செய்திகள்
டிரம்ப் - கிம் ஜாங் அன்

கிம் ஜாங் அன் உடன் திடீர் சந்திப்பு - கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார் டிரம்ப்

Published On 2019-06-30 08:21 GMT   |   Update On 2019-06-30 08:21 GMT
ஜி20 மாநாடு முடிந்து அமெரிக்கா திரும்பிய டொனால்ட் டிரம்ப் வழியில் இன்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-ஐ திடீரென சந்தித்து, கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
சியோல்:

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவுநாளான நேற்று வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-ஐ சந்தித்து ‘ஹலோ’ சொல்ல விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய வடகொரியா அரசு இந்த யோசனை வரவேற்கத்தக்கது என தெரிவித்தது.

இதைதொடர்ந்து, டிரம்ப்-கிம் இடையில் ஒரு அவசர சந்திப்புக்கு தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், முன்னர் தென்கொரியா-வடகொரியா போருக்கு பின்னர் சமாதானப் பகுதியாக அறிவிக்கப்பட்ட  பன்முன்ஜோம் நகரில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் - டிரம்ப் ஆகியோர் சந்தித்தனர்.



இருவரும் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்த சந்திப்பின்போது தென்கொரியா அதிபர் மூன் ஜே இன் உடனிருந்தார். வடகொரியா எல்லைக்குள் அமெரிக்க அதிபர் முதன்முதலாக கால் பதிப்பதால் இந்த சந்திப்பை செய்தியாக்க ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் அங்கு குவிந்திருந்தனர்.

‘இந்தநாள் உலகத்துக்கு மிகவும் உன்னதமான நாள். இங்கு வந்திருப்பதை கவுரவமாக கருதுகிறேன். மிக உயர்வான விஷயங்கள் நடைபெறுகின்றன’ என இந்த சந்திப்பை டிரம்ப் வர்ணித்தார்.

இதற்கு முன்னர் சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் தலைநகர் ஹனாய் ஆகிய இடங்களில்  கிம் ஜாங் அன் - டிரம்ப் சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம்.

Tags:    

Similar News