செய்திகள்

ராணுவ புரட்சிக்கு பின்னர் முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ராபர்ட் முகாபே பங்கேற்றார்

Published On 2017-11-17 11:18 GMT   |   Update On 2017-11-17 11:18 GMT
ஜிம்பாப்வே நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றிய பின்னர் முதன்முறையாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று ராபர்ட் முகாபே பங்கேற்றார்.
ஹராரே:

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டின் அதிபரான ராபர்ட் முகாபே(93) கடந்த 37 ஆண்டுகளாக இந்த பதவியில் நீடித்து வந்தார். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் நேற்று முன்தினம் ஜிம்பாப்வேயில் திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது.

தலைநகர் ஹராரேயில் களம் இறங்கிய ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தது. அதிபர் ராபர்ட் முகாபே கைது செய்யப்பட்டு வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, முகாபேவுக்கும் ராணுவத்துக்கும் இடையே சமரச பேச்சு வார்த்தையில் மூத்த கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் அண்டை நாடான தென் ஆப்பிரிக்காவின் தூதர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரம் பறிக்கப்பட்ட ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே விரைவில் நாடு கடத்தப்படுவார். அவரது மனைவி மற்றும் ஊழல் செய்த முக்கிய மந்திரிகள், உயரதிகாரிகள் கைதாவார்கள் என தெரியவந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமான பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ராணுவ வட்டாரங்களை சுட்டிக்காட்டி ஜிம்பாப்வே அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு பின்னர் முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் இன்று ராபர்ட் முகாபே பங்கேற்றார்.

ஹராரே நகரின் புறநகர் பகுதியில் இன்று நடைபெற்ற ஜிம்பாப்வே திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பட்டமளிப்பு விழாவுக்கான சீருடையுடன் கலந்துகொண்ட ராபர்ட் முகாபே, விழா மேடையில் இசைக்கப்பட்ட ஜிம்பாப்வே நாட்டுப் பண்ணுக்கு மரியாதை செலுத்திய பின்னர், பட்டமளிப்பு விழா தொடங்குவதாக அறிவித்தபோது, அரங்கில் கூடி இருந்தவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
Tags:    

Similar News