என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    திருமணத்துக்கு பிறகு தனது உடல் எடை கூடியதை கேலி செய்தவர்களுக்கு நடிகை சரண்யா மோகன் பதில் அளித்து உள்ளார்.
    ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சரண்யா மோகன். ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் தங்கையாகவும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனா தங்கையாகவும் நடித்து இருந்தார். ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

    மலையாள பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். சரண்யா மோகனுக்கும் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.



    இந்த நிலையில் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கும் சரண்யா மோகனின் சமீபத்திய படம் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த படத்தை பார்த்தவர்கள் ஒல்லியாக இருந்த சரண்யா மோகனா இப்படி மாறிவிட்டார் என்ற ஆச்சரியத்துடன் அவரது தோற்றத்தை கிண்டல் செய்து பேஸ்புக், வாட்ஸ் அப்களில் கருத்துகள் பதிவிட்டனர்.

    ஒரு பிள்ளை பெற்றதும், ‘ஆன்டி’யாகி விட்டார் என்று சிலர் கருத்து பதிவிட்டனர். நகைச்சுவை நடிகர் வடிவேலு, “இப்படித்தான் எல்லோரும் அவங்க பொண்டாட்டிய வேணுங்கிறதை வாங்கி கொடுத்து நல்லபடியா பார்த்துக்கணும்” என்று சொல்வது போன்று சரண்யா மோகனின் உடல் பருமனை கேலி செய்து ‘மீம்ஸ்’களும் வெளிவந்தன.



    இது சரண்யா மோகனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. குழந்தையுடன் இருப்பது போன்ற தனது படத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கிண்டல் செய்தவர்களுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    “பிரசவத்துக்கு பிறகு பெண்கள் குண்டாவது இயற்கை. பிரசவத்தில் ‘சிசரியன்’ செய்து கொண்டால், உடல் எடை கூடத்தான் செய்யும். நான் தாய் ஆனதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் குழந்தைக்கு உணவு ஊட்டுவதிலும் சந்தோஷப்படுகிறேன். பெண்களுக்கு இதுவே முக்கியமான விஷயங்கள். தாயாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்”.

    இவ்வாறு சரண்யா மோகன் பதில் அளித்துள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்தை மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    பா.ரஞ்சித் டைரக்‌ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இதற்காக கடந்த 28-ந் தேதி நடிகர் ரஜினிகாந்த் மும்பை வந்தார். மும்பை வடலா, தாராவி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த் கருப்பு வேட்டி, ஜிப்பா, கண்ணாடி அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

    இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா சந்தித்து பேசினார்.

    ரஜினிகாந்த்துடன் தான் சந்தித்து பேசிய புகைப்படத்தை அம்ருதா பட்னாவிஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில், சில சமூக பிரச்சினைகள் குறித்து தலைவருடன் (ரஜினிகாந்த்) பேச வாய்ப்பு கிடைத்தது என்று குறிப்பிட்டு உள்ளார்.



    இருப்பினும் இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா தனியார் வங்கி அதிகாரி, பாடகி, மாடலிங் என பன்முக திறன் கொண்டவர்.

    பெண் சிசு கொலை தொடர்பாக இவர் பாடிய விழிப்புணர்வு பாடல் பிரபலம் ஆனது. சமீபத்தில் திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக நிதி திரட்ட ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். மற்றொரு பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது நடிகர் அமிதாப் பச்சனுடன் அம்ருதா நடனமாடி அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.
    வேந்தர் மூவிஸ் மதன் அப்பாவி என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அவர் பிரதமருக்கு கடிதம் எழுதி இருப்பதாக ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அவரது வக்கீல் கூறினார்.
    தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெற்றுத்தருவதாக கூறி வேந்தர் மூவிஸ் மதன் பலரிடம் 84 கோடியே 24 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பல மாதங்களாக தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்தனர்.

    மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பெற்ற பணத்தை மதன், ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் மதனை கைதுசெய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதன், சென்னை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி அருள்முருகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மதன் தரப்பில் வக்கீல் இன்பென்ட் தினேஷ் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்றுத்தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக பல மாணவர்களின் பெற்றோர் அளித்துள்ள புகாரில் மதன் ஏஜென்டாக செயல்பட்டதாகவே கூறி உள்ளனர். மற்றபடி பணத்தை மதனிடம் கொடுத்ததாக யாரும் புகாரில் கூறவில்லை. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் பணத்தை கொடுத்ததாகவே அனைவரும் தெரிவித்துள்ளனர்.



    அப்படி இருக்கும்போது பணத்தை ஹவாலா மூலம் மதன் பரிமாற்றம் செய்ததாக கூறுவது சரியல்ல. உண்மையிலேயே பணம் பெற்றவர்கள் மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் மதனை மட்டும் கைது செய்துள்ளது. மதன் தன்னிடம் உள்ள சொத்துகள் குறித்த விவரத்தை ஏற்கனவே ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். வெறும் 1½ கோடி ரூபாய்க்கு மட்டுமே அவரிடம் சொத்து உள்ளது.

    மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்று தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரில் மதன் அப்பாவி. எனவே தான், இந்த புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதன் சிறையில் இருந்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். போலீசாரின் விசாரணைக்கு மதன் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

    அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எனவே, மதனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

    இவ்வாறு வக்கீல் கூறினார்.

    அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் தண்டபாணி, ‘சுமார் 84 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. இந்த பணம் எங்கு சென்றது என்பதை மதன் மூலம் கண்டறியவே அவரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் 133 சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியது உள்ளது. மதனை ஜாமீனில் விடுவித்தால் சாட்சிகளை கலைத்து விடுவார். எனவே, மதனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை இன்று(9-ந்தேதி) தள்ளிவைத்தார்.
    மனைவியிடம் இருந்து இந்தி நடிகர் ஹிமேசுக்கு பாந்திரா குடும்ப நல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    இந்தி திரைப்பட நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருப்பவர் ஹிமேஷ். இவரது மனைவி கோமல்.

    ஹிமேசுக்கும், நடிகை சோனியா கபூருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாக வதந்திகள் பரவின. இதையடுத்து ஹிமேசுக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன் விவாகரத்து கேட்டு 2 பேரும் பாந்திரா குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.



    மனுவை விசாரித்த நீதிபதி, 2 பேரையும் சில மாதங்கள் தனியாக வசிக்க உத்தரவிட்டார். எனினும் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிவதில் உறுதியாக இருந்தனர். இந்தநிலையில் 2 பேருக்கும் பாந்திரா குடும்ப நல கோர்ட்டு விவாகரத்து வழங்கியது.

    இதுகுறித்து நடிகர் ஹிமேஷ் கூறும்போது, “உறவிற்கு மதிப்பளிக்கும் வகையில் நாங்களே பேசி சுமுகமாக பிரிகிறோம். எங்களின் முடிவை குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு உள்ளனர்” என்றார்.
    காவிரி பிரச்சினையில் உரிமையை நிலைநாட்ட தமிழக அரசியல் கட்சியினர், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    நீரின்றி அமையாது உலகு. தெரிந்திருந்தும் நாம் எதைச் செய்தோம்? தண்ணீரை சேமிக்க வேண்டும், பாதுகாக்க வேண்டும் எனும் அடிப்படை அறிவுகூட இல்லாமல் ஆட்சி நடத்தினார்கள்.

    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த காவிரி நதி, கை நனைக்கக்கூட தண்ணீர் இல்லாமல் வற்றிப்போய் கிடக்கிறது. நாம் 40 லட்சம் ஏக்கரில் காவிரி நீரைக்கொண்டு விவசாயம் செய்த நிலங்கள் இன்று 8 லட்சம் ஏக்கர்களாக மாறிவிட்டன. அந்த 8 லட்சத்தில் ஒரே ஒரு ஏக்கரில் கூட இந்த பருவ விவசாயத்தை செய்ய முடியவில்லை.

    நான் கேட்டுக்கொள்வதெல்லாம், ‘தமிழக அரசியல் கட்சிகளிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களும், விரைவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இம்முறை உங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக கட்சி வேறுபாடுகளை மறந்து, தங்களின் சொந்த பகைகளை மறந்து ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.



    காவிரி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைக்க வேண்டிய நியாயத்தின் அடிப்படையில் நீரைப் பெற்றுத்தருவதற்காக ஜனாதிபதி தேர்தலை இம்முறை புறக்கணித்து மத்திய அரசுக்கு நியாயத்தை உணர்த்த வேண்டும்.

    ஜல்லிக்கட்டுக்காக, மாட்டுக்கறிக்காக கொதித்தெழுந்து போராட வீதிக்கு வந்த இளைஞர்களும், மாணவர்களும் விவசாயிகளை கதறவிட்டு வேடிக்கை பார்த்தது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை இப்போதாவது உணருங்கள்.

    இம்முறை தமிழகத்தை சார்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்களித்தால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர்கள் நம் தமிழக அரசியல்வாதிகளைத்தவிர வேறு யாருமில்லை.

    இவ்வாறு தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
    ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ரஜினிகாந்த் பதிலளிக்க சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.ஆர். விண்மீண் கிரியேஷன்ஸ் உரிமையாளரான கே.ராஜசேகரன் என்ற கே.எஸ்.நாகராஜா, சென்னை பெருநகர 6-வது உதவி உரிமையியல் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா என்ற கரிகாலன் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. கரிகாலன் படம் மற்றும் கதை தொடர்பாக கடந்த 1995 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் நான், நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து பேசி உள்ளேன்.

    கடந்த 1996-ம் ஆண்டில் சென்னை பாம்குரோவ் ஓட்டலில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மூலமாக கரிகாலன், உடன்பிறவா தங்கச்சி ஆகிய படத்தலைப்புகளை வெளியிட்டேன்.

    கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் கதையின் மூலக்கரு அனைத்தும் எனது உருவாக்கம் ஆகும். கரிகாலன் திரைக்கதையை பல தயாரிப்பாளர்களிடமும் கூறி உள்ளேன்.



    என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும், கதையையும் தனுஷ், ரஞ்சித் ஆகியோர் திருடி அதற்கு மறுவடிவம் கொடுத்து தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து காலா என்ற கரிகாலன் என்ற படத்தை எடுத்து வருகின்றனர்.

    எனவே, கரிகாலன் என்ற தலைப்பு மற்றும் அதன் மூலக்கதையை இயக்குனர் ரஞ்சித் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியோர் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி தமிழரசி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித், வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கம் ஆகியோர் பதிலளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

    பின்னர், விசாரணையை 15-ந்தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.
    பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:-

    "அதுவரையில் நான் இசையமைத்த படங்களில்கூட பாடல் உருவாகும் சந்தர்ப்பங்களில் கங்கை அமரன் பற்றிய நினைவே வரவில்லை. இத்தனைக்கும் எல்லா கம்போசிங்கின்போதும், ரெக்கார்டிங்கிலும் அவன் கூடவே இருந்தான். அவனை என்னோடு இருக்கும் ஒருவனாகத்தான் எண்ணினேனே தவிர, அவனுக்கு பாடல் கொடுக்க வேண்டுமென்று நினைக்கவே வாய்ப்பில்லாமல் போயிற்று.

    ஆனால், பாரதி அப்படியில்லை. உடனிருப்பவர்களை விட்டுவிடாது, அவரவர் திறமைக்கேற்ப அவர்களையும் உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணம் அவருக்குள் ஓடிக்கொண்டிருந்ததை வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமருக்கு பாட்டெழுத அவர் கொடுத்த வாய்ப்பு.

    அமரும் டிïனைக் கேட்டுவிட்டு "செந்தூரப்பூவே'' பாடலை எழுதினான். பாடுவதற்கு, டிïனோடு நன்றாக இருந்தது.

    "செந்தூரப்பூவே'' பாடலை எஸ்.ஜானகி அருமையாகப் பாட, பாடல் பதிவாகியது.

    செந்தூரம் என்றால் குங்குமம். ஆனால் செந்தூரப்பூ என்றால்? அப்படியொரு பூ இருக்கிறதா?

    இப்படியொரு கேள்வி எனக்கும், பாரதிக்கும் தோன்றியபோது அதையே அமரிடம் கேட்டோம். அவனோ அவன் பாணியில் விளக்கங்கள் சொல்ல ஆரம்பித்து விட்டான்.

    "சரி சரி! அப்படியே இருக்கட்டும். செந்தூரப்பூ என்று ஒரு `பூ' இருப்பதாக ஒத்துக்கொள்கிறோம் என்று `செந்தூரப்பூ' சர்ச்சையை அத்துடன் முடித்துக்கொண்டு, அந்தப் பாடலை பதிவு செய்தோம். இந்த வகையில் கங்கை அமரனை திரைப்பட பாடலாசிரியர் ஆக்கிய வகையில், அவன் ஜென்ம ஜென்மத்துக்கும் நன்றிக்கடன் செலுத்தவேண்டியது பாரதிக்குத்தானே தவிர, எனக்கல்ல.

    படம் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங்கும் நிறைவு பெற்று, பின்னணி இசை சேர்ப்புக்கு வந்தது.

    படத்தைப் பார்த்தேன்.

    `அடடே! பாரதிக்குள் இவ்வளவு பெரிய கலைஞன் இருக்கிறானா?' என்று பிரமித்துப் போனேன்.

    அவர் கூடவேதான் இருந்தோம்; ஒன்றாகத்தான் வளர்ந்தோம். ஆனால் திரையில் இப்படி ஒரு எளிமையான, அழகான, உயிரோட்டமான படத்தை வடித்திருக்கிறாரே என்று வியந்து போனேன்.

    இந்தப்படம் `ரெயான்ஸ் டாட்டர்' என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கமல் உள்பட பலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். ஆனால் அது, பண்ணைபுரம் கிராமத்தில் வாழ்ந்த மூன்று கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வடிக்கப்பட்ட கற்பனைக் கதைதான். அங்கே கூட அது உண்மையாக நடந்த கதை இல்லை. அதோடு ஆங்கிலப் படத்தின் தழுவலும் இல்லை.

    இந்தப்படம் எனக்குள்ளும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இத்தனை நாள் தொழிலாக அமைந்த இசைப்பாணியை பின்பற்றி இசையமைத்து வந்த எனக்கு, இந்தப்படம்தான் நமது பாணியை மாற்ற ஏதுவான படம். இந்தப்படத்தில் இருந்து மாற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவை எடுக்க வைத்தது.

    இந்தப் படத்தில் இருந்துதான் பின்னணி இசையைப் பற்றிய எனது அணுகுமுறையே முற்றிலும் மாறியது. இது அடுத்த சாதாரண படங்களிலும்கூட, வித்தியாசமான பரிசோதனை முறையிலான இசையை கொடுத்துப் பார்க்க வித்திட்டது என்றே சொல்லவேண்டும்.

    16 வயதினிலே படத்தில் பார்த்தீர்களானால் ஒரு காட்சியில் கமல் அங்கும் இங்குமாக போய்ப் பேசுவார்.

    கேமரா டிராலி கமலுடனே இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமும், வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமும் போகும். இதற்கு எந்த இசையும் போடவில்லை.

    அந்த ரீலுக்கு மற்ற இடங்களில் இசையமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லாம் சரியாக இருந்தது.

    இசையில் யாரும் மாற்றம் செய்யச் சொன்னால் எனக்குப் பிடிக்காது. தாறுமாறாக கோபம் வரும். ஒரு காட்சியில் இசையமைத்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து பக்கத்தில் இருந்த அமர், "அண்ணா அந்த இடத்துல கொஞ்சம் இப்படி இருந்தா, அதாவது அடுத்த ஷாட்டில் மிïசிக்கை `ஸ்டார்ட்' பண்ணினா...'' என்று சொல்ல வந்தான்.

    பதிலுக்கு நான், "என்ன... என்ன? என்னடா எந்த இடத்துல?'' என்று வேகமாய் கேட்க, என் கேள்வியின் தோரணை அவனை கொஞ்சம் தயங்க வைத்துவிட்டது.

    அமர் தயங்கியபடி "இல்லே! இப்ப ஸ்டார்ட் பண்ணின ஷாட்டுக்கு அடுத்த ஷாட்டில்...'' என்று நிறுத்த...

    அவன் சொன்னது நல்ல ஐடியாவாகப்பட்டது.

    "இது உன் ஐடியாவா?''

    "இல்ல... பாரதியுடையது!''

    திரும்பிப் பார்த்தேன். என்ஜினீயர் ரூமிற்குப் போகும் கதவருகில் பாரதி நின்றிருந்தார். நான் பாரதியிடம், "ஏன்யா! ஐடியா நல்லாத்தானே இருக்கு. அப்பவே சொல்றதுக்கு என்ன?'' என்று கேட்டேன்.

    "ஒங்கிட்டயா? நானா? சொன்னா சும்மா விட்டுருவியாக்கும்? உனக்கு என்னய்யா மிïசிக் பற்றி தெரியும் என்று இவ்வளவு பேருக்கு முன்னால் கேட்டால் நான் என்ன பண்ணுவேன்! மானம் போயிடாது!'' என்று சொன்னார், பாரதி.

    சிவாஜி - மோகன்லால் நடிப்பில் கடந்த 1997-ல் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று, தற்போது தமிழில் வெளியாக உள்ள ‘பயணத்தின் மொழி’ படத்தின் முன்னோட்டம்.
    1997-ல் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஒரு யாத்ரா மொழி’. இது டிஜிட்டல் மற்றும் நவீன தொழில் நுட்பத்துடன் ‘ பயணத்தின் மொழி’ என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது. ஓம் ஜெயம் தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் இதை மொழி மாற்றம் செய்து டிஜிட்டலில் உருவாக்கி உள்ளனர்.

    இதில் சிவாஜி கணேசன், மோகன்லால், பிரகாஷ் ராஜ், ரஞ்சிதா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - முத்துக்குமார், இசை - இளையராஜா, பாடல்கள் - பெருமாள் முருகன், ‘புதியங்கம்’ முரளி, எடிட்டிங் - பி.லெனின் வி.டி. விஜயன், கதை - பிரியதர்‌ஷன், வசனம் - ‘புதியங்கம்’ முரளி, தயாரிப்பு - ஆர்.தீபக்குமார், திரைக்கதை, இயக்கம் - பிரதாப் போத்தன்.



    கோவிந்தன் தந்தை யார் என்று தெரியாமல் வளர்கிறான். இதனால் சிறுவயதில் அவனை கேலியும், கிண்டலும் செய்கிறார்கள். அவமானப்படுகிறான். எனவே வெகுண்டெழுந்த கோவிந்தன் என்றைக்காவது ஒரு நாள் தனது தந்தையை கண்டுபிடித்து அவரை கொலை செய்யப்போவதாக தாயிடம் கூறுகிறான்.

    இவனுடைய பெரிய தாய்மாமன் மகளான நந்தினி, கோவிந்தனை விரும்புகிறாள். இதற்கு தாய்மாமன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். இந்த சமயத்தில் கோவிந்தன் தன் தந்தையிடமே வேலை செய்யும் சூழல் ஏற்படுகிறது. இறுதியில் இருவருக்கும் உண்மை தெரிந்ததா? என்ன நேர்கிறது? என்பதே படத்தின் கதை.

    நடிகை திரிஷாவுக்கு எதிராக வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
    தமிழ், தெலுங்கு திரையுல கில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர், கடந்த 2010-2011-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், ரூ.89 லட்சம் மட்டுமே கணக்கில் காட்டியிருந்தார். இதை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கவில்லை.

    பின்னர், அவர்கள் நடத்திய ஆய்வில், அடுத்த ஆண்டுகளில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள திரைப் படங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவரது வருமானம் ரூ.3 கோடியே 50 லட்சம் என்று நிர்ணயம் செய்தனர். இதை ஏற்றுக் கொண்ட, நடிகை திரிஷா, ரூ.3.50 கோடிக்கான வருமான கணக்கை தாக்கல் செய்து, வரியையும் செலுத்தினார்.



    ஆனால், உண்மை வருமானத்தை காட்டாமல், மறைத்து பொய்யான வருமான கணக்கை தாக்கல் செய்ததற்காக, நடிகை திரிஷாவுக்கு ரூ.1 கோடியே 11 லட்சம் அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் நடிகை திரிஷா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ‘வருமான வரித்துறை சுட்டிக்காட்டிய வருமானத்தை திரிஷா பின்னர் காண்பித்துள்ளார். அதற்கு வரியும் செலுத்தியுள்ளார்.

    எனவே, அவருக்கு அபராதம் விதித்தது தேவையற்றது என்று கூறி, அந்த அபராதத் தொகையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வருமான வரித்துறை மேல்முறையீடு செய்துள்ளது.



    அதில், ‘திரிஷா தன்னுடைய வருமானத்தின் உண்மை விவரங்களை முதலிலேயே தெரிவிக்கவில்லை. குறைவான வருமானத்தை காட்டி, பொய்யான கணக்கை தாக்கல் செய்துவிட்டார்.

    அதன்பின்னர் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில், அவரது உண்மையான வருமானம் கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது, அந்த தொகைக்கு அவர் கணக்கு காட்டினாலும், அவர் முதலில் உண்மையை மறைத்ததால், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அபராதம் விதிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சட்டப்படியான அதிகாரம் உள்ளது.

    எனவே, தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை தொடர்ந்து தனது அடுத்த இன்னிங்ஸ் குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.
    தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும்படி படங்களை இயக்கும் இயக்குநர்களுள் ஒருவர் வெங்கட் பிரபு. அவரது இயக்கத்தில் கடைசியாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான `சென்னை 600028 இரண்டாவது இன்னிங்ஸ்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    அதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு, `களவு' என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் தனது தயாரிப்பில் ஆர்.கே.நகர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், தனது அடுத்த இன்னிங்ஸ் குறித்த அறிவிப்பையும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெங்கட்பிரபு வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,



    "சமீபத்தில் குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற தொற்று என்னை தாக்கிவிட்டது. ஆர்.டி.குமார் எழுதிய கதை மூலம் முக்கிய சமூக செய்தியை தெரிவிக்க இருக்கிறேன். அதுவும் 15 நிமிடத்திற்கு மிகாமல் படத்தை எடுக்க முடிவெடுத்துள்ளேன். முக்கிய கதாபாத்திரத்தில் சம்பத் நடிக்கும் அந்த படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஸ்ரேயான் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

    விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. உங்களது ஆதரவோடு, இதுவே எனது அடுத்த இன்னிங்ஸாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். வெங்கட் பிரபுவின் குறும்படம் விரைவில்...."

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் ஒருவர் இளம் சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தார்.
    தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இன்ப சேகர் இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

    இமான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், பொன்வண்ணன், பேரரசு, எஸ்.வி.சேகர், ஏ.எல்.விஜய், டி.இமான், பிரபு சாலமன், மனோபாலா, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



    இவ்விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும் போது, சிவகார்த்திகேயனை "இளம் சூப்பர் ஸ்டார்" என அழைத்தார். இயக்குநர் பேரரசு பேசும் போது, சிவகார்த்திகேயனை "மக்கள் ஸ்டார்" என பாராட்டினார்.

    படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது, பட்டம் எல்லாம் நமக்கு தேவையில்லை. சாதாரண மனிதனாக மக்களை மகிழ்வித்தாலே போதும் என்று பேசினார்.

    மேலும் நடிகர் உமாபதி அதிக உயரமாக இருக்கிறார். அவரது உயரத்திற்கு அவர் ஆடும் பாடல் காட்சிகள் ஹிரித்திக் ரோஷனை நியாபகப்படுத்தும்படி இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் சிறப்பாக நடனமாடி இருக்கிறார் என்று டிரெய்லரை பார்க்கும் போதே தெரிகிறது என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். படம் வருகிற 16-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
    மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள `வேலைக்காரன்' படக்குழு இன்னும் 10 நாளில் அடுத்த கட்ட பணியை தொடங்க இருக்கிறது.
    சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

    இதுதவிர பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வில்லனாக மலையான நடிகர் பகத் பாஸில் தமிழில் அறிமுகமாகிறார்.



    சென்னையில் முக்கால்வாசி காட்சிகளை படமாக்கிய படக்குழு, மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து மீண்டும் சென்னை திரும்பியுள்ளது. இன்னமும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருப்பதால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட இருக்கிறது. இதைதொடர்ந்து படம் சரஸ்வதி பூஜை விடுமுறை நாளில் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    ×