செய்திகள்
ஜி ஜின்பிங் - பித்யா தேவி பண்டாரி

நேபாளம் சென்ற ஜி ஜின்பிங்-ஐ அதிபர் பித்யா தேவி பண்டாரி வரவேற்றார்

Published On 2019-10-12 13:49 GMT   |   Update On 2019-10-12 13:49 GMT
இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நேபாளம் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.
காத்மாண்டு:

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாடுகள் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசினர். பின்னர், சென்னையில் இருந்து சீன அதிபர் தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் நேபாளம் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

இன்று மாலை நேபாளம் சென்றடைந்த  சீன அதிபர் ஜி ஜின்பிங்-ஐ நேபாளம் நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி காத்மாண்டு விமான நிலையத்தில் வரவேற்றார்.



அங்கு சிகப்பு கம்பளத்துடன் கூடிய வரவேற்பின்போது முப்படையினரின் அணிவகுப்பை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.

நேபாளம் அதிபர் பித்யா தேவி பண்டாரி மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோரை சந்திக்கும் ஜி ஜின்பிங் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் மற்றும் நேபாளத்துக்கு இடையில் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லைப்பகுதியில் திபெத் விடுதலைக்காக போராடிவரும் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.

இவர்களில் சிலரை சீனாவுக்கு நாடு கடத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News