செய்திகள்
டேங்கர் லாரி வெடித்து விபத்து

நைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்து - 25 பேர் பலி

Published On 2020-09-24 22:44 GMT   |   Update On 2020-09-24 22:44 GMT
நைஜீரியா நாட்டில் டேங்கர் லாரி வெடித்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 25 பேர் சிக்கி கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அபுஜா:

நைஜீரியா நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள லோகோஜா நகரத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் பிற வாகனங்கள் மீது மோதி வெடித்து தீப்பிடித்தது. இந்த தீ பிற வாகனங்களுக்கும் பரவியது. இதன் காரணமாக அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்து கொண்டது. இந்த கோர விபத்தில் குறைந்தது 25 பேர் சிக்கி கருகி பரிதாபமாக உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பலியானவர்களில் ஆரம்பப்பள்ளி ஒன்றின் மாணவர்களும் அடங்குவர்.

இந்த விபத்துக்கு காரணம், டேங்கர் லாரியின் பிரேக்குகள் இயங்காமல்போனதுதான் என தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் அந்த நாட்டில் இத்தகைய விபத்துக்கள் இயல்பானவைதான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோர விபத்து குறித்து லோகோஜா நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “இந்த விபத்தில் பலர் அடையாளம் காணமுடியாதபடிக்கு எரிந்து கரிக்கட்டைகளாகி விட்டனர். அவர்களில் பெரும்பாலோர் சாலைக்கு மறுபுறம் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றவர்கள். இதே போன்று ஒரு காரில் பயணம் செய்தவர்களும் காருக்குள்ளேயே எரிந்து கரிக்கட்டைகளாகினர்” என குறிப்பிட்டார்.

இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.
Tags:    

Similar News