செய்திகள்

இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை - தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தல்

Published On 2019-03-24 05:23 GMT   |   Update On 2019-03-24 05:23 GMT
இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. #TamilNationalAlliance #srilankawarcrimes
கொழும்பு:

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009–ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் மாயமாகினர். இந்த போரின்போது இலங்கை ராணுவம் கடுமையான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கடந்த 2015–ம் ஆண்டு அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் இது தொடர்பாக தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதில் இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை வெளியுறவு மந்திரி திலக் மரப்பனா, இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை நடத்த அரசியல்சாசன தடை உள்ளது என்று கூறினார். ஆனால் வெளிநாட்டு நீதிபதிகள் மூலம்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது.

இது குறித்து கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுமந்திரன் கூறுகையில், ‘இலங்கை போர்க்குற்றத்தை விசாரிக்க முற்றிலும் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் வேண்டும். இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு நாங்கள் எடுத்து செல்வோம். இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தவே 2015–ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’ என்று தெரிவித்தார். #TamilNationalAlliance  #srilankawarcrimes
Tags:    

Similar News