செய்திகள் (Tamil News)

பனாமா கேட் ஊழல்: விசாரணைக்கு எதிரான நவாஸ் ஷெரீப் மகனின் மனு தள்ளுபடி

Published On 2017-05-29 22:59 GMT   |   Update On 2017-05-29 22:59 GMT
பனாமா கேட் ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை பிடியில் இருந்து தப்பிக்க பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் நவாஸ் ஷெரீப் மகன் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இஸ்லாமாபாத்:

பனாமா கேட் ஊழல் வழக்கில் இரு இரண்டு உறுப்பினர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நவாஸ் ஷெரிப்பின் மகன் உசேன் நவாஸ் சுப்ரீம் கோர்டில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த இஜாஸ் அப்சல்கான் தலைமையிலான மூன்று பேர் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் வரிஏய்ப்பு செய்வதற்காக பல்வேறு நாடுகளில் ரகசிய முதலீடுகள் செய்திருப்பதாகவும், வங்கிகளில் ரகசியமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆவணங்கள் வெளியிட்டது.

‘பனாமா கேட்’ என அழைக்கப்படுகிற இந்த ஊழலில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் பலன் அடைந்திருப்பதாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கலானது. பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான், வக்கீல் தாரிக் ஆசாத், ஜமாத் இ இஸ்லாமி (ஜி) தலைவர் சிராஜூல் ஹக், அவாமி முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் ரஷீத் அகமது ஆகியோர் தொடுத்த வழக்கை நீதிபதிகள் ஆசிப் சயீத் கோசா, குல்சார் அகமது, இஜாஸ் அப்சல்கான், அஜ்மத் சயீத், இஜாஜூல் அசன் விசாரித்தனர். விசாரணை முடிவில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு புலனாய்வுக்குழுவின் 2 உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நவாஸ் ஷெரீப்பின் மகன்களில் ஒருவரான உசேன் நவாஸ், சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டிருந்தார். இந்த முறையீட்டின் மீது நேற்று நடந்த விசாரணையில் உசேன் நவாஸின் மனுவை தள்ளுபடி செய்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
Tags:    

Similar News