உலகம்
மன்சூர் ஹாதி

சவுதி அரேபியாவில் ஏமன் முன்னாள் அதிபருக்கு வீட்டு சிறை

Published On 2022-04-19 03:03 GMT   |   Update On 2022-04-19 03:03 GMT
சவுதி அரேபியா அதிகாரிகள் மன்சூர் ஹாதியின் ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை வெளியிடுவதாக மிரட்டி அவரை பதவி விலக வைத்ததாக கூறப்படுகிறது.
ரியாத் :

ஏமனில் அந்த நாட்டு அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்த சூழலில், இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியா முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், கடந்த 7-ந் தேதி ஏமன் நாட்டின் அதிபர் மன்சூர் ஹாதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, 8 அரசியல் தலைவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட புதிய ஜனாதிபதி கவுன்சிலுக்கு தனது அதிகாரத்தை அவர் ஒப்படைத்தார்.

இந்நிலையில், சவுதி அரேபியா அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே மன்சூர் ஹாதி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ததாகவும், தற்போது அவர் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சவுதி அரேபியா அதிகாரிகள் மன்சூர் ஹாதியின் ஊழல் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை வெளியிடுவதாக மிரட்டி அவரை பதவி விலக வைத்ததாக கூறப்படுகிறது. ராஜினாமாவை அறிவித்தது முதல் மன்சூர் ஹாதி ரியாத்தில் உள்ள அவரது வீட்டில் சிறைவைக்கப்பட்டிருப்பதாகவும், யாருடனும் தொடர்புகொள்ள அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News