தின் அடித்தளம் அவர்கள். சம்பளம் வாங்குவதும், தேர்ச்சி சதவீதம் காட்டுவதும் மட்டுமே வேலை அல்ல. ஒரு சமூகமே அவர்களின் விரல் அசைவுக்கு கட்டுப்படும். அதை உணர்ந்து கனிவோடும், அன்போடும், நல்ல எண்ணங்களுடன் மாணவ சமுதாயத்தை அணுக வேண்டும்.

    பாடத்துடன் நல்ல ஒழுக்க நெறிகளையும் கற்பிக்க வேண்டும். பள்ளிக்குப் போகும் தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று பெற்றோர்களும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கிய கடமை மாணவர்களுக்கு உள்ளது. இந்தப் பருவத்தில் கவனம் சிதறாமல் இருந்தால் வாழ்நாள் முழுதும் மதிப்பும், கவுரவமாக வாழலாம். சந்தோஷம் என்பது கோடீஸ்வரனாக வாழ்வதில் இல்லை. மற்றவர்களால் வணங்கத் தக்க விதத்தில் நல்ல சான்றோர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி அடங்கி உள்ளது.

    ஜி.ஏ.பிரபா, எழுத்தாளர்.
    குழந்தைகளுக்கு கீர் என்றால் விரும்பி குடிப்பார்கள். இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சூப்பரான கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஜவ்வரிசி - 5 டேபிள் ஸ்பூன்
    சர்க்கரை - சுவைக்கு
    சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 1
    முந்திரி பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பாதாம் பருப்பு (தோல் நீக்கியது) - தேவையான அளவு
    பால் - 3 கப்
    ஏலக்காய் - 1 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    முந்திரி, பாதாம் பருப்பை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பால் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் ஜவ்வரிசி சேர்க்கவும்

    நன்றாக கலக்கி அடுப்பை குறைந்த தீயில் வைத்து ஜவ்வரிசியை வேக விடவும்.

    ஜவ்வரிசி வெந்தவுடன் சர்க்கரை, முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இவற்றைச் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வைக்கவும்.

    வேக வைத்து நறுக்கி வைத்துள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கிளறவும்

    பிறகு குங்குமப் பூ, ஏலக்காய் சேர்த்து நன்றாக கிளறவும்

    அடுப்பை அணைத்து விட்டு ஒரு பெளலிற்கு மாற்றி கொள்ளுங்கள்

    அப்படியே பாதாம் பருப்பை அதன் மேல் தூவி அலங்கரித்து சூடாக அல்லது ஆறின பிறகு பரிமாறுங்கள்.

    சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் ரெசிபி ரெடி

    குறிப்பு :

    ஜவ்வரிசியை முன்பே ஊற வைத்து கொண்டால் பாயசத்துக்கு மென்மையான பதம் கிடைக்கும். வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை துருவிக் கொண்டால் பாயசம் ரொம்பவும் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல உள்ளன.
    சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களுக்கு நேரும் பிரச்சனைகளும் ஆபத்துகளும் அனைவரும் அறிந்த ஒன்றே! தற்போது, உடனடி தகவல் பரிமாற்றத்துக்காக பிரபலமாகி வரும் ‘வாட்ஸ்ஆப்’ எனும் தொழில்நுட்பத்திலும் பெண்களுக்கான பிரச்சனைகள் பல. ‘வாட்ஸ்ஆப் என்பது தனிநபர், தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ்தானே… இதில் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?’ என்பது உங்களின் கேள்வியாக இருந்தால்… இதோ பதில் விரிவாக!

    என்னென்ன ஆபத்துகள்?


    தெரிந்தவரோ, தெரியாதவரோ… உங்களுக்குத் தொல்லை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, உங்களின் செல்போன் நம்பர் கிடைத்தால் போதும்… அவர்களால் உங்கள் ‘வாட்ஸ்ஆப்’ கணக்கைப் பார்க்கவும், அதிலிருக்கும் புகைப்படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். உங்களுக்குத் தெரியாத நபர்கள்கூட, உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களைத் தொடர முடியும். போலி பெயருடன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து தோன்றும்போது, எதிர்முனையில் இருக்கும் நபர் இவர்தான் என்று உங்களால் உறுதிபடுத்த முடியாத சூழலில், அவர் உங்களைத் தொடர்புகொண்டு, உங்களது தகவல்களைப் பெற வாய்ப்புள்ளது. தோழிகளால் ‘வாட்ஸ்ஆப்’ குரூப்களில் உங்கள் பெயர் இணைக்கப்படும்போது, உங்கள் எண் அந்த குரூப்பில் ஏற்கெனவே உள்ள அனைவரிடமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

    எப்படித் தவிர்க்கலாம்?

    பிரச்சனைகளைத் தவிர்க்க, ‘வாட்ஸ்ஆப்’ செட்டிங்கில் உள்ள, பிரைவஸி செட்டிங்கை மாற்றியமைக்க வேண்டும். அதாவது,  பிரைவஸி செட்டிங் பகுதிக்குச் சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், ‘லாஸ்ட் ஸீன்’ ஆகியவற்றை, மைகான்டாக்ஸ் அல்லது ஒன்லி மீ ஆப்ஷன்களைப் பயன்படுத்தி பாதுகாத்துக்கொள்ளலாம்.



    நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை அறிவுறுத்தும் ஸ்டேட்டஸ்களைப் பதிவு செய்யாதீர்கள். குரூப்களில் இணைவதிலும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருங்கள். ‘ப்ளாக்’ (Block) ஆப்ஷனை பயன்படுத்தி, உங்களுக்குத் தொல்லை தருபவரை உங்கள் கணக்கைத் தொடராமல் தடுக்கும் வசதியும் இதில் உள்ளது. இப்படிப்பட்ட நபர்களின் செல்போன் எண்களை உங்கள் மொபைல் போனில் இருந்து நீக்கிவிட்டால்… போயே போச்!

    தெரிந்தவர்களோடு மட்டும் ‘வாட்ஸ்ஆப்’ பேசுவது எப்போதுமே பாதுகாப்பானது.

    ஆபத்துதவி ஆப்ஸ்!

    ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய ஆப்ஸ் ஒன்று, ஆண்ட்ராய்டு போன்களில் பிரபலமடைந்துள்ளது. இது இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப பிரிவான ‘நாஸ்காம்’ அமைப்பு நடத்திய, பெண்கள் பாதுகாப்புக்கான ஆப்ஸ் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    நீங்கள் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டால், ‘ஆபத்துதவி’யாக யார் இருப்பார்களோ அவருடைய செல்போன் நம்பர் மற்றும் இ-மெயில் முகவரியை இந்த ஆப்ஸில் பதிவு செய்ய வேண்டும். ஆபத்து நேரத்தில் செல்போன் திரையில் இருக்கும் இந்த ஆப்ஸை விரல் நுனியில் அழுத்தினாலே, வாய்ஸ் ரெக்கார்டர் வேலை செய்ய செய்ய ஆரம்பித்துவிடும். 45 விநாடிகள் பதிவானதும், நீங்கள் இருக்கும் இடத்தின் விவரத்தோடு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் இரண்டும், அந்த ஆபத்துதவிக்கு போய்ச் சேர்ந்துவிடும். ஒருவேளை நீங்கள் அப்போது இருப்பது இன்டர்நெட் வசதி இல்லாத இடமாக இருந்தால், குறுஞ்செய்தி மட்டும் சென்று சேர்ந்துவிடும்.

    ×