செய்திகள்

இலங்கை தொடர்பு குண்டுவெடிப்பு - விசாரணை குழு அமைப்பு

Published On 2019-04-22 09:38 GMT   |   Update On 2019-04-22 11:19 GMT
இலங்கையில் 290 உயிர்களை பறித்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார். #SriLankaPresident #SriLankablasts #SriLankaEasterattacks
கொழும்பு:

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதுவரை யாரும் பொறுப்பேற்காத இந்த தாக்குதல்களில் 5 இந்தியர்கள் உள்பட 290 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கொடூர தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் 24 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, தொடர் குண்டுவெடிப்புகள் தொடர்பான தகவல் அறிந்ததும் சுற்றுப்பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு  இன்று காலை கொழும்பு திரும்பினார்.



நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி விஜித் மலால்கோடா தலைமையில் முன்னாள் போலீஸ் ஐ.ஜி. என்.கே.இலங்கக்கூன், சட்டம்-ஒழுங்கு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜெயமன்னே ஆகியோரை கொண்ட சிறப்பு குழுவை  அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.

இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்றைய தாக்குதல்கள் உள்நாட்டினரால் நடத்தப்பட்டதாக இலங்கை மந்திரி ரஜிதா சேனரத்னே இன்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற தாக்குதல் நடக்கலாம் என இலங்கை அரசின் உளவுத்துறை கடந்த 11-ம் தேதி காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கிவரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். #SriLankaPresident #SriLankablasts #SriLankaEasterattacks
Tags:    

Similar News