என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்போம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். #TTVDhinakaran #MLAsDisqualified

    மானாமதுரை:

    18 எம்.எல்.ஏ.க் களின் தகுதி நீக்க வழக்கில் ‘சபாநாயகரின் அதி காரத்தில் தலையிட முடியாது’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார்.

    அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது. இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்றார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது எனத் தீர்ப்பு வெளியானது.

    இந்த தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளருமான சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-

    18 எம்.எல்.ஏக்களும் தினகரன் தலைமையில் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றோம். சபாநாயகர் உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பு வந்தாலும் நாங்கள் தினகரன் தலைமையில் தான் தொடர்ந்து இயங்குவோம்.

     


     

    மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் அமையும். தினகரன் தமிழகத்தின் முதல் வராவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பரமக்குடி தொகுதி டாக்டர் முத்தையா கூறுகையில், இந்த தீர்ப்பானது தொகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

    மானாமதுரை மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    நீதிமன்ற தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்தோம். நீதி மன்றம் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் நேர்மாறாக தீர்ப்பு உள்ளது. 9 மாதங்களாக எம்.எல்.ஏ. பணியை மேற்கொள்ள முடியவில்லை. தொகுதி மக்கள் என்னிடம் குறைகளை நேரிலும், போனிலும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தகுதி நீக்கம் என்ற ஒரே காரணத்திற்காக எனது தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் எந்த வித பணியையும் செய்வதில்லை.

    தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்யப்பட வேண்டிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தற்போது தீர்ப்பு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. தீர்ப்பு நியாயமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்பேன் என்றார்.  #TTVDhinakaran #MLAsDisqualified

    பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4½ லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில் வருமாறு:-

    தமிழ்நாட்டில் 13 லட்சம் குடிசைப் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குடிசைகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதற்காக பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதியாக வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒரு வீட்டுக்கு ரூ.1½ லட்சம் வழங்குகிறது. தமிழக அரசு ரூ.7½ லட்சம் கொடுக்கிறது. வீட்டு உரிமையாளர் ரூ.1½ லட்சம் வழங்க வேண்டும். இதன்படி தற்போது தமிழ்நாட்டில் 4½ லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly
    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டத்தை பார்ப்போம். #18mlacase
    சென்னை:

    டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கு கடந்து வந்த பாதை குறித்த கண்ணோட்டம்.

    2017 பிப்ரவரி 16 - தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். 15 நாட்களில் அரசின் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவு.

    2017 பிப்ரவரி 18 - அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டபேரவையில் கொண்டு வரப்பட்டது. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிப்பு.

    2017 ஆகஸ்ட் 22 - முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை எனவும் அவரை மாற்ற கோரி டிடிவி தினகரன் ஆதரவு பெற்ற 19 எம்.எல்.ஏ.கள் தமிழக கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர்.

    2017 ஆகஸ்ட் 23 - தமிழக கவர்னரை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அரசை தனது பெரும்பான்மையான நிரூபிக்க உத்தரவிட கோரி மனு அளித்தார்.

    2017 ஆகஸ்ட் 24 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறாடா புகார் அளித்தார்.

    2017 ஆகஸ்ட் 28 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினர். ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

    2017 செப்டம்பர் 5 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் இடைக்கால விளக்கம் அளித்து சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை என கூறி செப்டம்பர் 7-ந்தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்டார்.

    2017 செப்டம்பர் 7 - வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏக்கள் விசாரணைக்கு நேரில் ஆஜாரானார்கள். கெறாடா சார்பில் ஆஜராகதால் சபாநாயகர் விசாரணை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

    2017 செப்டம்பர் 12 - தமிழக அரசு உடனடியாக பெரும்பான்மை நிரூபிக்க கோரி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, செப்டம்பர் 20-ந்தேதி வரை பெரும்பான்மை நிரூபிக்க இடைக்கால தடை விதித்தார். அதுவரை குட்கா பொருள்களை சட்டமன்றத்திற்குள் எடுத்துச் சென்றதாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை விதித்து உத்தரவு.

    2017 செப்டம்பர் 14 - அரசு கெறாடா அளித்த புகார் மனுவை அளிக்க 19 எம்.எல்.ஏக்கள் சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.


    2017 செப்டம்பர் 16 - டி.டி.வி தினகரன் ஆதரவு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.

    2017 செப்டம்பர் 18 - அரசுக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் காலை 11 மணிக்கு உத்தரவிட்டார். இரவு 8.30 மணிக்கு தகுதி நீக்கம் தொடர்பான உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதில் அரசுக்கு எதிராக கடிதம் அளித்த ஜக்கையன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அவருக்கு தகுதி நீக்கம் செய்யவில்லை என விளக்கம்.

    2017 செப்டம்பர் 19 - தகுதி நீக்கத்தை எதிர்த்து வெற்றிவேல், செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல்.

    2017 செப்டம்பர் 20 - தகுதி நீக்கம் செய்த உத்தரவை எதிர்த்த மனு மீது நீதிபதி துரைசாமி விசாரணை. மறு உத்தரவு வரும் வரை தகுதி நீக்கம் செய்த எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதித்தார். தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பேரவைக்குள் எடுத்து சென்றதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

    அக்டோபர் மாதம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு முதல் நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணை நடந்தது.

    2017 நவம்பர் 2 - வழக்கின் முக்கியத்துவம் கருதி டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ரவிசந்திரபாபு உத்தரவு.

    2017 நவம்பர் 6 - எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரணை கோரி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் முறையீடு.

    நவம்பர் 16-ந்தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், முதல் அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது.

    2017 நவம்பர் 16 - தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது.

    2018 ஜனவரி 18 - அனைத்து தரப்பும் இறுதி வாதங்களை நிறைவு செய்தனர். எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    2018 ஜனவரி 23 - அனைத்து தரப்பினரும் எழுத்துப் பூர்வமான இறுதி வாதங்களை தாக்கல் செய்தனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு உத்தரவு.

    2018 ஜூன் 14 - தீர்ப்பு வெளியிடப்பட்டது. #18mlacase
    ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதை தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.#TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கியது.

    இதுவரை வனம், சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதம் முதல்நாள் நடந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மின்சாரம், மதுவிலக்கு, மீன், பால்வளம், கால்நடை, நகராட்சி, உள்ளாட்சி, சட்டம், சிறை, நீதி நிர்வாகம், சத்துணவு, மாற்றுத்திறனாளி, தொழில் துறை, சிறு-குறு தொழில், கைத்தறி, கதர் கிராம தொழில், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதங்கள் நடந்துள்ளன.

    எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதுதவிர ஸ்டெர்லைட், காவிரி பிரச்சனை, எஸ்.வி.சேகர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளும் சட்டசபையில் எழுப்பப்பட்டு காரசார விவாதங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

    இன்று 13-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கான விவாதத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


    உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்து பேசினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசார விவாதங்களும் இடம்பெற்றன.

    ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது.

    இதையடுத்து, வருகிற 24-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.

    மீண்டும் சட்டசபை 25-ந்தேதி கூடுகிறது. இதில் தொடர்ந்து செய்தி, சுற்றுலா, காவல்துறை, தீயணைப்பு, வருவாய் துறை, சுற்றுசூழல், வணிகவரி, போக்குவரத்து, ஆதிதிராவிடர், தமிழ் வளர்ச்சி, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

    இந்த துறைகள் சார்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. வருகிற ஜூலை 9-ந்தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது. #TNAssembly
    18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். #edappadiPalanisamy #18mlas

    சென்னை:

    முதல்- அமைச்சர் பழனிசாமி இன்று அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 18 எம்.எல். ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இதேபோல் டி.டி.வி. தினகரனும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அடையாறு இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர். #edappadiPalanisamy #18mlas

    தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறினார். #18MLACase #Tamilisai
    கோவை:

    மத்திய அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று திருப்பூரில் நடந்தது.

    இதில் பங்கேற்பதற்காக பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று காலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமே பரபரப்பாக எதிர்பார்ப்பது இன்று மதியம் 1 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் வர இருக்கும் 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தீர்ப்பை தான். தீர்ப்பு எப்படி வருகிறது என்று பார்ப்போம். அது அணுகுண்டாக வெடிக்கவும் செய்யலாம், புஷ்வாணமாக போகவும் செய்யலாம்.

    அது அரசியலில் அணுகுண்டாக மாற போகிறதா? புஷ்வாணமாக இருக்க போகிறதா? என்பதை பார்க்க வேண்டும்.

    சபாநாயகர் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்ன முடிவு செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    கோவையில் மழை பெய்து வருகிறது. ஆறுகள், குளங்கள் நிறைந்து வரும் நிலையில் நீரை சேமிக்கும் அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தை பொறுத்தவரை இன்றைய கால கட்டத்தில் செயின்பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. 1 மணி நேரத்தில் எவ்வளவு நகை பறிக்கப்படும் என்பது திருடர்களிடம் போட்டியாகவே நடத்தப்படுகிறது. எனவே பெண்கள் வெளியே நடமாடவே பயப்படுகின்றனர்.

    தற்போது போலீசார் ரோந்து படையை இறக்கி உள்ளனர். இதன் மூலம் நகை பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை ஆகும்.



    ராகுல்காந்தி மத்திய அரசை எவ்வளவோ குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர் எவ்வளவு குறை சொன்னாலும் இன்று மத்தியில் நிலையான ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதா கட்சி கொடுத்து வருகிறது.

    கார்த்திக் சிதம்பரம் மீதான 4500 பக்க குற்றப்பத்திரிகையில், ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கார்த்திக் சிதம்பரத்துக்கு உதவி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

    இன்று ஊழலற்ற ஆட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் பா.ஜனதா கட்சி தலைநிமிர்ந்து நிற்கிறது. ராகுல் காந்தி நாளொரு வண்ணம், பொழுதொரு வண்ணமாக குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டிருக்கிறார். இதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #18MLACase #Tamilisai

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #18mlacase #Congress #Thirunavukkarasar
    தஞ்சாவூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வரவுள்ளதை வரவேற்கிறேன்.


    இந்த தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும். மேலும், ஆட்சி கவிழ்கிறதா? அல்லது நிலை பெறுமா? என்பது தெரியவரும்.

    காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படவேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை. இதில் கட்சிகளை வைத்து இப்பிரச்சனையை அணுக முடியாது. எனவே தமிழக அரசு போராடி மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காணவேண்டும்.

    எஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்றால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது காவல் துறை பயப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #18mlacase #Congress #Thirunavukkarasar
    மத்திய அரசு முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நிலக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிலக்கோட்டை வந்தார். அவர் பொதுக்கூட்டத்தில் பேசியதாவது,

    ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி. தற்போது மத்திய அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் இன்னலை தருகிறது.

    விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டது. மாட்டுஇறைச்சி கடை மூலம் ஏழை மக்களுக்கு எதிரான போக்கை கையாண்டு உள்ளது. 2015-ம் ஆண்டு தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக 38 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டது. 2016-ம் ஆண்டு அது 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

    வன்கொடுமை தடுப்புசட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது அந்த சட்டத்தை நீர்த்துபோகசெய்யும். கல்விக்கடன் பெற்ற மாணவர் ஒருவர் ரூ.70ஆயிரத்தை திருப்பி கட்டவில்லை என வங்கி அதிகாரிகள் தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

    ஆனால் மத்திய அரசு முதலாளிகளுக்கு கோடிகணக்கில் கடன் கொடுத்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறது. எனவே இவர்கள் ஏழைகளுக்காக செயல்படவில்லை. முதலாளிகளுக்கு மட்டுமே ஆதரவாக உள்ளனர்.

    இதனை எதிர்ப்பதற்காகத்தான் போராடுவோம் தமிழகமே என குமரி மாவட்டத்தில் இருந்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

    மாநில அரசு 800-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை மூடஉள்ளது. அதில் திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டத்தில் 72 பள்ளிகள் மூடப்பட உள்ளன. கேரளாவில் அரசு பள்ளிகளை மேம்படுத்தி கல்வி வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட நிர்வாகி சவுந்திரராஜன், ஒன்றிய செயலாளர் காசிமாயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Tamilnews

    புழல் சிறை-2ல் மேலும் 500 கைதிகளை அடைப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #tnassembly #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சிறைத் துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்.

    சென்னை புழல் மத்திய சிறை2ல் உள்ள இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதித்திடும் வகையில், 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    புழல் மத்திய சிறை 2, வேலூர், கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் பணி புரிந்து வரும் உதவி சிறை அலுவலர்களுக்கு 50 குடியிருப்புகள், 10 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    சிறைகளுக்குள் சிறைவாசிகள் செல்லிடத் தொலைபேசியை உபயோகப்படுத்துவதை தடுத்திடும் பொருட்டு, ஏற்கனவே 9 மத்திய சிறைகளில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.


    அதன் தொடர்ச்சியாக, சென்னை புழல் மத்தியசிறை1 மற்றும் 2, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை மற்றும் 5 பெண்கள் தனிச்சிறைகளில் நடப்பாண்டில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செல்லிடத் தொலைபேசியை செயலிழக்கும் கருவிகள் பொருத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை சார்ந்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன்.

    ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க தமிழ்நாடு அரசால் காப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மதுரையில் செயல்படும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகம், 1986-ம் ஆண்டிலிருந்து மாநகராட்சி கட்டடத்தில் இயங்கி வருகின்றது.

    தற்போது இக்கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், ஒரு புதிய கட்டடம், துயிற்கூடம், குழந்தைகள் நலக் குழு அறை, வகுப்பறை, தொழிற் பயிற்சி கூடம் மற்றும் உணவுக் கூடம் ஆகியவை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்று 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 46 ஆயிரத்து 397 அங்கன்வாடி மையங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    நடப்பாண்டில் 860 அங்கன்வாடி மையக் கட்டடங்களில் உள்ள சிறிய மற்றும் பெரிய வகையிலான பழுதுகளை நீக்கி, சீர்படுத்துவதற்காக தலா 2 லட்சம் ரூபாய் வீதம், 17 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளரச் செய்யவும், சம வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரவும், அவர்களுக்கென பல கொள்கைகளை வகுத்தும், திட்டங்களைத் தீட்டியும், அம்மா வழியில் அம்மாவின் அரசு செயல் பட்டு வருகின்றது.

    மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

    இதன் மூலம் 1,129 சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு 5 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

    மாற்றுத் திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பொருள் விற்பனை மையம் அமைக்க, அவர்கள் ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்பு நிதி 25,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். முதற் கட்டமாக, 100 நபர்களுக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல் படுத்தப்படும்.

    மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் 301 சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்கள் மூலம் 11 ஆயிரத்து 948 மாற்றுத் திறனாளிகள் பயன் பெறுகின்றனர்.

    அவர்களுக்கு தற்போது மாதமொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியம் 650 ரூபாயிலிருந்து 900 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #tnassembly #EdappadiPalaniswami

    மக்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு தீர்வு காண்பதில்லை, சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tngovernment #sterliteprotest

    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு அரசாங்கத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் எல்லோருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்வார் என்று அவர் கூறி தனது பொறுப்பை தட்டிக் கழித்து இருக்கிறார்.

    இந்த அரசு என்ன நினைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. போராட்டம் நடத்துபவர்களை அழைத்து இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதே கிடையாது. இதுவரை நடந்த போராட்டங்களுக்கு எந்த தீர்வும் கண்டதில்லை.


    போக்குவரத்துகழக ஊழியர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை எதற்கும் சரியான தீர்வு கண்டதில்லை. இந்த அரசின் செயல் கேலி கூத்தாக இருக்கிறது. இந்த அரசு நல்லது செய்யும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு.

    எத்தனை நாளைக்கு டெல்லிக்கு காவடி தூக்கி இந்த அரசாங்கத்தை தொடர முடியும். மக்களை சுரண்டி பணம், சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இந்த அரசுக்கு அக்கறை கிடையாது.

    முதல்வர் உள்பட அரசில் உள்ள அனைவர் மீதும் குற்றச்சாட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கூறினார். #kanimozhi #tngovernment #sterliteprotest

    வருவாயை மறைத்து ஆற்றுமணல் கொள்ளையை மூடி மறைக்கப்பட்டுள்ளன என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். #Ramadoss #Sandquarries

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில் தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன? அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.

    தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆண்டுக்கு ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது? என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.


    நடப்பாண்டிற்கான நீர்ப் பாசனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது.

    இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும். இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.

    எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப் பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss #Sandquarries

    தமிழக அரசு காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு பயன் படுத்தி வருகிறது என்று டிடிவி தினகரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #TTVDhinakaran #Thoothukudishooting

    ஆலந்தூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது கண்டு கொள்ளாத அரசு துப்பாக்கிசூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. மக்களை பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.

    படுகொலை நடந்த பிறகு அரசாணை போட்டு ஆலையை மூடுவோம் என்றனர். பின்னர் நிரந்தரமாக மூடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

    அதேபோல் தான் சேலத்தில் 8 வழி பசுமை சாலையை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் மக்கள் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. பசுமை வழிச் சாலை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

    சென்னை - பெங்களூர் சாலையில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை 8 வழிச் சாலையாக அரசு மாற்றினால் பரவாயில்லை. அதைவிட்டுவிட்டு போக்குவரத்தே இல்லாத சேலத்தில் சாலை அமைக்கிறார்கள்.

    மற்றொரு தூத்துக்குடி போல சேலம் மாற வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறாரா? அவர் நினைப்பது நடக்காது. அதற்குள் இந்த அரசாங்கத்துக்கு முடிவு வரும்.

     


    சட்டசபையில் டாஸ்மாக் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் கொடுக்கிறார். அதற்கு விளக்கம் தர நான் எழுந்த போது அவர் உங்களையும் பற்றி சொல்லவில்லை என்று சபாநாயகர் சொன்னதால் நான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.

    பின்பு சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். அதில் உறுப்பினர் உரிமையை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறி இருந்தேன். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

    எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று முதல்-அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாநில அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.

    காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு அரசு பயன் படுத்தி வருகிறது. அரசை கண்டு காவல்துறை பயப்படுகிறது. மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Thoothukudishooting

    ×