செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள உறவினர்கள் குறித்து விசாரிக்கும் மக்கள்.

ஹோண்டுராஸ் நாட்டு சிறைச்சாலையில் கைதிகள் மோதல்- 18 பேர் பலி

Published On 2019-12-23 09:29 GMT   |   Update On 2019-12-23 09:29 GMT
ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 18 பேர் உயிரிழந்தனர்.
டெகுசிகல்பா:

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ்  நாட்டு தலைநகர் டெகுசிகல்பா நகரில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள எல் பொர்வெனிர் நகரில் ஒரு சிறைச்சாலை அமைந்துள்ளது.

இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, முக்கியமாக போதைப்பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்த சிறைச்சாலையில் நேற்று இரு தரப்பு கைதிகளுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் 18 கைதிகள் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் அங்கே விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹோண்டுராஸ் நாட்டில் வறுமை, ஊழல் போன்றவை தலைவிரித்தாடுகின்றன. அதன் காரணமாகவும், போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற சில குற்றச் சம்பவங்களினாலும் அங்குள்ள சிறைச்சாலைகள் கைதிகளால் நிரம்பி வழிகின்றன. 

இந்நாட்டின் டெலா நகரில் உள்ள சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் 18 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News