செய்திகள்
கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்டு உடல்

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு உடல் அடக்கம்- கண்ணீர்மல்க விடை கொடுத்த மக்கள்

Published On 2020-06-10 09:08 GMT   |   Update On 2020-06-10 09:08 GMT
அமெரிக்காவில் போலீஸ் பிடியில் கொல்லப்பட்ட கருப்பினர் ஜார்ஜ் பிளாய்டு உடல், பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் உள்ள கடை ஒன்றில் கடந்த மாதம் 25 ஆம் தேதி, ஒருவர் 20 டாலர் கள்ள நோட்டை கொடுத்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கள்ள நோட்டை கொடுத்ததாக சொல்லப்படும் கருப்பினரான ஜார்ஜ் பிளாய்டை அவரது காரில் இருந்து இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அதற்கு ஜார்ஜ் மறுத்த நிலையில் அவரை காரில் இருந்து வெளியே இழுத்த காவலர்கள், முரட்டுத்தனமாக கீழே தள்ளினர்.

பின்னர், ஒரு போலீஸ் அதிகாரி ஜார்ஜின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தி, அவர் எழுந்திருக்க முடியாமல் செய்கிறார். குரல்வளை நெரிக்கப்பட்டதால் ‘மூச்சுவிட முடியவில்லை’ என்று கதறினார் ஜார்ஜ். ஆனால் அவரது அலறலை பொருட்படுத்தாத அந்த அதிகாரி, தொடர்ந்து கழுத்தை நெரிக்க, சிறிது நேரத்தில்  ஜார்ஜின் உயிர் பிரிந்தது.



இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது அங்கிருந்த 17 வயது இளம்பெண், தான் எடுத்த வீடியோவை வெளியிட, அந்த வீடியோ வைரலாக பரவியதுடன், இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்கு வழிவகுத்தது. ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதிகேட்டும், போலீஸ் சீர்திருத்தம் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

பிற நாடுகளிலும் இந்த போராட்டம் விரிவடைந்தது. லண்டன், பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரண்ட மக்கள் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். கொரோனா அச்சுறுத்தல் இருந்த போதும் 13 நாட்களாக இந்தப் போராட்டம் தொடர்கிறது.



இந்நிலையில் ஜார்ஜ் பிளாய்டின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்றது.

தேவாலய பிரார்த்தனைக்கு பிறகு, அங்கிருந்து ஜார்ஜ் பிளாய்டு உடல், குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.



இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலானோர் முக கவசம் அணிந்திருந்தனர். பலர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலம் செல்லும் சாலையின் ஓரத்தில் சிலர் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலம் பியர்லேண்ட் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நிறைவடைந்தது. அங்கு ஜார்ஜ் பிளாய்டின் உடல், அவரது தாயாரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது கண்ணீர்மல்க ஜார்ஜ் பிளாய்டுக்கு மக்கள் விடை கொடுத்தனர்.
Tags:    

Similar News