செய்திகள்

மேற்கு மொசூல் அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து 4 கிராமங்கள் மீட்பு

Published On 2017-05-22 01:20 GMT   |   Update On 2017-05-22 01:21 GMT
மேற்கு மொசூல் நகர் அருகே கைரவான் பகுதியில் 4 கிராமங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் படைகள் மீட்டது.
மொசூல்:

கிழக்கு மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து ஈராக் படைகள் கடந்த ஜனவரி மாதம் மீட்டு விட்டன. மேற்கு மொசூல் நகரையும் தங்கள் வசப்படுத்துவதற்காக ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் ஈராக் படைகள் பிப்ரவரி மாதம் முதல் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில் மேற்கு மொசூல் நகர் அருகே கைரவான் பகுதியில் 4 கிராமங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் படைகள் மீட்டு விட்டன. கைரவான் பகுதி டல் அபார் நகரையும், சிரிய எல்லைகளையும் இணைக்கிற பகுதி ஆகும்.

கைரவான் பகுதியில் 4 கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வினியோக பாதைகள் தடை செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கையின்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தரப்பில் பெருத்த உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஈராக் ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா ரசூல், “மேற்கு மொசூலைப் பொறுத்தமட்டில் 89.5 சதவீத பகுதிகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டு விட்டன. சில மாவட்டங்கள் மட்டுமே எதிரிகள் வசம் உள்ளன” என கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News