செய்திகள்

‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த கோரிக்கை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

Published On 2019-04-04 19:34 GMT   |   Update On 2019-04-04 19:34 GMT
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. #Brexit #TheresaMay
லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடந்தது.

இதில் பெருவாரியான மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் 2019-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தம் அனைத்து தரப்பினரின் ஆதரவை பெற தவறியதால் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கை சிக்கலானது.

இந்த ஒப்பந்தம் மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 2 முறை ஓட்டெடுப்பு நடந்தபோதும் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அத்துடன் ஒப்பந்தம் இல்லா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்தையும் 2 முறை இங்கிலாந்து எம்.பி.க்கள் நிராகரித்ததால், ‘பிரெக்ஸிட்’டை தாமதப்படுத்த வேண்டிய சூழல் உருவானது.

இதுதொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் தெரசா மே பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற ஏப்ரல் 12-ந் தேதி வரையும், ஒப்பந்தத்துடன் வெளியேற மே மாதம் 22-ந் தேதி வரையும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை 3-வது முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரசா மே ஓட்டெடுப்புக்கு விட்டார். ஆனால் வழக்கம் போல் எம்.பி.க்கள் அந்த ஒப்பந்தத்தை மீண்டும் நிராகரித்து விட்டனர்.

இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் சூழல் உள்ளது.

இதனை தவிர்க்கும் விதமாக ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேலும் தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் எதிர்க்கட்சியினர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

அதன் மீது உடனடியாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 313 ஓட்டுகளும், எதிராக 312 ஓட்டுகளும் கிடைத்தன. ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து அந்த தீர்மானம் மேல்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இந்த தீர்மானம் நிறைவேறிவிட்டால் ஐரோப்பிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘பிரெக்ஸிட்’டை மேலும் தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தெரசா மே தள்ளப்படுவார். #Brexit #TheresaMay
Tags:    

Similar News