செய்திகள்
துருக்கி அதிபர் எர்டோகன்

அர்மீனியாவுக்கு எதிரான போரில் அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா, லிபிய கிளர்ச்சியாளர்களை களமிறக்கியது துருக்கி

Published On 2020-10-01 00:25 GMT   |   Update On 2020-10-01 00:25 GMT
அர்மீனியாவுக்கு எதிரான போரில் சிரியா, லிபிய நாட்டின் கிளர்ச்சியாளர்களை அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி களமிறக்கியுள்ளது.
யெரிவன்: 

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. 

அசர்பைஜானில் அமைந்திருந்த இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கலே ஆகும். 1994-ம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

மேலும், இந்த நகோர்னோ-கராபத் மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. அன்றிலிருந்து நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாகக்கொண்டு அர்மீனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது.

இதற்கிடையில், பல நாட்களாக அமைதியாக இருந்த இந்த நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் மோதல் வெடித்தது. 

நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படைகளை முதலில் தாக்கிய அசர்பைஜான் ராணுவம் பின்னர் தனது தாக்குதலை அர்மீனிய ராணுவம் பக்கம் திருப்பியது. இதனால், அர்மீனியா-அசர்பைஜான் இடையே போர் மூண்டுள்ளது. இந்த போரில் தற்போதுவரை 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு துருக்கி தனது நேரடி ஆதரவை அளித்து வருகிறது. பாகிஸ்தானும் அசர்பைஜானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவருகிறது. 

ஆனால், அர்மீனியாவுக்கு ரஷியா ஆதரவு அளித்தபோது அது நேரடியாக தற்போதுவரை களத்தில் இறங்கவில்லை. இரு நாடுகளும் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்யவேண்டும் என ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால், ரஷியாவின் கோரிக்கையை இரு நாடுகளும் நிராகரித்து தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கிடையில், இந்த சண்டையில் அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா, லிபியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

சிரியாவின் இட்லிப், அலிப்போ உள்ளிட்ட மாகாணங்களின் நப்ரின், அல்-அப், ஜர்ப்லஸ், ரஜோ, டெல் அப்யாட், ரஷ் அல்-யன் போன்ற நகரங்களை துருக்கி ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின்கீழ் வைத்துள்ளது. 

இங்கு துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் சிரிய படையினருக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதில், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளும் உள்ளனர்.

அதேபோல், கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபரான கடாபியின் ஆதரவாளரான கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் அந்நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். 

இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசுப் படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். சர்வதேச அங்கீகாரம் பெற்ற லிபிய அரசுப்படையினருக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது. மேலும், அரசுப்படையினருக்கு ஆதரவாகவும் கலிபா கப்தார் படையினருக்கு எதிராகவும் லிபியாவில் துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், அர்மீனியா-அசர்பைஜான் போரையடுத்து, சிரியா மற்றும் லிபியாவில் உள்ள தனது ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியுள்ளது. 

நூற்றுக்கணக்கான சிரியா மற்றும் லிபிய கிளர்ச்சியாளர்களை துருக்கி விமானம் மூலம் அசர்பைஜானுக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அசர்பைஜானுக்கு ஆதரவாகவும், அர்மீனியாவுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகின்றனர்.

சிரியா, லிபிய கிளர்ச்சியாளர்கள் அர்மீனியாவுக்கு எதிராக களமிறக்கியுள்ளதற்கு ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

மேலும், அர்மீனிய- அசர்பைஜான் போரில் வேறுநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை களமிறக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கிக்கு ரஷியா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், பிரான்சும் துருக்கியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அர்மீனியா-அசர்பைஜான் இடையே அமைதியை ஏற்படுத்த 1992-ம் ஆண்டு ஒஎஸ்சிஇ மின்ஸ்க் குழு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவர்களாக அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.

தற்போது அர்மீனிய-அசர்பைஜான் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த அமைதிக்குழு போரை முடிவுக்குக்கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

ஆனால், இரு நாடுகளும் போரில் ஈடுபடுவதில் தீவிரம் காட்டுகிறது. குறிப்பாக துருக்கியின் ஆதிக்கம் போரில் அதிகரித்து வருவதால் ரஷியா தனது படைகளை அர்மீனியாவுக்கு ஆதரவாக எந்நேரமும் களமிறக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News