உலகம்
அந்தோனி அல்பானீஸ்

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் பதவியேற்பு

Published On 2022-05-23 01:56 GMT   |   Update On 2022-05-23 01:56 GMT
ஜப்பானில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அல்பானீஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்
கான்பெரா:

ஆஸ்திரேலியாவில் பிரதமரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தல் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மாரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோனி ஆல்பானீஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையில் முடிவில் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து புதிய பிரதமராக அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்பட்டார்.  

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் 31வது  பிரதமராக  பொறுப்பேற்றுக் கொண்ட அவர், டோக்கியோவில் நடைபெறும் குவாட் சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தனி விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.

இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள அல்பானிஸ், ஆஸ்திரேலிய மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர். நன்றி ஆஸ்திரேலியா,  ஆஸ்திரேலியாவின் பிரதமராக பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என தெரிவித்தார்.

பிரதமர் என்ற முறையில், மக்களை ஒன்றிணைத்து, கடின உழைப்புடன் சிறப்பான அரசை வழிநடத்த விரும்புகிறேன். அதற்கான பணி இன்று துவங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குவாட் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். 

முன்னதாக டோக்கியோ புறப்படுவதற்கு முன்னர் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரை சந்திக்க ஆவலுடன் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News