செய்திகள்
மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம்

அமீரக அன்னையர் தினம்: துணை அதிபர் உருக்கமான வீடியோ பதிவு

Published On 2021-03-21 03:05 GMT   |   Update On 2021-03-21 03:05 GMT
அமீரக அன்னையர் தினத்தையொட்டி அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அபுதாபி:

அமீரக அன்னையர் தினம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:- சமூகத்தில் அன்னையரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாகும். அனைத்து அன்னையர்களே.... நீங்களே எங்களது வாழ்க்கையின் அஸ்திவாரம். நீங்கள் இந்த உலகில் எங்கள் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் கருணை ஆகியவற்றை விவரிக்க வார்த்தைகள் ஏதும் இல்லை.

நான் எனது தயார் ஷேக்கா லத்திபா பிந்த் ஹம்தான் பின் ஜாயித் அல் நஹ்யான் உடன் மிகவும் பாசப்பிணைப்புடன் இருந்துள்ளேன். அவரை போல என்மீது அன்பு செலுத்தியவரை இதுவரை கண்டதில்லை. அவரது ஒவ்வொரு வார்த்தைகளையும் நான் நினைவுகூர்ந்து வருகிறேன்.

பொதுமக்கள் பலர் அவரை தேடி வருவதை பார்த்துள்ளேன். அப்போது அவர்களுக்கு தேவையான உதவி உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் அவருக்கு இணை அவரே. அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராகவும், அன்பு செலுத்தக்கூடிய ஒருவராகவும் இருந்து வந்தார். மேலும் அவருக்கு இணையாக யாரையும் பார்த்ததில்லை

கடந்த 1983-ம் ஆண்டு மே மாதம் எனது தாயார் மரணமடைந்தார். எனது கண்கள் முழுவதும் அவர் நிறைந்திருந்தார். எனது தாயும் தந்தையும் 40 ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்தனர். தாயின் பிரிவு எனது தந்தைக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர் மீது அன்பு செலுத்தக்கூடியவராக, ஒரு நல்ல நண்பராக திகழ்ந்து வந்தார். ஒவ்வொரு நாளும் காலை உணவை அவர் இல்லாமல் சாப்பிட்டதில்லை.

அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பலரும், துபாய் நகரின் அன்னையை இழந்த சோகத்தில் கண்ணீர் விட்டனர். அவரது உடலை நல்லடக்கம் செய்யும் போது என்னையறியாமல் நான் கண்ணீர் விட்டேன். வெகுநேரமாகியும் அந்த கண்ணீர் நிற்கவில்லை. இவ்வாறாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

துணை அதிபர் அவரது தாயாரின் இழப்பு குறித்து ‘கிஸ்ஸத்தி’ என்ற நூலில் விவரித்து குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News