செய்திகள்

பாக்டீரியாவை அனுப்பி செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன்: நாசா புதிய திட்டம்

Published On 2017-08-21 05:01 GMT   |   Update On 2017-08-21 05:01 GMT
உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

நியூயார்க்:

செவ்வாய் கிரகத்தில் ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் மூலம் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் அங்கு காலனி அமைத்து மனிதர்களை குடியமர்த்த போவதாக தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கனடா வாழ் அமெரிக்கரான வர்த்தகர் எல்கான் முஸ்க் செவ்வாய் கிரகத்தில் காலனி அமைக்க போவதாக அறிவித்துள்ளார். அதற்காக ஒரு நபருக்கு ரூ.65 ஆயிரம் கோடி (10 மில்லியன் டாலர்) கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பொதுவாக உயிரினங்கள் வாழ ஆக்சிஜன் தேவை. பூமியின் வழி மண்டலத்தில் 78 சதவீதம் நைட்ரஜன், 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் குறைந்த அளவில் கார் பன்டை ஆக்சைடு உள்ளிட்டவைகள் உள்ளன.

ஆனால் செவ்வாய் கிரக வழி மண்டலத்தில் 0.13 சதவீதம் மட்டுமே ஆக்சிஜன் உள்ளது. அதே நேரத்தில் 95 சதவீதம் கார்பன்டை ஆக்சைடு மற்றும் மிக குறைந்த அளவில் நைட்ரஜன் உள்ளிட்டவைகள் உள்ளன.

எனவே உயிரினங்கள் வாழ மிகவும் அவசியமான ஆக்சிஜனை செவ்வாய் கிரகத்தில் உருவாக்க ‘நாசா’ மையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு பாசி இனங்கள் அல்லது பாக்டீரியாவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

2020-ம் ஆண்டில் அமெரிக்காவின் நாசா மையம் செவ்வாய் கிரகத்துக்கு புதிதாக ஒரு விண்கலம் அனுப்புகிறது. அத்துடன் பாக்டீரியா அல்லது பாசி இனங்கள் அனுப்பப்படுகின்றன. அங்கு இவை ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தகவலை ‘நாசா’ வின் தலைமை நிர்வாகி ராபர்ட் லைட்புட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அங்கிருந்து ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்ப எரிபொருளாகவும் பயன்படும் என தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் மூலம் இத்திட்டம் சாத்தியமாகுமா? என்ற கோணத்திலும் ஆய்வு மேற் கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

Tags:    

Similar News