செய்திகள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

தேர்தல் பிரசாரத்தின் போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு

Published On 2021-09-08 03:24 GMT   |   Update On 2021-09-08 03:24 GMT
கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
ஒட்டாவா :

கனடாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த மாதம் அறிவித்தார். அதன்படி வருகிற 20-ந் தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடு முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் உத்தரவுகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்களால் ஜஸ்டின் ட்ரூடோவின் தேர்தல் பிரசாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வாரம் ஒண்டாரியோ மாகாணத்தில் ஜஸ்டின் ட்ரூடோ பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், பிரசாரம் நடைபெற இருந்த இடத்தில் போராட்டக்காரர்கள் திரண்டு அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரசாரத்தை ரத்து செய்து விட்டு திரும்பிச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் பிரசாரத்தை முடித்துவிட்டு தனது வேனில் ஏறிய போது அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் கற்களையும், குப்பைகளையும் அவர் மீது வீசினர். அதில் சில கற்கள் ஜஸ்டின் ட்ரூடோவின் தோள்பட்டையில் விழுந்தன.

இதைத் தொடர்ந்து அவரது பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். எனினும் இந்த கல்வீச்சில் அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News