செய்திகள்

சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் - நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Published On 2017-04-26 22:49 GMT   |   Update On 2017-04-26 22:49 GMT
முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பீஜிங்:

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட சீனாவின் புதிய விமானம்தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

உலகளவில் சீனாவின் படை பலம் அபாரமானது. ஆண்டுதோறும் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதன்மூலம் ஆயுதக்குவிப்பிலும் ஈடுபட்டுள்ளது.

சீனாவிடம் ‘சி.என்.எஸ். லயனிங்’ என்ற விமானம்தாங்கி போர்க்கப்பல் மட்டும் இருந்து வந்தது. அதுவும் கூட மிகப்பழையது. 25 ஆண்டுகளுக்கு முந்தையது. பழைய சோவித் ஆட்சிக்காலத்தில் வாங்கப்பட்டதாகும்.

இந்த நிலையில் முற்றிலும் உள்நாட்டில் ஒரு புதிய விமானம்தாங்கி போர்க்கப்பலை சீனா ரகசியமாக கட்டிவந்தது. இந்தப் பணிகள் அங்கு லயனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் துறைமுகத்தில் உள்ள கப்பல் கட்டும் துறையில் நடந்து வந்தது. அதன் பணிகள் முடிந்து விட்டன.

முறைப்படி நேற்று அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதன்மூலம் சீனாவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விமானம்தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில், மத்திய ராணுவ ஆணையத்தின் துணைத்தலைவர் பான் சாங்லாங் கலந்துகொண்டார். அவரது பங்கேற்பு, இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலில் சீன தலைமை கொண்டுள்ள ஈடுபாட்டை காட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விமானம்தாங்கி போர்க்கப்பலின் பெயர் என்ன, அதன் உடல் குறியீடு என்ன என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்த விவரங்கள் பொதுவாக கடற்படையில் இந்த கப்பலை சேர்க்கிறபோதுதான் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இந்த போர்க்கப்பலின் சிறப்பம்சங்கள் வருமாறு:-

* முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டப்பட்டதாகும். 001ஏ- வகுப்பை சேர்ந்தது.

* இது ஜே-15 ரக போர் விமானங்கள் உள்ளிட்ட விமானங்களை சுமந்து செல்லும்.

* இதன் நீளம் 302 மீட்டர். அகலம் 70.5 மீட்டர். எடை 50 ஆயிரம் டன்.

* இது 10 தளங்களை கொண்டதாகும்.

* இதன் சிப்பந்திகள் எண்ணிக்கை 1000.

* சீனா இதுவரை கட்டிய கப்பல்களில் மிகப்பெரியது, நவீனமானது இதுதான்.

வடகொரியாவின் அணு ஆயுத மிரட்டலால் கொரிய தீபகற்ப பகுதியில் போர்ப்பதற்றம் நிலவி வருகிற நிலையில், அங்கு அமெரிக்கா தனது காரல் வின்சன் கப்பல் படை அணியை அனுப்பி வைத்துள்ள சூழலில், சீனா தனது புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News