செய்திகள்
திமிங்கல வால் சிற்பம் மீது நிற்கும் மெட்ரோ ரெயில்

தண்ணீருக்குள் பாயவிருந்த மெட்ரோ ரெயில் - தாங்கிப்பிடித்த திமிங்கல வால்

Published On 2020-11-03 05:16 GMT   |   Update On 2020-11-03 11:45 GMT
திமிங்கல வால் சிற்பத்தால் மெட்ரோ ரெயில் விபத்தில் இருந்து தப்பித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அம்ஸ்டர்டாம்:

நெதர்லாந்து நாட்டின் ரோட்ரடாம் மாகாணத்தின் பிஜ்ஹென்சி நகரில் டி அக்கர்ஸ் என்ற பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நகரின் உள்ள முக்கிய பகுதிகளுடன் இணைக்கும் மெட்ரோ ரெயில் பயணத்தின் இறுதி நிறுத்தமாக டி அக்கரஸ் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. 

நீர் பரப்பிற்கு மேலே அமைந்துள்ள இந்த மெட்ரோ நிலையத்தில் உள்ள ரெயில்பாதையில் முடிவில் திமிங்கலத்தின் வால் போன்று இரண்டு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திமிங்கல வால் அலங்கார வளைவுகள் பிளாஸ்டிக்கால் 2002 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டவை.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வழக்கமாக பயணம் முடிவடையும் டி அக்கரஸ் நிலையத்திற்கு மெட்ரோ ரெயில் வந்தது. அந்த ரெயிலில் பயணிகள் யாரும் இல்லை. 

ரெயிலின் டிரைவர் வழக்கத்தை விட சற்று வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மெட்ரோ ரெயில் தண்டவாளத்தை தாண்டி வேகமாக சென்றது. ரெயில் நிலையம் நீர் பரப்பிற்கு மேலே அமைந்திருப்பதால் மெட்ரோ ரெயில் தண்டவாளத்தை தாண்டி சென்று கீழே இருக்கும் தண்ணீருக்குள் விழுந்து விடும் என்ற டிரைவருக்கு அச்சம் ஏற்பட்டது.

ஆனால், ஆச்சரியமளிக்கும் வகையில் தண்டவாளத்தை தாண்டி சென்ற மெட்ரோ ரெயில் அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார திமிங்கலத்தின் வால் மீது பாய்ந்து அந்தரத்தில் நின்றது. 



பிளாஸ்டிக்கால் அமைக்கப்பட்டிருந்த அந்த திமிங்கல வால் மெட்ரோ ரெயில் பெட்டிகளை தாங்கிப்பிடித்தவாறு அந்தரத்தில் அசராது நின்றது. உடனடியாக, அங்குவந்த ரெயில் நிலைய அதிகாரிகள் மெட்ரோ ரெயில் டிரைவரை சிறுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், அந்தரத்தில் திமிங்கல வாலின் உதவியுடன் நின்று கொண்டிருக்கும் மெட்ரோ ரெயிலை மீட்கும் நடவடிக்கையில் மெட்ரோ ரெயில் நிர்வாகமும், மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், மெட்ரோ ரெயில் திமிங்கல வால் உதவியுடன் நிற்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.    
Tags:    

Similar News