செய்திகள்

கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பர்வேஸ் முஷாரப்

Published On 2018-06-22 09:03 GMT   |   Update On 2018-06-22 09:03 GMT
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். #MusharrafResigns #APML
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னாள் அதிபரும் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (ஏ.பி.எம்.எல்.) தலைவருமான  பர்வேஸ் முஷாரப்புக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வெளிநாட்டில் இருக்கும் அவர் கோர்ட்டில் ஆஜராகாததால், போட்டியிடுவதற்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றது. இதையடுத்து, முஷாரப்பின் வேட்பு மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முஷாரப் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை தோதல் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளார். வெளிநாட்டில் இருந்துகொண்டு கட்சியை வழிநடத்துவது சாத்தியம் இல்லை என்பதால் அவர் ராஜினாமா செய்திருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் முகமது அம்ஜத் தெரிவித்துள்ளார்.



மேலும், கட்சியின் புதிய தலைவராக தன்னை முஷாரப் நியமித்திருப்பதாகவும் முகமது அம்ஜத் தெரிவித்துள்ளார். தலைவர் பதவியை முஷாரப் ராஜினாமா செய்தாலும், உயர் அதிகாரம் கொண்ட தலைவராக நீடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.  #MusharrafResigns #APML

Tags:    

Similar News