செய்திகள்

வெனிசுலாவில் தொடரும் அரசியல் குழப்பம்: ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் பலி

Published On 2017-08-07 03:47 GMT   |   Update On 2017-08-07 03:47 GMT
வெனிசுலா நாட்டில் அதிபருக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் போராட்டத்தில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கராகஸ்:

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதற்காக அதிபர் நிக்கோலஸ் மதுரோ முடிவு செய்திருந்த நிலையில், இதற்கான அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களை நியமிப்பதற்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

ஆனால், அதிபர் நிக்கோலஸின் இந்த முடிவுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் வடமேற்கு பகுதியான வாலென்சியாவில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்று ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அரசுத் தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக பல பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் அதிபரின் முடிவை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வந்த போராட்டத்தில் இதுவரை 121 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News